இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு SIO வின் தேசிய தலைவர் நஹாஸ் மாலா அசாமில் தேசிய குடியுரிமைப் பதிவு(NRC) புதுப்பிப்பதில் அரங்கேறியுள்ள மனித உரிமை மீறல்கள் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவர் எச்.எல்.தத்துவிற்கு எழுதியுள்ள கடிதம்.
ஐயா,
வடகிழக்கு மாநிலமான அசாமில் குடியுரிமை தேசிய பதிவு (NRC) புதுப்பித்தல் தொடர்பாக சமீபத்தில் வெளியிடப்பட்ட இறுதி வரைவு குறித்து எழுதுகின்றேன். 40 இலட்சத்திற்கும் அதிகமான குடிமக்கள் NRC யில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் வெளிநாட்டினர் என்று அறிவிக்கப்படவும் இருக்கின்றனர். அசாமின் பெங்காலி பேசும் சிறுபான்மையினரை இலக்காகக் கொண்டதாக கூறப்படும் பரந்தளவிலான இனவழிச் சுத்திகரிப்பு என்று ஊடகங்கள் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர் எழுப்பிய சந்தேகங்களும் கவலைகளையும் இது நிரூபிப்பதாக உள்ளது.கள யதார்த்தங்களும் புள்ளிவிபரங்களும் கூட அதையே வெளிப்படுத்துகின்றன.
ப்ரத்யேகமாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையங்கள் ஏற்கனவே வங்காள மொழி பேசும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை அந்நியர்கள் என்று அறிவித்து ஆறுக்கும் மேற்பட்ட வெளியேற்றும் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆவணங்களற்ற பெற்றோர்களையும் பிள்ளைகளையும் பிரிக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வழியில் அசாமிலும் குடும்பங்கள் சிதைக்கப்பட்டுள்ளன. இலட்சக்கணக்கான மக்களை நிலமற்றவர்களாக மாற்றும் சமீபத்திய முயற்சி காரணமாக வன்முறைகள் எப்போது வேண்டுமானாலும் கட்டவிழ்த்து விடப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து முஸ்லிம் அகதிகளை வங்காளதேசத்திற்கு துரத்துவோம் என்ற அச்சுறுத்தல்கள் ஏற்பட்டிருந்தன. அண்டை நாடான வங்கதேசம் அத்தகைய வேண்டுகோளுக்கு நிச்சயம் இணங்காது. மியான்மரில் இருந்து வங்காளதேசத்திற்கு புலம்பெயர்ந்த ரோஹிங்க்ய மக்களைப் போல ஒரு நாடற்ற சமுதாயத்தை உருவாக்குவதாகவே இந்தியாவின் இத்தகைய முயற்சிகள் முடிவடையும். பல வருடங்களாக அசாமில் வாழ்ந்து வந்தவர்கள் திடீரென தங்கள் வாக்குரிமை, சொந்த உடைமைகள், நலவுகளை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சொந்தமாக நிலங்கள் வைத்திருப்பவர்கள் அருகில் வசிக்கும் தீய நோக்கம் கொண்டவர்களுக்கு இலகுவாக பலியாகக் கூடும். உலகில் இருக்கும் கோடிக்கணக்கான வீடற்ற மக்களுக்கு நல்ல முடிவினை உருவாக்க ஐநா அகதிகள் முகமை முயற்சி செய்து வரும் நிலையில் இந்தியாவின் இந்த நடவடிக்கை பெருத்த பின்னடவை ஏற்படுத்தும். மத்திய அமைச்சர் ஒருவர் NRC வரைவில் பெயர் இல்லாதவர்கள் வெளியேற்றும் முகாம்களில் அடைக்கப்படமாட்டார்கள், மாறாக இந்த வருட இறுதிக்குள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க வாய்ப்பு வழங்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், தங்கள் குடியுரிமை நிரூபிக்க முடியாத மக்களுக்கு ஒரு பரந்த, புதிய தடுப்பு முகாம் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பு முகாம்கள் நடைமுறையில் சிறைச்சாலைகளின் மாற்றியமைக்கப்பட்ட உருவமாக இருக்கப்போகின்றது. தடுப்பு முகாம்களில் உள்ள வாழ்க்கை நிலைமைகளும், வசதிகளும் சர்வதேச தரத்திற்கு ஈடாக இருக்கப்போவதில்லை. NHRC அமைத்த ஹர்ஷ் மண்தர்ஆய்வுக்குழு அறிக்கையின்படி(இந்த அறிக்கை NHRCஆல் ஏற்றுக்கொள்ளப்படவில்லை) அசாம் முழுவதும் உள்ள முகாம்களில் இருப்பவர்களுக்கு தனிப்பட்ட சுதந்திரம், அடிப்படை உரிமைகளான குடும்பத்தினருடன் தொடர்பு, தரமான வாழும் சூழல், சுகாதாரமான மருத்துவம் போன்றவை கிடைக்கப்பெறுவதில்லை.
மேற்கூறிய தரவுகளின் அடிப்படையில் நான், இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு சார்பில், பின்வரும் கவலைகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
NRC புதுப்பித்தல் நடவடிக்கை அசாமில் வாழும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான ஒருதலைப்பட்சமான முறைமை என்பது நிரூபிக்கப்பட்ட பிறகு எப்படி நியாயமான முடிவுகளை எதிர்பார்க்க முடியும்?
கல்வியறிவற்ற சமூகத்திற்கு சட்ட உதவி வழங்குவதற்கு என்ன வசதிகள் உள்ளன?
சர்வதேச சட்டங்களை மீறும்விதமாக வெளிநாட்டினர் என்று அறிவிக்கப்பட்டவர்கள் இன்னும் சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டிருப்பது ஏன்? தடுப்பு முகாம்களும் சிறைச்சாலைகளும் ஒன்றாக முடியாது.
முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் தாங்கள் பெற வேண்டிய அடிப்படை மனித உரிமைகள், வசதிகள் கூட பெறமுடியாமல் தடுக்கப்படுவது ஏன்?
வெளிநாட்டாளர்களாக பிரகடனப்படுத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்காக ஏன் அதிகாரிகள் ஒரு வெளிப்படையான நடைமுறைகளை பின்பற்றவில்லை?
அசாமின் முஸ்லீம்களுக்கு எதிரான அதிகரித்துவரும் வெறுப்பு பிரச்சாரங்கள் மற்றும் உடல் ரீதியான தாக்குதல்களுக்கு அரசு இயந்திரம் ஏன் அமைதியாக இருக்கின்றது?
பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளவர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க வாய்ப்புகள் இருக்கின்றபட்சத்தில் அவர்களை சட்டவிரோத குடியேறிகள் என்று முத்திரை குத்துவதற்கான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு அவர்கள் மீது குறிப்பாக முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்படும் கொடூரமான தாக்குதல்கள் நியாயப்படுத்தப்படுகின்றது. நெல்லி மற்றும் பிற இடங்களில் நிகழ்ந்த இனவாத வன்முறைகளை கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் உடனடியாக தாங்கள் தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தங்கள் உண்மையுள்ள
நஹாஸ் மாலா
அகில இந்திய தலைவர்
இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு(SIO)