கட்டுரையாளர் : ராபியா குமாரன், எழுத்தாளர்
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 16-05-2014 அன்று இரவு இணையதளத்தில் உலாவிக் கொண்டிருந்தேன். ஒரு தமிழ் நாளிதழின் இணையதளத்தில் நரேந்திர மோடியின் வெற்றிச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அச்செய்தியின் கீழ் ஆயிரக்கணக்கான பின்னூட்டங்கள். அத்தனையும் நரேந்திர மோடியை இந்திய தேசத்தைக் காக்கவும், முன்னேற்றவும் வந்த அவதாரம் என்ற நிலைக்கு தூக்கிப் பிடித்த பின்னூட்டங்கள். குஜராத் போன்று இந்தியாவும் இனி வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பற்றிய கவலை இருக்காது, பொருளாதாரத்தில் இந்தியா தன்னிறைவு பெறும், வல்லரசு நாடுகளின் பட்டியலில் இனி இந்தியாவின் பெயரும் இடம்பெறும், இந்தியாவைக் காக்க வந்த கடவுள், ஏழைகளின் கண்ணீரைத் துடைக்க அவதரித்த மகான், இளைஞர்களின் ஏக்கங்களுக்கு தீர்வைத் தரப்போகும் மகாபுருஷர் என்றெல்லாம் இடப்பட்டிருந்த பின்னூட்டங்கள் இன்றும் நினைவில் இருக்கின்றன.
உண்மையில் அன்றைய தினம் சிறுபான்மையினர் தவிர்த்து மற்ற மக்கள் அனைவரும் மோடியின் வெற்றியை அவ்வாறுதான் பார்த்தார்கள். காரணம், 2002ஆம் ஆண்டு குஜராத் படுகொலையை முன்நின்று நடத்திய மோடி ஒட்டுமொத்த இந்தியாவின் சிறுபான்மையின மக்களின் நம்பிக்கையையும் இழந்திருந்தார். மதவாதத்தை வைத்தே அரசியல் செய்யும் பாரதீய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் குஜராத்தில் நடைபெற்ற சம்பவம் நாடு முழுவதும் நடக்கும், சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுவார்கள், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்கின்ற அச்சம் சிறுபான்மையினருக்கு மட்டுமல்லாது நாட்டின் நலனில் அக்கறை கொண்ட அனைவருக்கும் இருந்தது.
ஆனால் நரேந்திர மோடிக்கு ஊடகங்கள் கொடுத்த வளர்ச்சி நாயகன் என்ற பிம்பத்தின் காரணமாக பெரும்பாலான இந்திய மக்கள் அவரது வெற்றியைக் கொண்டாடினர். பல இளைஞர்கள் மோடியை தனது ரோல்மாடலாக நினைத்தனர். மோடி இந்தியப் பிரதமராக பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரை ரோல் மாடலாகக் கொண்ட இளைஞர்களின் இன்றைய மனநிலை எப்படி இருக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால் முற்றிலும் எதிர்மாறாகத்தான் இருக்கின்றது. அன்று சமூக வலைதளங்களில் மோடியைத் தூக்கிப்பிடித்த இளைஞர்கள்தான் இன்று அதே சமூக வலைதளங்களில் பா.ஜ.க ஆட்சிக்கு எதிரான தங்களது சாட்டையைச் சுழற்றுகின்றனர்.
மதவாத ஆட்சியை நடத்துவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் கார்ப்பரேட்களின் நலனுக்கான ஆட்சியையும் சேர்த்தே நடத்துவார்கள் என்பது யாரும் எதிர்பார்த்திடாத ஒன்று. மத்திய அரசின் மோசமான ஆட்சியினால் சிறுபான்மையினர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய மக்களும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஜி.எஸ்.டி வரி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, நாளுக்கு நாள் உயர்ந்து வரும் விலைவாசி, மானியங்கள் ரத்து உள்ளிட்ட தவறான நடவடிக்கைகளாலும், திட்டங்களினாலும், பொருளாதாரக் கொள்கைகளினாலும் ஒட்டுமொத்த இந்திய மக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பொது மக்களும், பிரபலங்களும், படைப்பாளிகளும் தாங்கள் பா.ஜ.கவிற்கு வாக்களித்ததை எண்ணி வருந்துவதாகவும், தற்போது பா.ஜ.க.விற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும் வெளிப்படையாக அறிவித்து வருகின்றனர்.
பா.ஜ.க.வின் மக்கள் விரோத ஆட்சிக்கு சரியான பாடம் புகட்ட ஒட்டு மொத்த தேசமும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கியுள்ளது.
ஆயினும், 2019 நாடாளுமன்றத் தேர்தல் இந்திய முஸ்லிம்களைப் பொறுத்தவரை மிகவும் சவலான தேர்தலாகும். ஏனெனில், பா.ஜ.க ஆட்சியில் மற்ற மக்கள் தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும்தான் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் முஸ்லிம்களைப் பொறுத்தவரை இந்தியாவில் தங்களது இருப்பும், பாதுகாப்புமே கேள்விக்குறியாக இருக்கிறது. அதற்கு நான்கு ஆண்டுகாலமாக இந்தியாவில் நடந்துவரும் நிகழ்வுகளே சாட்சியாகும். அவற்றில் ஒரு சிலவற்றை மட்டும் இக்கட்டுரையில் காண்போம்.
பசுப் படுகொலைகள்:
நடைமுறையில் இருந்த மிருகவதைத் தடைச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்து மாட்டிறைச்சி தடைச்சட்டம் என்ற பெயரில் ஆளும் பா.ஜ.க அரசு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து பசுக்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் பசுக் குண்டர்கள் நாடுமுழுவதும் பல்வேறு அக்கிரமங்களை அரங்கேற்றினர். 2015ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் இறைச்சிக்காக மாடுகளை வெட்டியதாகக் கூறி அப்துல் குரோஷி என்பவரை பசு குண்டர்கள் கொலை செய்தனர். அதே ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி உத்திரப்பிரதேசத்தில் உள்ள தாத்ரி என்னும் ஊரில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் கூறி முகம்மது அக்லக் என்ற 70 வயது முதியவரை அடித்தே கொலை செய்தனர். அதே ஆண்டில் அக்டோபர் 9ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி பெட்ரோல் குண்டு வீசி ஒருவர் கொல்லப்பட்டார். 2016 ஜனவரி 13ஆம் நாள் மத்திய பிரதேச மாநில ரயில் நிலையம் ஒன்றில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி கணவன், மனைவி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
2016 மார்ச் 18ஆம் நாள் ஜார்கண்ட் மாநிலத்தில் மாட்டிறைச்சிக்காக மாடுகளை வெட்டியதாகக் கூறி மூன்று முஸ்லிம் இளைஞர்களைக் கடுமையாகத் தாக்கி, மூவரையும் தூக்கிலிட்டு படுகொலை செய்தனர். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 2ஆம் தேதி ஹரியானா மாநிலத்தில் இறைச்சிக்காக மாடுகளை ஏற்றிச் சென்றதாகக் கூறி அப்பாஸ் என்பவரைக் கொலை செய்தனர். அதே ஆண்டில் ஜூன் மாதம் 2ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி தலி;த் இளைஞர்கள் 5பேர் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டனர். ஜூன் மாதம் 10ஆம் தேதி ஹரியானா மாநிலம் குர்கானில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக் கூறி 2பேர் பேருக்கு மாட்டு சாணத்தைப் புகட்டினர். 2016 ஜூலை 15ஆம் நாள் குஜராத் மாநிலம் ஊனாவில் மாட்டுத் தோலை உரித்ததாகக் கூறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தாக்கப்பட்டனர்.
2016, ஆகஸ்ட் 24ஆம் நாள் ஹரியானா மாநிலத்தில் மாடுகளை கொன்றதாகக் கூறி முஸ்லிம் தம்பதியினர்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர். 2017 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் இரண்டு பேர் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி கொலை செய்யப்பட்டனர். அதே ஆண்டு ஜூன் 23ஆம் தேதி டெல்லியில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாகக் கூறி 4பேர் தாக்கப்பட்டனர். மேலும் ஜார்கண்ட் மாநிலத்தில் முஸ்லிம் ஒருவரின் வீட்டில் பசுவின் தலை கிடந்தது என்று கூறப்பட்டு அவரது வீடு தீக்கரையாக்கப்பட்டது. பசு குண்டர்களின் தாக்குதல்களுக்கும், அராஜகத்திற்கும் முஸ்லிம்கள் மட்டுமல்லாது தலித்களும் ஆளாகினர். மாட்டிறைச்சி விற்பனைக்கான தடைச் சட்டத்தை அடுத்து முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் பசுக் குண்டர்களால் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. உண்மையில் இந்த தாக்குதல்களுக்குப் பின்னணியில் பசுக்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் துளியும் கிடையாது. முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்பது மட்டுமே பசுக் குண்டர்களின் நோக்கமாக இருக்கிறது.
டாக்டர் கபீல் கான்:
உத்திரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2017 ஆகஸ்ட் மாதம் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 70 குழந்தைகள் மரணமடைந்தன. ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் நிறுவனத்திற்கு பணம் பட்டுவாடா செய்யப்படாத காரணத்தால் சிலிண்டர் விநியோகம் செய்வதை அந்நிறுவனம் நிறுத்தியது. அதனைத் தொடர்ந்து அம்மருத்துவமனையில் பணியாற்றி வந்த கபீல் கான் என்ற மருத்துவர் தனது சொந்த செலவில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கி பல குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றினார். கோராக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் இறந்த சம்பவத்தின் பின்னணியில் இருந்த அரசின் தவறை சுட்டிக் காட்டியதற்காக உத்திரப்பிரதேச அரசு மருத்துவர் கபீல் கானை கைது செய்து சிறையில் அடைத்தது. சிறையில் அடைக்கப்பட்டு ஏழு மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருந்த கபீல் கானை ஜாமீனில் எடுக்க அவரது குடும்பத்தினர் முயன்றனர். ஆறு முறை அவருக்கான ஜாமீன் மனுவை லக்னோ நீதி மன்றம் நிராகரித்த பின்னர் அலகாபாத் உயர்நீதி மன்றம் அவரை ஜாமீனில் விடுவித்தது. சிறையில் இருந்து விடுதலையானாலும் இன்று வரை அவரது குடும்பத்தினர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். தனது சொந்தப் பணத்தை செலவு செய்து பல குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய டாக்டருக்கு சிறை தண்டனையா? என்ற கேள்வி எழலாம். அந்த கேள்விக்கு பதில் அவரது பெயர் கபீல் கான் என்பதே. மதவாத ஆட்சியில் முஸ்லிம் ஒருவரை கைது செய்து தண்டிப்பதற்கு எந்த முகாந்திரமும் தேவை இல்லை, அவர் தவறு செய்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை என்பதற்கு மருத்துவர் கபீல் கான் மீதான வழக்கே ஆதாரமாகும்.
ஆசிஃபா வன்கொடுமை:
காஷ்மீரில் உள்ள கத்வா என்னும் சிற்றூரைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி ஆசிஃபாவிற்கு ஏற்பட்ட துயரமும், அவலமும் ஒட்டுமொத்த இந்திய தேசத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குதிரை மேய்க்கச் சென்ற சிறுமியை கடத்தி ஒரு கோயிலின் கருவறைக்குள் வைத்து மூன்று நாட்கள் கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதை அத்தனை சீக்கிரம் யாரும் மறந்துவிடமுடியாது. சிறுமியை வன்புணர்வுக்கு ஆளாக்கிய எட்டு பேரையும் கைது செய்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற போது வழக்கறிஞர்கள் பலர் திரண்டு குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் போராடினர். குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில் பா.ஜ.க.வைச் சார்ந்த எம்.எல்.ஏ கலந்து கொண்டதும், பிற மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க ஆதரவாளர்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்ததும் மதச்சார்பற்ற மக்களிடத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. முஸ்லிம்களுக்கு இந்துக்களின் மீது பயம் வர வேண்டும் என்பதற்காகவே எட்டு வயது முஸ்லிம் சிறுமியை கடத்தி வன்புணர்வுக்கு ஆட்படுத்தி கொடூரமாகக் கொலை செய்ததாக குற்றவாளிகள் கூறினார்கள். ஆசிஃபா போன்ற சிறுமிகளுக்கும் பாதுகாப்பில்லாத சூழலே நாட்டில் நிலவுகிறது என்பதைத்தான் இக்கொடூர சம்பவம் உணர்த்துகிறது.
ஜாகீர் நாயக் மீதான தடை:
2016ஆம் ஆண்டு இஸ்லாமிய மார்க்க அழைப்பாளர் ஜாகீர் நாயக் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுகிறார், இளைஞர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபடுமாறு தூண்டுகிறார், தீவிரவாத இயக்கங்களுக்கு நிதியுதவி அளிக்கிறார் என்று கூறி தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ ஜாகீர் நாயக் மீது வழக்குப் பதிவு செய்தது. அதனையடுத்து அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டதோடு அவரது இஸ்லாமிய ஆய்வு மையத்திற்கும் மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்தது. இதனையடுத்து ஜாகீர் நாயக் 2016ஆம் ஆண்டு மலேசியாவிற்குச் சென்றார். ஜாகீர் நாயக்கை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவருக்கு ரெட்கார்னர் நோட்டீசும் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்மீது எந்த நீதிமன்றத்திலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்று கூறி இன்டர்போல் நோட்டீசை ஏற்க மறுத்தது. இஸ்லாமிய அழைப்புப் பணியில் உலகளவில் பிரபலமாக இருந்த ஜாகீர் நாயக்கையும், அவரது ஆராய்ச்சி மையத்தையும் முடக்குவதன் மூலம் இஸ்லாமிய அழைப்புப் பணியில் தொய்வினை ஏற்படுத்த வேண்டும் என்பது ஜாகீர்நாயக் மீதான அடக்குமுறைக்கு பின்னணியில் உள்ள காரணியாகும்.
ஹஜ்மானியம் ரத்து:
புனித ஹஜ் பயணத்திற்காக சவூதி அரேபியா செல்லும் முஸ்லிம்களுக்கு 1954ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. இந்த மானியத்தை மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரத்து செய்தது. சிறுபான்மையினர் விவகாரங்கள் துறையின் அதிகாரம் பெற்ற குழு அளித்த பரிந்துரையை ஏற்று ஹஜ் மானியத்தை ரத்து செய்வதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார். கண்ணியமான முறையில் சிறுபான்மையினர்களுக்கு அதிகாரம் அளிக்கும் மத்திய அரசின் கொள்கை முடிவு இது என்று அப்பாஸ் நக்வி கூறினாலும் இது சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடடிவடிக்கைகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. மதச்சார்பற்ற நாட்டில் குறிப்பிட்ட மதத்தினருக்கு மானியம் வழங்குவது ஏற்றுக் கொள்ள முடியாதது என்ற வாதத்தை வகுப்புவாத சக்திகள் முன்வைக்கின்றனர். ஆனால் இந்த வாதத்தில் அமர்நாத், கைலாஷ், மானசரோவர் போன்ற புனிய யாத்திரைகளுக்கும் மானியம் வழங்கப்படுவதை வசதியாக மறைத்துவிடகின்றனர். (உண்மையில் மத்திய அரசின் ஹஜ் மானியத்தால் முஸ்லிம்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்பது வேறு விஷயம்).
சர்ச்சைப் பேச்சுகள்:
பா.ஜ.க.வைச் சார்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் அடிக்கடி சிறுபான்மையினருக்கு எதிராக குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான விஷமக் கருத்துகளைத் தெரிவித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. முஸ்லிம்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம், இந்தியாவில் இருக்கும் அனைவரும் ராமரின் பிள்ளைகள், குடும்பக்கட்டுப்பாடு செய்யாத முஸ்லிம்களின் வாக்குரிமையைப் பறிக்க வேண்டும், சூரிய நமஸ்காரம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேறட்டும், முஸ்லிம்களின் சடலங்களைப் புதைப்பதற்குப் பதிலாக எரிக்க வேண்டும், முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கோ வங்க தேசத்திற்கோ செல்லட்டும், அவர்களுக்கு இந்தியாவில் என்ன வேலை, தாஜ்மஹால் விரைவில் தேஜ் கோயிலாக மாறும், தாஜ்மஹாலின் பெயரை ராம் மஹால் என்று மாற்ற வேண்டும் என வெளிப்படையாகவே அறிக்கை விடுத்து வருகின்றனர். முஸ்லிம்களின் மீதான அவர்களின் வெறுப்புப் பிரச்சாரத்தை அவர்கள் சார்ந்துள்ள கட்சியோ அல்லது நீதிமன்றங்களோ இதுவரை தண்டிக்கவும் இல்லை, கண்டிக்கவும் இல்லை. தேசிய தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயகச் சீர்திருத்த அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களிடம் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியதாக பா.ஜ.கவைச் சார்ந்த 10 எம்.பி.க்கள் மற்றும் 17 எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த வழக்குகள் அனைத்தும் பெயரளவில்தான் உள்ளன.
முஸ்லிம் விரோத உ.பி. அரசு:
உத்திரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றது முதல் அம்மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளும், அடக்குமுறைகளும் தொடர்ந்து வருகின்றன. மாட்டிறைச்சிக்குத் தடை, தொப்பி அணியத் தடை, தாடி வைக்கத் தடை, மதரஸாக்களைக் கண்காணித்தல், குர்பானி கொடுப்பதில் கெடுபிடி, பொய் வழக்கு, போலி என்கவுண்டர் என முஸ்லிம்களுக்கு எதிரான வன்மங்கள் தொடர்கதையாகி வருகின்றன. உத்திர பிரதேசத்தில் 120க்கும் மேற்பட்ட என்கவுண்டர்கள் நடத்தப்பட்டுள்ளன. 2017ஆம் ஆண்டில் மட்டும் 44 பேர் மதச் சண்டையில் கொல்லப்பட்டுள்ளனர். 540 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவங்களில் பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்களே. அம்மாநிலத்தில் மட்டும் 160 முஸ்லிம்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மதம் சார்ந்த வன்முறைகளைத் தூண்டுவதும் அதைத் தொடர்ந்து முஸ்லிம்களைக் கைது செய்து சிறையில் அடைப்பதும் முடிவில்லாமல் தொடர்ந்து வருகின்றன. முசாபர் நகர் கலவரத்தின் பலனாக 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை அறுவடை செய்த பா.ஜ.க 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்காக மேலும் பல மதமோதல்களை உருவாக்கும் என்ற அச்சமே அம்மாநிலத்தில் நிலவி வருகிறது.
முஸ்லிம் வாக்காளர்கள் நீக்கம்:
நாடு முழுவதும் உள்ள வாக்காளர்கள் பட்டியலில் இருந்து முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்கள் திட்மிட்டு நீக்கப்பட்டு வருகின்றன. தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் பெருவாரியாக உள்ள தொகுதிகளை பிரிப்பதும், முஸ்லிம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதும் சப்தமின்றி நடந்து வருகின்றன. தமிழகத்தில் 11 இலட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் வாக்குப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், கர்நாடகாவில் 15 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் CRDDP என்ற தன்னார்வ நிறுவனம் கண்டறிந்து கூறியுள்ளது. வாக்களிப்பது ஒரு நாட்டுக் குடிமகனின் அடிப்படை உரிமையாகும். அந்த வகையில் முஸ்லிம்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் முயற்சியில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருவது அப்பட்டமான முஸ்லிம் விரோதப் போக்கையே படம்பிடித்துக் காட்டுகிறது.
தமிழகத்தில் முஸ்லிம்களின் நிலை:
வடமாநிலங்கள் அளவிற்கு தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏதும் இல்லையென்றாலும், முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துருவாக்கவும், இந்துத்துவ சிந்தனையும் தமிழக மண்ணிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. அனைத்துக் கிராமங்களிலும் இந்துத்துவ சிந்தனைகள் வீரியமாக வேரூன்றி வருகின்றன. அதன் நீட்சியாகத்தான் முஸ்லிம்களின் கடைகளில் பொருட்கள் வாங்காதீர்கள், இந்தியா இந்துக்களுக்கே, முஸ்லிம்கள் அந்நியர்கள் போன்ற விஷமப் பிரச்சாரங்கள் தமிழகத்திலும் செய்யப்படுகின்றன. யதார்த்தத்தை உணராமல் இது பெரியார் மண், இம்மண்ணில் மதவாத சக்திகள் தலையெடுக்க முடியாது என்று இனியும் பேசிக்கொண்டிருந்தால் நிலைமை மேலும் சிக்கலாகும் என்பதுதான் யதார்த்தமான உண்மை.
இதுபோக முத்தலாக் தடைச் சட்டம், முஸ்லிம்களின் பெயர்களில் உள்ள சாலைகள், ஊர்களின் பெயர்களை மாற்றுதல், பாடப் புத்தகங்களில் காவிச் சிந்தனை, நீதித்துறையில் காவிச் சிந்தனைவாதிகள் என ஒவ்வொரு விஷயத்திலும் முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே ஆளும் பா.ஜ.க. அரசு எடுத்துவருகிறது. ஆனால் தன்னைச் சுற்றி இத்தனை சம்பங்கள் அரங்கேறிய பின்னரும் இந்திய முஸ்லிம் சமூகம் இன்னும் விழித்துக் கொண்டதாகத் தெரியவில்லை. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற ராமர் கோவில் பிரச்சனை, ரத யாத்திரை, மதக் கலவரங்கள், மீடியாக்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருதல், வாக்குப் பதிவு இயந்திரங்களில் குளறுபடி செய்தல் என எத்தனையோ வழி முறைகளை பா.ஜ.க கையாளலாம்.
ஆனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மதவாத சக்திகளை வீழ்த்துவதற்காக வகுத்துள்ள திட்டங்கள் என்ன? வியூகங்கள் என்னென்ன? தேசிய அளவில் மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைக்க ஏதேனும் செயல் திட்டம் முஸ்லிம்களிடத்தில் உள்ளனவா? அதை நடைமுறைப்படுத்த என்னென்ன வழிமுறைகளைக் கையாளப்போகிறார்கள்? என்பன போன்ற கேள்விகள் நிறையவே உள்ளன. ஆனால் அதற்கான பதில்கள்தான் யாரிடத்திலும் இருப்பதாகத் தெரியவில்லை. தன்னைச் சூழ்ந்துள்ள அபாயத்தை உணர்ந்ததாகவும் தெரியவில்லை.
2019 நாடாளுமன்றத் தேர்தல் இந்திய வரலாற்றில் குறிப்பாக இந்திய முஸ்லிம்களின் வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்திய முஸ்லிம்கள் சந்தித்து வருவது அன்றாட வாழ்க்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, அடிப்படை உரிமை சார்ந்த, இந்திய நாட்டில் தனது இருப்பு சார்ந்த பிரச்சனையும்கூட. இதை எப்போது உணரப் போகிறோம்? இருக்கின்ற ஒரு சில மாதங்களில் எந்த மாதிரியான முன்னெடுப்புகளை எடுக்கப் போகிறோம்?
-ராபியா குமாரன்.
http://www.rabiyakumaaran.com