அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த மாதம் ஜூலை30 ஆம் தேதி NRCயின் தேசிய குடிமக்கள் வரைவு பட்டியல் வெளியானது. 1951 ஆம் ஆண்டு வெளியிடபட்ட பட்டியலை புதுப்பிக்க 2015ம் ஆண்டு உச்ச நீதி மன்றம் பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில் உச்ச நீதி மன்ற கண்காணிப்பில் உருவாக்கபட்ட பட்டியல் NRC. அங்கு வாழும் மக்களில் சட்ட விரோதமாக குடியிருப்பவர்களை கண்டறியும் நோக்கில் எடுக்கப்பட்ட குடிமக்கள் கணக்கெடுப்பு பணியே இதன் நோக்கம். 1985 ஆம் ஆண்டு அஸ்ஸாம் போராட்ட குழுவுடன் மத்திய, மாநில அரசுகளால் போடப்பட்ட அஸ்ஸாம் accord எனப்படும் ஒப்பந்தத்தின் அடிபடையில் 1971 ஆம் ஆண்டு மார்ச்24க்கு முன் வாழ்ந்தவர்களுக்கே குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அதற்கு பின் குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கக் கூடாது என்ற புரிந்துணர்வு ஏற்பட்டது. இதன் அடிபடையில் உச்ச நீதிமன்றத்தில் என்ஆர்சி எனப்படும் குடிமக்கள் கணக்கெடுப்பு பணியை தொடங்க வேண்டும் என்று மனு அளித்து அங்கு வாழும் மக்களில் மேலே சொல்லபட்ட தேதியின் அடிப்படையில் குடிமக்கள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இவ்வாறு அங்கு வாழும் 3 கோடியே 29 லட்சம் மக்கள் விண்ணப்பித்து அதில் ஏறத்தாழ 40 லட்சம் மக்கள் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளனர். இது அந்த மக்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கியுள்ளது.இந்த பட்டியலுக்கு பல்வேறு எதிர்ப்புகள் வந்தது. இருப்பினும் அஸ்ஸாம் அரசியல் எழுத்தாளர்கள் (hiren gohain) ஹிரேன் கோஹைன் போன்றவர்கள் இந்த பட்டியலின் அவசியத்தை பற்றி எழுதி வருகின்றனர்.இந்த கட்டுரையில் அவர்கள் முன்னிறுத்தும் வாதங்களையும், பல்வேறு அரசியல் சிக்கல்கள் இருக்கும் இந்த விடயத்தில் திசை திருப்பும் முயற்சியாக சங்கபரிவார் கும்பல் முஸ்லிம் விரோத அரசியலை முன்னிறுத்துவதை சுருக்கமாக காணலாம்.
அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் கடந்த நூற்றாண்டுகளின் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம், பின்னர் ஏகாதிபத்திய பொருளாதார கொள்கையைத் தொடர்ந்து அங்கு வாழும் மலைவாழ் மக்கள் நில உரிமை இழந்து,வளங்கள் இழந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். இது தனி நாடு கோரிக்கை வைத்து ஆயுத போராட்ட குழுக்கள் உருவாவதற்கும் வித்திட்டது. பிரிட்டிஷ் ஆட்சி முடியப்பெற்று இந்தியா சுதந்திர அரசு நிர்வகித்த பின் ஆயுத குழுக்களை ராணுவம் மூலம் அடக்கும் கொள்கையே முதல் பணியாக விளங்கியது. இதனால் அங்கு வாழும் மக்கள் கடுமையான அடக்குமுறைக்கு உள்ளாகினர். இந்த சுரண்டல் பொருளாதார கொள்கையின் விளைவாக அண்டை மாநிலங்களில் இருந்து மக்கள் பெருமளவு குடியேற்றங்கள் நிகழ்ந்து அங்கு நில நெருக்கடி ,மொழி அரசியல் தோன்றியது.
வங்காள மொழி மக்கள் குடியேற்றம்
பிரபல மனித உரிமை அரசியல் எழுத்தாளர் ஹரீஷ் மாந்தர் வங்காள மக்களின் குடியேற்றம் பற்றி குறிப்பிடுகையில் கடந்த மூன்று நூற்றாண்டுகளில் அஸ்ஸாமின் கலை,இலக்கியம்.உணவு,பண்பாடு என வங்காள மொழியும் அஸ்ஸாம் மாநில அடையாளத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளது என குறிப்பிடுகிறார்.வங்காள மொழி பேசும் மக்கள் மூன்று கட்டங்களாக அஸ்ஸாமில் பெருமளவு குடிபெயர்ந்துள்ளனர்.பிரிட்டிஷ் காலனி ஆட்சியில் அஸ்ஸாம், வங்காளத்தின் ஒரு பகுதியாக நிர்வகிக்கபட்டது. இந்த கால கட்டத்தில் தேயிலை தோட்டங்களில் வேலை செய்ய நிறைய வங்க மொழி பேசும் மக்கள் குடிபெயர்ந்துள்ளனர். பின்னர் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை காலத்திலும் பெரிய அளவில் குடிபெயர்ப்பும், இறுதியாக வங்காள தேசம் சுதந்திரப் போரிலும் பெரிய அளவு குடிபெயர்ப்பு நடந்தது. இது பூர்வீக மக்கள்- வெளியாட்கள் என்ற பிரிவினையை அதிகப்படுத்தி வங்க தேசத்தில் இருந்து குடியேறியவர்கள் வெளியேற வேண்டும் என்ற முழக்கத்தோடு 1970,80 களில் மாநிலம் தழுவிய மிகப் பெரிய போராட்டங்கள் ஏற்பட்டது. அப்போது நிறைய உயிர் சேதமும் நேரிட்டது. துப்பாக்கி சூட்டில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் பலியாகினர். பின்னர் அரசுக்கு எதிரான போராட்டம் வங்க மொழி பேசும் மக்கள் மீதும் இன வெறி தாக்குதலாக உருமாறி 1983 நெல்லி படுகொலைகள் இந்தியாவை உலுக்கியது. நெல்லி இன படுகொலையில் சுமார் 2000 த்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யபட்டனர். இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து அஸ்ஸாமில் அமைதி நிலவ போராட்ட குழுவுடன் அன்றய பிரதமர் ராஜீவ் காந்தி முன்னிலையில் ஒப்பந்தம் போடபட்டது. அதில் முக்கியமான குறிப்பு 1971 மார்ச் 24க்கு பிறகு குடிபெயர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கக் கூடாது என்பதாகும். அந்த குறிப்பிட்ட தேதியில் பாகிஸ்தான் ராணுவம் அடக்குமுறை கட்டவிழ்த்து பல லட்சம் மக்கள் வங்க தேசத்திலிருந்து குடி பெயர்ந்தனர். இவ்வாறு பல லட்சம் மக்கள் குறுகிய கால கட்டத்தில் குடி பெயர்ப்பு மூலம் அஸ்ஸாம் வங்க மொழி பேசும் மக்கள் ஆதிக்கம் நிறைந்ததாகி விடும் என்ற மொழி அரசியலை சங்பரிவார் அமைப்புகள் முஸ்லிம்களுக்கு எதிரான அரசியலாக மாற்ற முயற்சித்து வருகின்றனர்.
அஸ்ஸாமில் முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரம்
அஸ்ஸாமில் 12ஆம் நூற்றாண்டிலிருந்து அஸ்ஸாம் மொழி பேசும் பூர்வீக மக்கள் இஸ்லாமிய மதம் தழுவி முஸ்லிம்களாக வாழ்ந்து வருகின்றனர். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வங்காள முஸ்லிம்கள் குடிபெயர்ந்தாலும் பெரும்பான்மையான முஸ்லிம்கள் அஸ்ஸாம் மொழி பேசும் மக்களாக வாழ்கின்றனர். ஆனால் சங்பரிவாரின் முஸ்லிம் விரோத அரசியலும், வட இந்திய ஊடகங்களும் முஸ்லிம்கள் மக்கள் தொகையை சுட்டிக் காட்டி முஸ்லிம்கள் அனைவரும் வங்க தேசத்தில் இருந்து குடியேறியவர்கள் போன்ற வன்மத்தை பரப்புகின்றனர். ஊடகத்தின் ஒரு வன்மம் முஸ்லிம் பெரும்பான்மயான மாவட்டங்கள் அதிகமாக உருவாகி உள்ளது என்று கூறி முஸ்லிம்கள் மக்கள் தொகையினால் தான் அங்கு நில உரிமை இழக்கப்படுவது போன்று முஸ்லிம் விரோத கண்ணோட்டதை பரப்புகின்றனர். ஆனால் முஸ்லிம்களைப் போல பிற இன குழுக்களும் தங்களின் பெரும்பான்மை பகுதிகளை பெருக்கியும், கழித்தும் வாழ்கின்றனர். தற்போது நடைபெற்ற கணக்கெடுப்பு முஸ்லிம்களின் மேல் சுமத்தபட்ட வன்மப் பிரசாரத்திற்கு முற்றுப்புள்ளியாக அமையும் எனவும் ,முஸ்லிம் மக்கள் வெளியாட்கள் என்ற முத்திரை இல்லாமல் வாழ வழிவகுக்கும் எனவும் அஸ்ஸாம் அரசியல் சிந்தனையாளர்கள் இந்த கணக்கெடுப்பை வரவேற்றுள்ளனர்.
பா.ஜ.க. வின் முஸ்லிம் விரோத குடியுரிமை சட்ட திருத்தம்
தற்போது குடியுரிமை சட்டத்தில் வன்மம் நிறைந்த சட்ட திருத்தத்தை கொண்டு வர முயல்கின்றனர். அதில் அண்டை நாடுகளில் பாகிஸ்தான்,வங்க தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் மத சிறுபான்மையினருக்கு மட்டும் குடியுரிமை வழங்கும் சட்டம். இதன் மூலம் தற்போது கணக்கெடுப்பு நடத்தப்பட்ட அஸ்ஸாமில் விடுபட்டுள்ள மக்களை மத ரீதியாக பிரித்து அங்கே
இனவாத அரசியலை தொடர செய்தும், உள்நாட்டு போரினால் பாதிக்கபட்ட மியான்மர், இலங்கை நாடுகளை தவிர்த்து முஸ்லிம்கள் பெரும்பான்மை கொண்ட நாடுகளை மட்டும் குறி வைத்து அப்பட்டமான முஸ்லிம் விரோத அரசியல் செய்ய வழிவகுக்கும் சட்ட திருத்தம் ஆகும்.
தற்போது நடைபெற்ற கணக்கெடுப்பு பணியில் மிக முக்கியமான குற்றச்சாட்டு family tree என்ற குடும்ப உறுப்பினர் முறையை தவிர்த்தது. இதனால் பல குடும்பங்கள் தங்கள் இரத்த உறவுகளை குடியுரிமை பட்டியலில் சேர்க்க முடியாமல் தவிக்கின்றனர். மேலும் நிறைய கிராமப்புறங்களில் 18 வயது பூர்த்தி ஆகாமல் திருமணம் செய்து கொண்ட பெண்கள் சரியான திருமண சான்றிதழ் இல்லாமல் உள்ளதால் நிறைய பெண்களும் பாதிக்கபட்டுள்ளனர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக குடியுரிமை பட்டியலில் விடுபட்ட மக்களுக்கு என்ன வழி என்ற தொலை நோக்கு திட்டம் இல்லாமல் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது.
இவ்வாறு சிறுபான்மை இன குழுக்கள், மலை வாழ் மக்களின் நில உரிமை, அரசியல் உரிமைகள், இந்திய அரசின் குடியுரிமை வரைவு, அகதிகள் உரிமை,நல்வாழ்வு என பல தரப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க வேண்டிய தருணத்தில் நாட்டின் மேல் எந்த அக்கறையும் இல்லாமல் தன் குறுகிய தேர்தல் சுயநலம் மற்றும் அயோக்கிய மத வெறி அரசியலை மட்டும் கருத்தில் கொண்டு என்ஆர்சி மற்றும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா மூலம் முஸ்லிம் விரோத அரசியலை பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
-உமர் பாரூக்,
ஆராய்ச்சி மாணவர்,JNU.
கட்டுரைக்கு உதவிய தளங்கள் :
https://www.aljazeera.com/indepth/opinion/time-listened-plight-assam-foreigners-180803143309823.html
https://www.aljazeera.com/indepth/features/gohain-citizenship-issue-isn-settled-assam-180717090910612.html
https://scroll.in/article/807339/important-for-us-intellectuals-to-take-sides-hiren-gohain-on-why-the-bjp-is-bad-for-assam