‘மனிதன், தானறிந்த தான் கற்பனை செய்து வைத்துள்ள மனித உயிர்கள் அனைத்தையும் வகைமைப்படுத்தவேண்டிய தேவை உள்ளது.அவற்றை எதிரெதிரான இரு குழுக்களாகப் பிரிப்பதன் மூலம் நெகிழ்ச்சியான மக்கள் திரளை அடர்த்தியான பாகுபாட்டுக்குள் மனிதன் கொண்டுவருகிறான். போர்க்களத்தில் அணிவகுத்திருப்பது போல நிறுத்தப்பட்டுள்ள அந்த இரு பிரவுகளிக்கிடையே பகைமை உணர்வு ஊட்டப்படுகிறது.அவன் விருப்பப்படி அந்த இரு குழுக்களும் தமக்குள்ள பகைமை கொண்டிருக்கின்றன. நல்லது கெட்டது என்பது பற்றிய தீர்ப்பு மிகவும் தொன்மையான, பகைமை கொண்ட வகைப்படுத்தலாகும். அந்த இரு பிரிவுகளிடையே எப்போதும் ஒரு முறுகல் நிலை பேணப்படுகிறது. தீர்ப்புகள் வாயிலாக அந்த பகைமை நிலை உருவாக்கப்படுகிறது. அது தொடர்ச்சியாகப் புதுப்பிக்கப்படுகிறது.’
எலியா கனெட்டி (அதிகாரத்தின் மூலக்கூறுகள்)
மனிதன் என்பவன் குழுவின் பிரதிநிதி. தனிமனிதன் என்னும் சிந்தனை ஒரே நிலையில் குழு என்ற தொகுப்பை அடையும்போது, அத்தொகுப்பு தனக்கான எதிர்நிலையை நிர்ணயித்து தனது அதிகாரத்திற்கும், ஆதிக்கத்திற்குமான வாழ்வை உறுதிப்படுத்துகின்றது. கூட்டம் என்பது எண்ணங்களிற்கான திறனை உந்தித்தள்ளுகிறது. அதிலுள்ளவனை பாதுகாப்பாக உணரவைக்கிறது. இச்சைக்கான தேடலில் தன்னை தகவமைத்துக்கொள்ளும் கருவிதான் மனிதன் என்பதை கனெட்டியின் பதிவு உணர்த்துகிறது.
இருமுனை திரட்டல் எப்பொழுதெல்லாம் நிகழ்கிறது என்றால் அது எப்போதும் இருந்துகொண்டுதான் உள்ளது. மனிதன் தோன்றியது முதல் இன்றுவரை அதன் இயக்கவியல் பல முரண்களைக் கடந்து வந்துள்ளது. தொழிற் புரட்சிக்குப் பிறகு தோன்றிய முதலாளியம் தன்னை ஒற்றை அதிகாரமாக உருவாக்கிக்கொண்டு, அதுவரை இருந்த அனைத்து ஆதிக்க வகைமைகளையும் தகர்த்தது. ஆதிக்கத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த இயேசு கிறிஸ்துவின் போதனைகள் பின் நிறுவனமான சர்வாதிகார அமைப்பாக உருவானதுபோல்தான் அறிவியல் வழி வந்த முதலாளியமும். நவீன உலகை உருவாக்கிய முதலாளியத்தின் வெற்றி என்பது அதன் அடக்குமுறையை இயல்பான வாழ்வியலாக உருமாற்றி, பாதிக்கப்பட்டவர்களை தன் பிரதிநிதியாக உணரவைத்ததுதான்.
இந்தியாவின் பார்ப்பனியமும் அதையே செய்தது. பார்ப்பனீயத்தின் சாரம் ஆதிக்கம் என்றால், அடித்தளம் மதம். ஆதலால், முதலாளியம் தன் அதிகாரத்தை மறைக்க மதத்தை எதிர்நிலையில் நிறுத்தியதுபோல் பார்ப்பனியம் செய்யவில்லை. மாறாக, மதத்தின் பிடியை இறுகச் செய்தது. தன் நிலைக்கேற்ப அதில் மாற்றங்களை செய்துகொண்டாலும், அதைக் கீழ் உள்ளவனால் எதிர்க்க முடியாதபடி அவனை தன்வயப்படுத்தியது. எழும் எதிர்க்குரல்கள் கலககுரல்களாக பார்க்கப்பட்டது.
19ம் நூற்றாண்டுக்குப் பிறகு பிரிட்டிஷ் ஆட்சியில் தமது நிலையை விடவில்லை என்றாலும் அதற்கு காரணமான தன் அடித்தளமான மதத்தை இழந்துவிடுவோமோ என்ற அச்சம் பார்ப்பனியர்கள் மத்தியிலிருந்தது. அது அதுவரை நடந்த இஸ்லாமிய ஆட்சியில் கூட இல்லை. ஏனெனில், இஸ்லாமிய ஆட்சியாளர்களின் பன்முகப்பார்வை பார்ப்பனியத்தின் வரையறையாக இருந்தது. பார்ப்பனர்களுக்கான சலுகையை வாரி வழங்கிய ‘அக்பர்’ திருமாலின் மற்றொரு அவதாரம் என்ற அளவிற்குப் போற்றப்பட்டார். பிரிட்டிஷிடம் பெரிய மாற்றம் இல்லையென்றாலும், நிர்வாகப்பார்வை கடைநிலை வரை விழுந்தது. கிறிஸ்துவ மிஷனரிகளின் பங்களிப்பு கூடுதல் சிறப்பாக அமைந்தது. பார்ப்பனர்கள் தமது நிலையை மறுசீராய்வுக்கு உட்படுத்தினர். பழமைவாத மீட்பு என்ற பெயரில் மதமாற்றத்திற்கு எதிரான அமைப்புகள் உருவாகின. முற்போக்கு பேசிய ராஜாராம் மோகன்ராயின் பிரம்மசமாஜம் தொடங்கி, ஆர்ய சமாஜம், இந்துமகா சபா, ஆர்எஸ்எஸ் வரை மென்மையாகத் தோன்றிய பார்ப்பனிய மீட்டெடுப்பு தீவிர நிலையை எட்டியது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் மேற்கூறியதுபடி பார்ப்பனியம் என்ற குழு தன் நிலையை வரையறுத்தது. முரண் இயக்கம் சார்ந்து தமக்கு எதிராக இஸ்லாமை வைத்தது. அதுவரை இஸ்லாமிய ஆட்சியில் உயர்நிலையிலிருந்த பார்ப்பனர்கள், இஸ்லாமிய எதிர்ப்பியக்கத்தை கட்டினர். ஆட்சியதிகாரத்தில் இருக்கும் பிரிட்டீஸுடன் மோதும் அளவிற்குத் தைரியம் இல்லாதவர்கள், தாம் விதைத்த வெறுப்பரசியலின் மூலம் தம் நிலையை நிலைநாட்டினர். பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய வந்தே மாதரம் தொடங்கி பாகிஸ்தான் பிரிவினை வரை பார்ப்பனியத்தின் வெற்றி அடுத்த ஆண்களுக்கான ஆதிக்கத்தை விதைத்தது. நரேந்திர மோடியின் அரசு அதன் மீட்சியின் ஒரு பகுதி.
நமது நிலையை நாம் எவ்வாறு பெறுகிறோம் என்றால் பெரும்பான்மை எனும் கற்பனை வழியாகத்தான். பெரும்பான்மை என்பது எதைக் குறிக்கிறது, தேசியத்தைக் குறிக்கிறது. தேசியம் வழி அமைந்த அரசைக் குறிக்கிறது. அரசு என்பது முதலாளியத்தின் அதிகார அமைப்பாக உள்ளது. அந்த அமைப்பை எதிர்க்கும்போது நாம் நினைக்கும் பெரும்பான்மை எனும் இயல்புநிலையின் எதிராளியாக, தீவிரவாதியாக ஊடகம் போன்ற முதலாளிய துணை அமைப்புகள் சித்தரிக்கபடுகிறோம். எனவே, பெரும்பான்மை என்பது ஆதிக்கம் நுகரும் அதன் உடைமை பொருட்களாகிய நம்மைக் குறிக்கிறது. இனம், மதம், மொழி போன்ற இதற்குத் துணைபுரியும் அமைப்புகள் பல இருந்தாலும் மூலம் அதிகாரம்தான்.
பாபர் மசூதி இடிப்பு என்பது பார்ப்பனியத்தின் மிகப்பெரிய வெற்றியாக இருந்தது என்றால், அதற்கான தீர்ப்பு பார்ப்பனியம் உருவாக்கிய இந்து பெரும்பான்மைவாதத்தின் வெற்றியாக அமைந்தது. தீர்ப்பு மற்றும் ஆதிக்கவாதிகளை கடந்து மதவாதம் சார்பற்ற, நடுநிலை மனப்பான்மை கொண்ட நபர்களிடத்தில் எத்தகைய மனநிலையை இச்சம்பம் உருவாக்கியது என்பதுதான் வெற்றியின் முழுமை. இது ஒரு மோசமான தீர்ப்பு, இஸ்லாமியர்களுக்கு எதிரான தீர்ப்பாக இருந்தாலும் அவர்கள் அமைதி காக்கிறார்கள், இதோடு முடிந்தது நல்லது, எக்காரணத்தைக் கொண்டும் கலவரங்களும், பொது அமைதிக்கு இடர்பாடும் ஏற்பட்டுவிடக் கூடாது, அனைவருக்குமான மத நல்லிணக்கமே முக்கியம் போன்ற வாதங்கள் தெரிந்தோ தெரியாமலோ ஆதிக்கத்தின் குரலை வெளிப்படுத்தியது. நமது நிலை ‘இயல்புநிலையை’ ஏற்றுக்கொண்டதாக இருந்தது. இந்த இயல்பு நிலை ஆதிக்க குழு வரையறுத்த தனது நிலையாக இருக்கிறது. இதில் சிறுபான்மை என்று எதிர்நிலையில் நிறுத்தப்படுபவர் மீது சோகமும், கருணையும் வரும் பெரும்பான்மை குழுவின் சமரசமற்றவனாகத் தாம் இருப்பதே எதார்த்தமாகிவிட்டது. இதோடு பெரும்பான்மை என்ற உருவாக்கத்திற்கு எதிர்நிலையில் உள்ள குழுவும் இணைந்து தமக்கான குறைந்தபட்ச ஆறுதலைத் தேடத் தொடங்கியதுதான் அதிகாரத்தின் வெற்றியாக முடிந்தது.
ரோஹித் வெமுலாவும் நாம் நினைத்த பெரும்பான்மையின் இறுதி நிலை பிரதியாகவே இருந்தார். ஆனால், அதை ஏற்றுக்கொண்டு வாழ முடியாதவர் அதன் வாழ்வியலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டார். இன்று பாத்திமா லத்தீப் வரை இந்த அமைப்பால் தூக்கி வீசப்படுபவர்கள் தொடர்கிறார்கள். தற்கொலை போன்ற நிலையிலிருந்து, அதை இயல்பாக்கிய ஒட்டுமொத்த அமைப்பையும் குறிப்பிடாமல், அதில் ஒரு பிரதிநிதியாக இருந்துகொண்டு சக பிரதிநிதியின் மீது கருணை கொள்வது இவ்வமைப்பு உருவாக்கிய மிகப்பெரிய முரண். இதனை கனெட்டியின் வார்த்தையிலிருந்தே முடிக்கலாம் என்று தோன்றுகிறது.
‘பிழைத்திருக்கும் தருணம் என்பது அதிகாரத்தின் தருணமாக இருக்கிறது.’
அப்துல்லா.மு