அண்மையில் வெளியிடப்பட்ட SBI வங்கியின் ஜுனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கான முதல் நிலைத்தேர்வு முடிவுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநில வாரியாக வெளியிடப்பட்டிருக்கும் இத்தேர்வு முடிவில், முதன்மை தேர்வுகளுக்கு தேர்ச்சி பெற்ற போட்டியாளர்களின் குறைந்தபட்ச மதிப்பெண்கள்(Cut-off marks) இடஒதுக்கீடு அடிப்படையில் வெளியிடப்பட்டிருந்தன. பல்வேறு மாநிலங்களில், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி பிரிவுக்கான(EWS) கட்-ஆஃப் மதிப்பெண், சமூகத்தில் ஒடுக்கப்பட்டிருக்கும் OBC, SC மற்றும் ST பிரிவினரை விட மிகவும் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. உதாரணமாக, தமிழகத்தில் SC பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 61.25 ஆகவும், ST பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 53.75 ஆகவும், OBC மற்றும் பொது பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 61.25 ஆகவும் இருக்கும் நிலையில், உயர்சாதி EWS பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் வெறும் 28.5 ஆக மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது கடுமையான கண்டனத்திற்குரியது. இதே போன்ற நிலை அஸ்ஸாம்,மத்திய பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நிலவுகின்றது. கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட BHEL நிறுவனத்திற்கான தேர்வுகளிலும் இதே போன்ற குறைவான கட்-ஆஃப் EWS பிரிவினருக்கு நிர்ணயிக்கப்படிருந்து நினைவு கூறத்தக்கது.
சமூகநீதியை உறுதிப்படுத்த கொண்டு வரப்பட்ட இடஒதுக்கீடு போன்ற சமூக ஆயுதங்களை கூட எவ்வாறு பாசிச- பார்ப்பனிய பாஜக அரசு உயர்சாதியினரின் விருப்பங்களை உறுதிப்படுத்துவதற்கும், ஒடுக்கப்பட்ட மக்களை அதிகாரப்படுத்தலிலிருந்து வெளியில் நிறுத்துவதற்கும் பயன்படுத்தி இருப்பது தெளிவாகின்றது.
சமூகநீதியை குழித்தோண்டி புதைக்கும் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு உடனடியாக திரும்பப்பெறப்பட வேண்டும். அரசியலமைப்பு சட்டம் உறுதிப்படுத்தியிருக்கும் சமத்துவமும், சமூகநீதியையும் தழைத்தோங்க இந்த இடஒதுக்கீட்டு முறையை எதிர்த்து போராடுமாறு ஜனநாயக சக்திகள் அனைத்தையும் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு கேட்டுக் கொள்கிறது.
அத்தகைய போராட்டங்களில் SIO என்றும் முன்நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சதக்கத்துல்லாஹ்
மாநில பொதுச் செயலாளர்
இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு – தமிழ்நாடு