தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக மாணவர்களின் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்- இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு கோரிக்கை
திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் (CUTN) ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து திரும்பப் பெற்றது தொடர்பாக பல்கலைக்கழக வளாகத்திற்குள் கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றை சுதந்திரப் பேச்சாளர்கள் ஆய்வு வட்டம் (Freedom Speech- Study Circle) என்ற பெயரிலான மாணவர் குழு ஏற்பாடு செய்திருந்தது. இக்குழுவில் உள்ள மாணவர்கள் மீது பல்கலைக்கழகம் நிரந்தர நீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்குறிப்பிட்ட பேச்சாளர்கள் ஆய்வு வட்டமானது கடந்த காலங்களில் தொடர்ந்து பல ஆக்கப்பூர்வமான விவாதங்களை பல்கலைக்கழத்திற்குள் அமைதியான மற்றும் ஜனநாயக வழியில் நடத்தி வந்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் பாஜக அரசு ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கியிருந்த சிறப்பு அந்தஸ்தை ( 370 & 35A) ரத்து செய்தது. அரசியலைப்பு சட்டப்பிரிவு 370 குறித்து விவாதிப்பது என்பது “நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல்” என CUTN நிர்வாகம் கருதி, இம்மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது.
மாணவர்கள் மீதான இந்த நடவடிக்கை ஜனநாயகத்திற்கு விரோதமானதும், மாணவர்கள் மீதான பல்கலைகழகத்தின் எதேச்சதிகார போக்கை காட்டுவதாகவும் உள்ளது. யுஜிசி (UGC) மாணவர்களுக்கு வழங்கி இருக்கும் உரிமைகளை முற்றிலுமாக குறைப்பது மட்டும் இல்லாமல் அவற்றை மீறும் செயலுமாகும். முறையான விசாரணை எதுவும் இல்லாமல் மாணவர்களை குற்றவாளியாக்கி உள்ளது பல்கலைக்கழகம். வெறியூட்டப்பட்ட தேசியவாதம் ஜனநாயகத்தின் அனைத்து அம்சங்களையும் பேச்சு சுதந்திரத்தையும் இப்படித்தான் கொல்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நாட்டின் எதேச்சதிகாரம் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக வெளிப்படும் அனைத்து குரல்களையும் அடக்குவதற்கு இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு கல்வி வளாகங்களில் ஒரு அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. பாசிச அரசின் கைகளில் சிக்கித்தவிக்கும் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக
CUTN மத்திய பல்கலைக்கழகம் தமிழ்நாடு மாறியுள்ள்து.
CUTN நிர்வாகம் மாணவர்களுக்கு எதிராக எடுத்துள்ள இந்த நடவடிக்கை என்பது கல்வி வளாகங்களில் மாணவர்களுக்கான கருத்து சுதந்திரம், பேச்சுரிமை ஆகியவற்றை கட்டுப் படுத்துவதால் இதை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு(SIO) வன்மையாக கண்டிக்கிறது.
மேலும் மாணவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துவதுடன், மாணவர்களையும், அவர்களது அடிப்படை உரிமை மற்றும் கருத்து சுதந்திரத்தை பறிக்க பயன்படுத்தப்படும் பல்கலைக்கழக நிர்வாக விதிமுறைகளிலிருந்து பிரிவு 51(Ordinance 51) நீக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. மாணவர்களின் நீதிக்கான ஒருங்கிணைந்த போராட்டங்களில் என்றும் உடன் இருக்கும் என்று Sio உறுதி அளிக்கிறது.
ஊடகத்துறை
இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு
SIO