ஜாதிக்கு எதிராக பல இடங்களில் தனது கருத்தை கூறும் கதாநாயகன் ஜாதி தலைவர் ஒருவரிடம் அவர் தொண்டர்கள் முன்னிலையில் பேசும் போது ஒரே ஜாதியாக இருந்தாலும்
அவர் பணக்காரன் நீங்கள் ஏழை என்பதை புரிந்து கொள்ளுங்கள் என வர்க்க பேதத்தை அவர்களிடம் எடுத்து கூறுவார்.பார்ப்பனிய சித்தாந்தம் வேறூன்றி வர்ணாசிரம ஜாதி அமைப்பு நடைமுறையில் இருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் ஜாதி ஒழிப்பு,சமூகத்தில் சமத்துவம் என்பது தான் பிராதனம். வர்க்க பேதமும் ஒழிய வேண்டும் தான் என்றாலும் ஜாதி ஒழிப்பை பேசும் போது வர்க்க பேதத்தை முன்னிலைப்படுத்தினால் அது ஜாதி ஒழிப்பு பிரச்சாரத்தை நீர்த்து போக செய்து விடும்.அப்படி இருக்கையில் ஜாதி ஒழிப்பை பேசும் போது இத்தகைய கருத்தை வைக்காமல் இருந்திருக்கலாம்.
ஜாதிய உணர்வை வெளிப்படுத்தும் விதமாகவும் ஜாதியை எதிர்த்தும் நீண்டகாலமாகவே தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.அதிலும் சில ஆண்டுகளாகவே ஜாதியத்திற்கு எதிரான படங்கள் அதிக அளவில் வெளி வந்து கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் தற்போது வெளி வந்திருக்கும் திரைப்படம் நாடோடிகள் 2.
2009 ஆம் ஆண்டு வெளியான நாடோடிகள் திரைப்படம் காதல்,நட்பு ஆகியவற்றை பிரதானமாகவும் ஜாதியை மறைமுகமாகவும் வைத்து வெளியானது.தற்போது வெளியாகியுள்ள நாடோடிகள் 2 திரைப்படம் ஜாதி ஆணவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. சமூகத்திற்காக போராடக்கூடிய நாயகன் சசிக்குமாருக்கு திருமணம் செய்ய பெண் யாரும் தராத நிலையில் ஒரு குடும்பம் அவருக்கு பெண் கொடுக்கிறார்கள்.ஆனால் அந்த பெண் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த வேறு ஒருவரை காதலித்து வருவது திருமணத்திற்கு பின் நாயகனுக்கு தெரிய வர தான் தாலி கட்டிய பெண்ணை அவள் விரும்பியவரோடு சேர்த்து வைக்கிறார் நாயகன்.அதை விரும்பாத பெண் வீட்டார் மகளையும் அவள் திருமணம் செய்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரையும் ஆணவப்படுகொலை செய்ய திட்டமிடுகிறார்கள்.அவர்களை சசிக்குமாரும் அவருடைய நண்பர்களும் காப்பாற்றுகிறார்களா என்பதே கதை.படத்தின் நாயகியான அஞ்சலியும் சசிக்குமாருடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் கலந்து கொள்பவர்.சசிக்குமாருக்கு பல வகைகளில் ஆலோசனைகளும் வழங்குகிறார்.
கதாநாயகி போராட்டக்களத்தில் இருக்கும் போது அவர் கூறும் முழக்கங்களும் அவரின் அசைவுகளும் அருவருக்கத்தக்க வகையில் உள்ளது.ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மெரினாவில் விளம்பரத்திற்காக போராடிய இளம்பெண் ஒருவரை அடையாளம் காட்டும் விதமாக நாயகியின் போராட்டத்தை காட்டியிருக்க கூடாது.தமிழ்நாட்டில் உண்மையாக சமூகத்திற்காக போராடக்கூடிய எத்தனையோ பெண் போராளிகள் இருக்கும் போது அவர்கள் எல்லாம் சமுத்திரக்கனியின் நினைவுக்கு வராதது வேதனை.
அடுத்ததாக கதாநாயகியின் தந்தை முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர்.இன்றும் உளவுத்துறை கண்காணிப்பில் இருப்பவர் அவர் பெயர் தமிழரசன்.இதன் மூலம் அரியலூர் தமிழரசனை நினைவு கூறுகிறார் இயக்குனர்.ஆனால் தமிழரசனை இன்றைய தலைமுறையினருக்கு எத்தனை பேருக்கு தெரியும் என்பது சந்தேகமே.அதனால் அவரை குறித்து அந்த கதாபாத்திரத்தை வைத்து சிறு அறிமுகம் செய்திருக்கலாம் அதே போல அந்த கதாப்பாத்திரத்திற்கு இன்னும் சற்று முக்கியத்துவம் அளித்திருக்கலாம்.
இறுதியாக ஜாதி ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானம் குறித்து பேசும் போது ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் தங்களை ஜாதி அற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என்பது என கூறுவார்கள்.ஒட்டு மொத்த படத்தின் அபத்தமே இந்த விஷயம் தான்.ஒவ்வொருவரும் தங்களை ஜாதி அற்றவர்களாக அறிவித்தால் ஜாதி ஒழிந்து விடும், சான்றிதழ்களில் ஜாதி குறிப்பிடாவிட்டால் ஜாதி ஒழிந்து விடும் இதையெல்லாம் இவர்களுக்கு யார் கற்று தருகிறார்கள் என்று தான் தெரியவில்லை.பிற்படுத்தப்பட்டவர்களுக்கும்,தாழ்த்தப்பட்டவர்களுக்கும் வழங்கப்படும் இடஒதுக்கீட்டை எதிர்க்கும் பார்ப்பனீய அடிவருடிகளின் கருத்தை ஜாதி ஒழிப்பு என பேசுபவர்களும் பேசுவது மிகப்பெரிய ஆபத்து. இதை சமுத்திரக்கனி போன்றோர் புரிந்து கொள்ளாமல் இருப்பது சரியல்ல.இது போன்ற கருத்துக்களை இனிமேலாவது சமுத்திரக்கனி தவிர்க்க வேண்டும்.
இந்த படத்தில் ஓரளவிற்கு சில விஷயங்களை இயக்குனர் கூறி இருந்தாலும் சமூகத்திற்காக சமூகத்தோடு பயணிக்கும் பலருக்கு இதில் எதுவும் புதிதல்ல.ஜாதி ஒழிப்பு, ஜாதி ஆணவக்கொலை போன்றவற்றை அழுத்தமாக இன்னும் பதிவு செய்திட வேண்டும்.
சமீபகாலமாக ஜாதியை மையப்படுத்தி வெளிவரும் படங்கள் அனைத்தும் இடை நிலை ஜாதி – தாழ்த்தப்பட்ட ஜாதி ஆகிய இரண்டுக்குமிடையே உள்ள சிக்கல்கள்,அவர்களுக்கிடையேயான பிரச்சனைகள் ஆகியவற்றை மையப்படுத்தி தான் எடுக்கப்படுகிறது.ஜாதிக்கும் ஜாதி ஆணவத்திற்கும் வேரான பார்ப்பனீய சித்தாந்தம் குறித்தும் வர்ணாசிரம முறை குறித்தும் இன்றைய பல இயக்குனர்கள் பேச மறுக்கிறார்கள்.பார்ப்பனீயத்தை உயர்த்தி பிடித்து அந்த சித்தாந்தம் தான் உலகத்திலையே சிறந்த சித்தாந்தம் என்கிற கருத்தில் பல இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் படம் எடுத்துள்ளனர்.ஆனால் பார்ப்பனீயத்தின் பாதிப்புகள் குறித்து ஜாதிக்கு எதிரான இயக்குனர்கள் கூட படம் எடுக்க தயங்குகிறார்கள். இன்றைய இயக்குனர்கள்
பார்ப்பனீயத்தால் நிலவி வரும் ஆபத்து, அவற்றை அழித்தால் ஒட்டுமொத்த ஜாதியும் ஒழிந்து விடும் என்பதை குறித்தெல்லாம் இனி வரும் காலங்களில் படம் இயக்க வேண்டும். அது தான் உண்மையான ஜாதி ஒழிப்பு படமாக இருக்கும்.
-முஜாஹித்