கம்யூனிஸ ஜின்பிங்கும், கோஷம் போடும் தோழர்களும்!
மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுர வருகை ஓர் பெரிய வரலாற்று நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. ஆளும் சார்புடையவர்களும் ஊடகங்களும் இதனை மிகப்பெரிய சாதனையாகச் சித்தரித்து வருகின்றனர். இரண்டு மிகப்பெரிய நாட்டின் தலைவர்கள் சந்திப்பு, அதற்கான காரணம் மற்றும் பொருள் என்பதைத் தாண்டி அதன் மூலம் உருவாக்கப்படும் வெறும் விளம்பரம் என்பது கேள்விக்குள்ளாகாமல் இருப்பது அதிர்ச்சியைத் தருகிறது. வழக்கம்போல் பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் #GoBackModi என்ற ஹாஷ்டாக் மூலம் எதிர்ப்பை சந்தித்தது. தனக்கு எதிராகக் கருப்புக் கொடி போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்றே சென்னையிலிருந்து மாமல்லபுரத்திற்கு ஹெலிகாப்டரில் சென்று கோவளத்தில் தங்கினார் மோடி. ஆனால், அதே சமயம் ஜி ஜின்பிங் நகரின் நடுவே தங்கி, மாமல்லபுரத்திற்கு காரிலேயே பயணம் மேற்கொண்டார். இங்கும் பலர் சமூக வலைத்தளங்களில் தமிழ்நாடு உங்களை வரவேற்கிறது என்ற ரீதியில் ஜின்பின்கை வரவேற்றனர். அவர் எப்படிப்பட்டவர் என்ற புவியியல் அரசியல் புரிதல் இல்லாததால் விருந்தோம்பல் என்ற ரீதியில் இந்நிகழ்வைப் பலர் பெருமையாகப் பார்த்தனர். ஆனால், ஜின்பிங்கின் வருகை காரணமாக இங்குள்ள திபெத்தியர்கள் மீது அரசு அதிகாரம் தீவிர கண்காணிப்புக்குள்ளானது. வழக்கமாக உலகத் தலைவர்களின் சந்திப்பு டெல்லியில் நடக்கும். திபெத்தியர்களின் போராட்டத்தைச் சமாளிக்கவே இம்முறை தென்னகத்தில் நடத்தப்பட்டது. இதையெல்லாம் கடந்தும் இரண்டு நாட்களுக்கு முன் திபெத் பேராசிரியர் ஒருவர் கைது, நேற்று விமான நிலையம் மற்றும் கிண்டி ஹோட்டல் முன் போராடிய மாணவர்கள் அடித்து கைது என்று அதிகாரத்தின் அடக்குமுறைகள் நிகழ்ந்தன. இந்த சலசலப்பு சீனா வெளியுறவுத் துறையால் இந்தியப் பிரதமர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டு, மாநில அரசைக் கண்டிக்கும் அளவிற்குச் சர்ச்சையானது.
சீனா என்ற பெரிய நாட்டின் அதிபரை இங்குள்ள குறிப்பிட்ட மக்கள் ஏன் எதிர்க்க வேண்டும். அதுவும் இருவருக்கும் தொடர்பில்லாத மூன்றாம் நாட்டிலிருந்தும் போராடியே ஆகவேண்டும் என்ற மனநிலை உருவானது ஏன் என்ற காரணத்தை அறிய வேண்டும். அது, GoBackModi என்ற எதிர்ப்புக்குப் பின் உள்ள வலுவான காரணங்களைப் போலவே ஜின்பிங் எதிர்ப்பு நிலையாக இருக்க வேண்டும்.
மாவோவிற்கு பிறகு சீனாவின் வலிமைமிக்க தலைவராகத் தன்னை உருவாக்கிக்கொண்டவர் ஜி ஜின்பிங். ஜின்பிங்கின் வலிமை என்பது வரைமுறையற்ற ஒற்றை நபர் சர்வாதிகாரத்தை வெளிப்படுத்தக் கூடியது. கடந்த 2013ம் ஆண்டு முதல்முறை சீனாவின் அதிபரான ஜின்பிங் கம்யூனிஸ்ட் கட்சியின் தலையாய தலைவராகத் தன்னை நிலைநிறுத்தினார். தமது முதன்மை அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்சிக்குள்ளேயே அதிகார ஒடுக்குமுறைகளைத் தொடங்கினார். ஜின்பிங்கின் இரண்டாம் முறை அதிபர் தேர்வு மொத்த அமைப்பையும் சிதைக்கக்கூடியதாக உருவானது. சீனாவைப் பொருத்தவரை ஒருவர் இரண்டு முறைதான் அதிபராக இருக்க முடியும் என்ற கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் தென் ஜியோபிங்கின் சட்டத்தைத் தகர்த்தார். தன்னை சீனாவின் நிரந்தர அதிபர் என்ற சர்வாதிகார கொடுங்கோன்மைக்கு ஏற்ற புதிய அரசியல் விதிகளை உருவாக்கினார். சீனாவின் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.
இடதுசாரிய புரட்சி கண்ட சீனாவின் அரசியல் ஆரம்பத்திலிருந்தே குழப்பமானதாகவே இருந்தது. 90களுக்கு பிறகு ஏற்பட்ட பொருளாதார மாற்றங்கள் இதை மேலும் சிக்கலாக்கியது. ஆட்சி குறிப்பிட்ட நபர்களின் அதிகார விளையாட்டை பொறுத்தே அமைந்தது. இது மொத்தத்தையும் தன் ஒருவனின் கைப்பிடியில் இறுக்கியதையே ஜின்பிங்கின் வலிமை எனலாம். கம்யூனிசம் என்ற பெயரில் உருவான ஆட்சியும், அது உருவாக்கிய பொருளாதார நடவடிக்கையும் நேர்மாறாக பயணித்தது.
ஓர் ஒற்றை நபரால் அமைப்பையே முற்றிலுமாக எப்படி மாற்ற முடியும் என்ற கேள்வி எழுவது இயல்பு. அதற்கு ஜின்பிங் இட்ட அடித்தளம் தேசியம். ‘சீன தேசியம்’ என்ற ஆயுதமே அவரின் இருப்பை வலுவாக்கியது. கம்யூனிச அரசு பின்னணியிலேயே ‘நவீன சீன சோசலிசம்’ என்ற பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தினார். சந்தைப்பொருளாதாரத்தை ஆரம்பம் முதலே ஏற்ற சீனா இதன்மூலம் ஏகாதிபத்திய முதலாளியத்திற்கு முன்னேறியது என்று கூறலாம். முதலாளியத்தின் ஆதிக்கத்தைச் சீனா என்ற தேசிய பழமைவாதத்தினால் மூடி மறைத்தார் ‘தோழர் ஜின்பிங்!.’
ஒரு அதிபரின் தேசிய சிந்தனையினை கேள்வி எழுப்பலாமா.. எனலாம். ஜின்பிங்கே தனது நிலைக்குப் பல இடங்களில் முரண்படுவார். நவ பழமைவாதம் பேசும் அதே நேரத்தில் பன்மய கலாச்சாரங்களை ஒடுக்குவதையே அவர் ஆட்சி செய்கிறது.
உதாரணமாக,
உய்குர் இன மக்கள் மீது நிகழ்த்தப்படும் வல்லாதிக்கத்தை கூறலாம். பெரும்பாலான இஸ்லாமிய மக்களான அவர்கள், தங்கள் மதம் சார்ந்த நம்பிக்கைகளை கடைப்பிடிக்கக் கூடாது, இனம் சார்ந்த பழக்கவழக்கங்களில் ஈடுபடக்கூடாது, உடைமை பறிப்பு மற்றும் பூர்வ குடி நிலத்திலிருந்து வெளியேற்றம், சிறை வைத்தல் போன்ற கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். அதிலும் சமீபத்தில் சிறை வைத்த உய்குர் மக்களின் உடல் உறுப்புகளைத் திருடியது போன்ற அரச பயங்கரவாதங்கள் நடந்தது. இந்நிகழ்வெல்லாம் ஒரு குடிமக்கள் என்பதைத் தாண்டி அடிப்படை மனிதர்கள் என்பதையே ஏற்காமல் நிகழ்ந்த வன்செயல்கள்.
மேலும், கிறிஸ்துவ தேவாலயங்களைத் தகர்ப்பது தொடங்கிப் பல தளங்களில் கலாச்சார படுகொலைகள் அரங்கேறுகிறது. அனைத்தும் சீனமயமாதல் என்ற தேசியத்தின் கீழ் நியாயப்படுத்தப்படுகிறது. இதன்மூலம் முரண்களின் மீதான ஒடுக்குதல் என்ற வெறுப்பரசியலே ஜின்பிங்கின் சீன தேசியத்தின் அடிநாதம் என நிரூபணமாகிறது. நவ பழமைவாதத்தின் மூலம் ஜின்பிங் கட்டமைக்கும் தேசியம் அவரின் கட்டற்ற அதிகாரத்தைக் காக்கிறது. இதை ஜின்பிங் கைக்குலுக்கிய நரேந்திர மோடியின் ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி அரசியலுடன் பொருத்திப் பார்ப்பது எளிதாக இருக்கும். இவர்கள் உருவாக்கும் வெறுப்பரசியல் என்பது ஆதிக்கவாதிகளையும், பழமைவாதிகளையும் தேசியவாதிகளாக உற்பத்தி செய்கிறது. அதன் எதிர்வினையே ஜனநாயக சக்திகளின் அரசிற்கு எதிரான போராட்டங்கள்.
மக்களின் போராட்டங்களைச் சமாளிக்க ஜின்பிங் தடைகள் மூலம் உரிமைகளைத் தகர்க்கிறார். சமூக வலைத்தளங்கள், அடிப்படை இணையம், பேச்சுரிமை, எழுத்துரிமை என்று அவரை விமர்சிப்பவை அனைத்தும் சீனாவில் இல்லாமல் ஆக்குவதே சீனமயமாதலாக உள்ளது. இவை இன்று கல்வி வரை கட்டுப்பாடுகளாக நீள்வது ஒற்றை நபருக்காகச் சீன மக்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கும். இன்று ஜின்பிங்கின் வருகை பலரால் அவர் கம்யூனிஸ்ட் என்றும், கம்யூனிசத்தின் வருகை என்றும் பார்க்கப்படுகிறது. அவரின் வருகை உங்கள் அருகில் இருக்கும் ஒரு தேசிய இன சகோதரர்களின் குரல்வளையை குறிப்பிட்டு நெரிக்கும்போது, அப்படி ஒரு கம்யூனிசத்தைக் கொண்டாடி என்ன பயன்…???
அப்துல்லா.மு