உங்கள் அரசியல் வெளிப்பாட்டின், சித்தாந்தப் புரிதலின், தாங்கிப்பிடிக்கும் கருத்தாக்கத்தின் மற்றுமொரு பரிமாணம் தான் ‘உள்ளேன் ஐயா’ என்று நீங்கள் ‘ துக்ளக் 50’ விழாவில் ஆஜரானது. எனது சிறு பருவத்தில் ஆதர்சமாக இருந்த ஒரு நடிகர் என் இளமை முடியும் முன்னே அஸ்தமனத்தை நோக்கி நகர்வதைப் பார்க்கும்போது ஒரு சினிமா ரசிகனாய் மனம் வருத்தம்தான் கொள்கிறது. ‘லிங்கா’வில் தொடங்கி ஒரு தொடர் சரிவை நோக்கித்தான் உங்கள் சினிமா பயணம் இருக்கிறது என்ற பிரக்ஞையற்று இருக்கிறீர்களா, ரஜினி..?
இடையில் ‘கபாலி’ உங்களைக் காத்தது. காரணம், ரஜினி என்கிற பிம்பம் அல்ல. அது பேசிய அரசியல். உங்களது மேட்டுக்குடித் தனத்தை ஒதுக்கிவைத்துவிட்டு பேசிய விளிம்பு மானிடரின் அரசியல். ஆனால், நிஜத்தில் அதைப் புறந்தள்ளிவிட்டு அதிகாரத்தின் குரலாய் மட்டுமே ஒலிக்கிறீர்கள், ரஜினி. நிதர்சனம் என்னவென்றால் அதிகாரத்தின் குரல்கள் எப்போதும் ஓரிடத்தில் இருந்து மட்டுமே ஒலித்து விடாது. தமிழ் மண்ணும்,தமிழ் ரசிகர்களும் ஒரு ஆன்மீகவாதியாய், இந்து மதப் பற்றாளராய் எப்போதோ உங்களை அங்கீகரித்து ஆதரவும் கொடுத்துவிட்டார்கள்.
ஏனெனில் குன்றக்குடி அடிகளாரையும், பரமஹம்சரையும், மதுரை ஆதீனம் அருணகிரி அவர்களையும், இன்னபிற இந்துமத ஆன்மீகவாதிகளையும் மதம் கடந்து அங்கீகரித்த தமிழர்கள் உங்களையும் அங்கீகரித்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை தான். ஆனால், பாஜக பேசும் ‘ஹிந்துத்துவா’வை உங்கள் குரலில் அவர்கள் ஒலிக்கச் செய்யும் போது ஒருவித ஒவ்வாமையை உணர்வது என்பது உங்கள் ரசிகர்களுக்கும் கூட தவிர்க்கவியலாதது.
யார் பெற்ற பிள்ளையையோத் திருடி தன் முதல் எழுத்து தரும் தகப்பன் போல பல மாநிலங்களில் ஆட்சியை திருடிய பாஜக தமிழகத்திற்கு தங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. அதனால்தான் என்னவோ ‘துக்ளக் 50’ விழாவில் பெரியார் பற்றிய ஒரு கட்டுக் கதையும் கட்டவிழ்த்து விட்டு இருக்கிறீர்கள். ஆனால் இன்னும் காலம் ஒன்றும் கடந்துவிடவில்லை. தமிழகத்திற்கு தேவையான அரசியல் கொள்கையை சரியான முறையில் வடிவமைத்து மதசார்பற்ற வழியில் வரும் சட்டசபைத் தேர்தலை எதிர் கொள்வீர்களானால் மக்கள் உங்கள் செயல்பாடுகளை வைத்து உங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதா வேண்டாமா என்று முடிவெடுக்கலாம், இல்லை நான் இப்படியே தான் தொடர்வேன் என்றால் உங்கள் அரசியல் வாழ்வின் எதிர்காலம் துவங்குவதற்குள்ளாகவே முடியக்கூடிய வாய்ப்பிருக்கிறது.
-காஜா மொய்தீன்