அடுத்தவர் வழங்கிய நிவாரணத்திற்கு உரிமை கோரும் இந்து மகாசாபா
பிறர் செய்த பணிகளை தாங்கள் செய்ததாகவும், பிற நாட்டு நற்பணிகளை மோடி ஆட்சி பணிகளாகவும் சமூக வலைதளங்களில் பரப்பி பெருமை பீத்திக் கொள்வது பாஜகவினருக்கு கைவந்த கலை. அந்த நல்ல பழக்கம் இப்போது புயல் நிவாரணத்திலும் தொடர்கிறது. ஆனால் இந்த முறை அதனை செய்தது பாஜக அல்ல, கோட்சேவிற்கு சிலை வைப்போம் என்று சொன்ன இந்துமகாசபா.
கஜா புயல் நிவாரணத்திற்காக இந்து மகா சபா பேரிடர் குழு திருத்துறைப்பூண்டி சுற்றியுள்ள கிராமங்களில் நிவாரணப் பொருட்கள் விநியோகித்ததாக 26.11.2018 தேதியிட்டு சில புகைப்படங்கள் வாட்சப்பில் வந்தது. அந்த புகைப்படங்களை எங்கோ பார்த்தது போல இருந்ததாக தோன்றியதால் நமது நண்பர்களிடம் விசாரித்தோம்.
அந்த புகைப்படங்கள் உண்மைதான், செய்தியும் உண்மைதான். ஆனால் நிவாரணப் பொருட்களை விநியோகித்தது இந்து மகா சபா அல்ல, இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பினர்(SIO) என்று தகவல் கிடைத்தது.
நாகூர் SIO சகோதரர்கள் புயல் பாதிக்கப்பட்ட அடுத்த தினத்தில் இருந்து இதுவரை 12 கட்டங்களாக வேதாரண்யம், நாகப்பட்டினம் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பல ஆயிரம் குடும்பங்களுக்கான நிவாரணப் பொருட்களை ஒத்த சிந்தனை கொண்ட அமைப்புகளுடன் இணைந்து விநியோகித்து வருகின்றனர். அப்படி 350 குடும்பங்களுக்கான பொருட்களை திருத்துறைப்பூண்டி சுற்றியுள்ள உதவிகள் சென்று சேராத கிராமங்களுக்கு கடந்த 27ம் தேதி விநியோகித்து அந்த செய்தியை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
அந்த செய்தியை, புகைப்படங்களுடன் அப்படியே காப்பி செய்து தாங்கள் செய்ததாக இந்து மகா சபையினர் தங்கள் வட்டங்களில் பரப்பியுள்ளனர். ஆனால் அதில் புத்திசாலித்தனமாக செய்வதாக எண்ணிக் கொண்டு சில மாற்றங்களை செய்துள்ளனர்.
* SIO சகோதரர்கள் இருந்த புகைப்படத்தை மட்டும் நீக்கிவிட்டார்கள்
* யாரும் உரிமை கொண்டாடக் கூடாது என்பதற்காக SIO வினர் 27ம் தேதி விநியோகித்ததாக எழுதியிருந்ததை இவர்கள் 26ம் தேதி விநியோகித்ததாக மாற்றிவிட்டுள்ளனர். (யாரும் கேட்டால் நாங்க பண்ணததான் அவங்க திருடிட்டாங்கன்னு சொல்லலாம்ல)
* JIH-SIO & NFWA என்ற பெயரை இந்து மகா சபா என்று மாற்றிவிட்டனர்.
* பத்தாம் கட்டமாக என்றிருந்ததை பதினொன்றாம் கட்டமாக என்று மாற்றிவிட்டுள்ளனர்.
தான் செய்யாவிட்டாலும் பிறர் செய்வதை தான் செய்ததாக பெருமை கொள்ளும் பெருந்தன்மை உலகில் பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து மகா சபையினரைத் தவிர வேறு யாருக்கு தோன்றும். வாழ்க அவர்கள் மனிதநேய சேவை
அபுல் ஹசன்