எழுதியவர் : ஹூசைனம்மா, சமூக ஊடகவியலாளர்
1945-ல், பிரதமர் அட்லீ தலைமையில் புதியதாகப் பதவியேற்றுக் கொண்ட பிரிட்டிஷ் அரசு, இந்தியாவிற்குச் சுதந்திரம் வழங்க முன் வந்தது. அதற்கு முன்னர், இந்தியாவில் மத்திய அரசு எப்படி அமைய வேண்டும் என்று தலைவர்களின் கருத்தை கேட்பதற்காக ஒரு தூதுக் குழுவை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. சுதந்திர இந்தியாவின் அரசு எப்படி இருக்க வேண்டும் என்று மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள் வரையறுத்திருந்த திட்டமே காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் கட்சியினரால் – பட்டேல் தவிர மற்ற அனைத்துத் தரப்பாலும் – ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அந்தத் திட்டம், பாதுகாப்பு, வெளியுறவு, போக்குவரத்து ஆகிய மூன்று துறைகளை மட்டும் மத்திய ஃபெடரல் அரசின்கீழ் கொண்டு வந்து, மாநிலங்களுக்கு அதிக சுயாட்சியைப் பெற்றுத் தரும் வகையில் அமைந்திருந்ததுதான் படேலின் எதிர்ப்புக்குக் காரணம். எனினும், தூதுக் குழுவின் முழு ஒப்புதலையும் பெற்று, அத்திட்டத்தின் அடிப்படையில் காங்கிரசும், முஸ்லிம் லீகும் இணைந்து இடைக்கால அரசும் அமைத்தன. அதிலும், தனக்குப் பிடித்த உள்துறையை படேல் முஸ்லிம் லீகுக்குக் கொடுக்க மறுத்த காரணத்தால், நிதித் துறையைக் கொடுக்க வேண்டி வந்தது. அதன் மூலம், இடைக்கால அரசில் முஸ்லிம் லீகின் கை ஓங்க வழிவகுத்தது. அதனால் ஏற்பட்ட பிரச்னைகளே, அதுவரை ஒண்றிணைந்த இந்தியாவை ஏற்றுக் கொண்டிருந்தவர்களையும் பிரிவினைக்கு ஆதரவாகத் தள்ளியது.
அப்போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த லார்ட் வேவலும் சுதந்திர இந்தியா பிளவுபடாத ஒன்றிணைந்த இந்தியாவாகத்தான் இருக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசிடம் வலியுறுத்தினார். அதற்காக சுதந்திரத்தைச் சிறிது காலம் தள்ளிப் போட்டாலும் பரவாயில்லை என்ற கருத்து கொண்டிருந்தார். ஆனால், அட்லீயோ அதை ஏற்கவில்லை. ஆகவே, லார்ட் வேவலை நீக்கிவிட்டு, தனக்குச் சாதகமானவரான லார்ட் மவுண்ட் பேட்டனை வைஸ்ராயாக நியமித்தார்.
இந்தியா வந்த மவுண்ட் பேட்டனின் “இந்தியப் பிரிவினை” கருத்தை முதன்முதலில் உவகையோடு ஏற்றுக் கொண்டது வல்லபாய் பட்டேல். பேச்சுத் திறமை மிக்கவரான மவுண்ட் பேட்டன் அடுத்துச் சந்தித்தது, பிரிவினைக்கு கடும் எதிர்ப்போடு இருந்த ஜவஹர்லால் நேருவை. அவர் மதில் மேல் பூனையாக்கப் படுகிறார். அடுத்து கிருஷ்ண மேனன் போன்றோரைப் பதவி ஆசை காட்டி தம் கருத்துக்கு இசைய வைக்கிறார்.
சக தலைவர்கள் மனம் மாறுவதைக் கண்டு வேதனையடைந்த ஆசாத், காந்தியிடம் இதை முறையிட, அவரோ, “பிரிவினை என்று நடந்தால், அது என் பிணத்தின்மீதுதான் நடக்கும்” என்று உறுதியாக கூற, மிகுந்த நம்பிக்கையோடு செல்கிறார். ஆனால், அடுத்த இரண்டே நாட்களில் மவுண்ட் பேட்டன் மற்றும் பட்டேலைச் சந்தித்த காந்தியின் பேச்சில் தெரியும் மாற்றத்தைக் கண்டு அதிர்ந்து போகிறார். பட்டேலின் கருத்தையே காந்தியும் தனது வாதங்களாக முன்வைப்பதைக் கண்டு நம்பிக்கை இழந்துவிடுகிறார்.
மேலும், மௌலானா ஆசாத் அவர்கள் வகுத்துத் தந்த சுயாட்சி திட்டமும் மவுண்ட் பேட்டன் மற்றும் பட்டேலின் வாதங்கள் காரணமாக, காந்தியால் கைவிடப் படுவதைக் கண்டு மனம் நோகிறார். கடைசி வாய்ப்பாக லார்ட் மவுண்ட் பேட்டனைச் சந்தித்து, பிரிட்டிஷ் தூதுக் குழுவினரால் ஒப்புக்கொள்ளப்பட்ட மாநில சுயாட்சியையாவது குறைந்த பட்சம் ஏற்க வேண்டுகோள் விடுக்கிறார். அட்லீ மற்றும் மந்திரிசபையிடம் அதுகுறித்துப் பேசுவதாக வாக்களிக்கும் மவுண்ட்பேட்டன், தன் வாக்கை நிறைவேற்றவில்லை.
அவரது விருப்பத்திற்கு மாறாக, இந்தியா பிரிக்கப்படுவதோடு, மாநில சுயாட்சியும் வழங்கப்படவில்லை!! கடைசி வரை, ஏன் இந்திய பிரிவினைக்குப் பின்னரும், அதனை எதிர்த்தவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள்!!
மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள் எழுதிய ”இந்திய விடுதலை வெற்றி” நூலில் இருந்து….