எழுதியவர் : மு.காஜா மைதீன்
மதியத்தைத் தாண்டி மாலையைத் தொடவிருந்த ஒரு பொழுதில், ஒரு கோப்பைத் தேநீருக்கு காத்திருக்கும் நேரத்தில் அந்த மாணவனின் உயிரைக் குடிக்க அங்கே துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருக்கிறது. புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவரான உமர் காலித் அந்தத் தாக்குதலில் உயிர்பிழைத்துவிட்டார். காந்தி, கல்புர்கி, தபோல்கர், பன்சாரே, கௌரி லங்கேஷ் என்று பாசிசத்தின் நடப்புக் கணக்கில் உமர்காலித் பெயர் சேராமல் போனது ஒரு குருட்டு அதிர்ஷ்டம் தான்.
டெல்லி கான்ஸ்ட்டியூசன் க்ளப்பில் நடைபெற்ற இந்த தாக்குதலில் உமர் காலித் தவிர வழக்கறிஞர் பிரசாந்த் பூசன், பத்திரிகையாளர் அமித்சென் குப்தா, சாலிடாரிட்டி அமைப்பின் பிஎம்.சாலிஹ், காணாமல் போன நஜீப் தாயார் ஃபாத்திமா நபீஸ், ரோகித் வெமுலாவின் தாயார், டாக்டர் கபீல்கான் என்று பலரும் அங்கே இருந்தனர். அதாவது சமீப காலங்களில் ஆளும் பாஜகவிற்கு யாரெல்லாம் சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார்களோ அனைவரும் ஒரே மேடையில் இருந்துள்ளபோது தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த கூட்டத்தில் துப்பாக்கி வெடித்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை. எப்போதெல்லாம் இந்துத்துவத்திற்கும், அரச பயங்கரவாதத்திற்கும் எதிரான குரல் ஓங்கி ஒலிக்கிறதோ அப்போதெல்லாம் கருத்துகளுடன் மோத திராணியற்ற, ஆண்மையற்ற பாசிச, பரிவார கும்பல் ஆயுதம் கொண்டு அடக்கும் ஈனச்செயல்களுக்கே முன்னுரிமை கொடுக்கும். காந்தி முதல் உமர்காலித் வரை சங்கப் பரிவாரங்களின் உச்சபட்ச முடிவு இதுவாகத்தான் இருந்திருக்கிறது.
இந்துத்துவ இயக்கங்கள் தங்களை இந்துக்களின் மீட்பராக அடையாளப்படுத்திக் கொண்டாலும் அவை ஒரு குறிப்பிட்ட சாதியினரைத் தூக்கிப்பிடிக்கும் சாதியக் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டதுதான். அவர்களது நோக்கம் ஒடுக்கப்பட்டவர்களை பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய முடியாதவர்களாக வைத்திருப்பதும், பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிப்பதாகவுமே உள்ளது. அதனால்தான் சங்கப்பரிவார இயக்கங்கள் சமத்துவம் பேசுகின்ற, பொருளாதார சுதந்திரம் பேசுகின்ற, தனிமனித சுதந்திரம் பேசுகின்ற, பெண்ணுரிமைக்காக போராடுகின்ற இடதுசாரியினர் மீது ஒவ்வாமை கொள்கின்றனர்.
இந்த ஒவ்வாமை தான் 2016ல் அப்சல் குருவுக்கு இரங்கல் கூட்டம் நடத்தியதில் இருந்து உமர் காலித் உள்ளிட்ட JNU மாணவர்கள் தொடர்ந்து குறி வைக்கப்பட காரணம். அர்னாப் கோஸ்வாமி போன்ற ஊடக பாசிசவாதிகள் இவர் வெளிநாட்டிற்கு சென்று தீவிரவாத பயிற்சி பெற்று வருகிறார் என்று ப்ரைம் டைம் விவாதங்களில் அடிவயிறு வெடிக்க கதறினார்கள். ஆனால் தன்னிடம் பாஸ்போர்ட் இல்லாதபோது எப்படி வெளிநாடு செல்ல முடியும் என்று கேட்டு அவர்களை மூக்கறுத்தார்.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த டெல்லி காவல்துறை, பிரதமர் அலுவலகம், குடியரசு தலைவர் மாளிகை போன்ற உயர் பாதுகாப்பு பகுதியில் இத்தகைய தாக்குதல் நடைபெற வாயப்பில்லை என்றனர். ஆனால் அரசாங்கமே முன்நின்று நடத்தும் தாக்குதலுக்கு மேலே சொன்ன எந்த இடமும் சிரமமில்லை என்பதை அறியாதவர்களா மக்கள்?
இந்த சம்பவத்திற்கு பிறகு பேசிய உமர் காலித் “உயிருடன் இருக்கிறேன், அதனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று கூறினார்.
ஆனால் அவர் வேறு சில காரணங்களுக்காகவும் மகிழ்ச்சி கொள்ள வேண்டும். தேச துரோக வழக்கு பதிந்து இன்று வரை குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்ய முடியாமல் தோற்றுப் போயிருக்கிறார்கள். பல்கலைக்கழகத்தில் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பிக்க விடாமல் தடுக்க முயன்று அதிலும் தோற்றுப்போனார்கள். தற்போது அவரது உயிரைப் பறிக்க முயன்று அதிலும் தோற்றுப் போயிருக்கிறார்கள். ஒரு பாசிச அரசு உமர் காலித் என்ற தனிநபரிடம் திரும்பப் திரும்பத் தோற்றுக் கொண்டிருக்கிறது. அதற்காக அவர் மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.
உமர் காலித் போன்றவர்கள் இந்த போராட்டத்தில் கொல்லப்பட்டாலும் கூட பயமில்லாமல் விடுதலையை நோக்கிய பயணத்தில் பாசிசத்தின் துப்பாக்கி குண்டுகள் ஒரு நாள் தீர்ந்தாக வேண்டும் என்பது இயற்கையின் நியதி.
கட்டுரையாளரை தொடர்பு கொள்ள : 9976412260