கண்ணன் கோபிநாதன் – இந்த பெயரை எங்கேயோ கேட்டது போல் இருக்கிறதா..?
சென்ற வருடம் கேரளா வெள்ளம் ஏற்பட்ட போது தனது அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்ளாமல் மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர் தான் இந்த கண்ணன் கோபிநாதன். அப்போது இவர் மாவட்ட ஆட்சியராக இருந்தார்.
தற்போது ஏன் அவரைப்பற்றி பேசுகிறேன் என்றால் தனது குடிமைப் பணியை இவர் தற்போது இராஜினாமா செய்துள்ளார். அதற்கான காரணம், காஷ்மீரில் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதால் தனது மனசாட்சியின் உந்துதலின் படி இந்த ராஜினாமா முடிவை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
காஷ்மீரில் கடந்த ஒரு மாதமாக அடிப்படை உரிமைகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் அதனை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும்,தனது ராஜினாமா பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடாது, கிண்டல்களுக்கும், கேள்விகளுக்கும் உள்ளாகும் என்றாலும் மனசாட்சிக்கு நாம் பதிலளிக்க வேண்டி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாத்ரா நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் நஷ்டத்தில் இருந்த மின்சார துறையை தான் பதவியேற்ற பிறகு லாபகரமானதாக மாற்றியுள்ளார். மிசோரமில் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது அங்கு பேட்மின்டன் வீரர் கோபிசந்த் உதவியுடன் 30 பேட்மிட்டன் பயிற்சி மையங்களை ஏற்படுத்தியுள்ளார்.
தான் பணியில் இருந்தபோது கேரளா வெள்ளத்தில் எதற்காக மீட்பு பணியில் ஈடுபட்டேன் என்று கேட்டும், பிரதமரின் நல்லாட்சி விருதுகளுக்கு ஏன் விண்ணப்பிக்கவில்லை என்று என்று கேட்டும் தன்மீது நோட்டீஸ் விடப்பட்டதாக கண்ணன் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஜனநாயகத்தின் அடிப்படை கட்டுமானங்கள் சமரசம் செய்து கொள்ளப்பட்டு வருகின்றன என கூறி தனது பதவியைத் துறந்திருக்கிறார் மற்றொரு ஐ.ஏ.எஸ் அதிகாரி.அவர்,
சசிகாந்த் செந்தில்.
தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான இவர் கர்நாடகத்தில் உதவி ஆணையராக பணிபுரிந்து வந்தார். தனது பதவியை துறந்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் எதிர்வரும் நாட்கள் தேசத்தின் இயல்புக்கு மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்றும், தான் ஒரு சாதாரண குடிமகனாக இருந்து அனைவரின் நன்மைக்காக செயலாற்ற விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
ஜனவரியில் தனது பதவியைத் துறந்த ஜம்மு-காஷ்மீரின் ஷாஃபைசலை தொடர்ந்து மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசின் அரச பயங்கரவாதத்தை எதிர்த்து கண்ணன் கோபிநாதன்,செந்தில் ஆகியோர் பதவி விலகி உள்ளனர்.
2014ல் பாஜக ஆட்சிக்கு வந்த சில காலங்களில் சாகித்ய அகாடமி, தேசிய விருது, பத்ம விருதுகளை திருப்பித் தந்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர் பல்வேறு அறிஞர்கள், ஆர்வலர்கள்..தற்போது ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்கள் பதவிகளை விட்டு விலகி வருவது இந்திய ஜனநாயகத்தின் மீதான ஆபத்தை வெளிப்படுத்துவதோடு நாடு சர்வாதிகாரத்தை நோக்கி செல்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக காட்டுகிறது.
-ஆர்.அபுல்ஹஸன்,கட்டுரையாளர்