இந்தியாவில் ஆராய்ச்சிப் படிப்பில் (PhD) அதிகளவு சேருவோரின் பட்டியலில் தமிழ்நாடு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. அறிவியல், பொறியியல் மற்றும் தொழில் நுட்ப பின்னணியில் உள்ள பெரும்பாலான மாணவர்கள் உடனடி வேலை வாய்ப்புக்காக மேற்படிப்பினை தேர்ந்தெடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அகில இந்திய அளவிலான 2017 -18ம் ஆண்டிற்கான உயர்கல்விக்கான ஆய்வு முடிவுகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் பல்வேறு கல்வி நிறுவனங்களில் phd படிப்பில் சேர்ந்துள்ள 1.62 இலட்சம் மாணவர்களில் 29,778 மாணவர்கள் (18.5%) தமிழ்நாட்டை சார்ந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையின்படி தமிழ்நாட்டு மாணவர்களே ஆராய்ச்சிப் படிப்பை முடித்து முனைவர் பட்டமும் அதிகளவில் பெறுகின்றனர். உதாரணமாக 2016 -17 ல், 24,171 மாணவர்கள் PhD பட்டம் பெற்றுள்ளனர். அதில், 3973 மாணவர்கள் (16.32%) தமிழ்நாட்டை சார்ந்தவர்கள். ஆய்வுப் படிப்பில் சேர்வதில் தமிழகத்தை அடுத்து உத்திரபிரதேசம் இரண்டாம் இடத்திலும்(15,408 மாணவர்கள்), புதுடில்லி, கர்நாடகா அடுத்த இடங்களிலும் உள்ளன.
AISHE புள்ளிவிவரங்களின் படி, p
PhD படிப்பில் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அறிவியல் துறைகளிலும், அதற்கடுத்து பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்திலும் சேர்கின்றனர். மேலும் வேளாண் மற்றும் அதனுடன் இணைந்த படிப்புகளில் 21.1% முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தவர்கள் Phd படிப்பில் சேர்கின்றனர். அதற்கடுத்து பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முதுகலை முடித்தவர்கள் 20.07% phdல் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கிறது. அறிவியல் 6.9% மற்றும் மருத்துவ அறிவியல் 4.9% முதுகலை மாணவர்கள் ஆய்வுப்படிப்பில் சேர்ந்துள்ளனர். ஆனால் சமூக அறிவியலில் 2.4 சதவிகித மாணவர்கள் மட்டுமே PhD ஐ தேர்வு செய்கின்றனர்.
தென்னிந்தியாவில் இருந்து அதிகளவில் உயர்படிப்புகளுக்காக சேர்வதற்கு காரணம் என்ன என்பதைப் பற்றி கேட்டபோது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியை பவானி அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்.
தேசிய தகுதித் தேர்வை அடுத்து பல்வேறு கல்வி நிறுவனங்களில்
PhD படிப்பில் பட்டம் பெற்றவர்களுக்கே வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இது பிரதான காரணமாகும். அதோடு தமிழகத்தில் அதிகமாக தொழில்நுட்ப கல்லூரிகள், குறிப்பாக பொறியியல் கல்லூரிகள் இருப்பதாலும், அவற்றில் ஆய்வு நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதாலும் கூட இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
முதுகலை படிப்பு முடித்தவுடன் உடனடியாக வேலை வாய்ப்புகள் கிடைக்கப் பெறாததாலும், PhD படிப்பில் பயிற்சிக் கால ஊதியம்(Stipend) சில வருடங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் கூட மாணவர்கள் ஆராய்ச்சிப் படிப்பில் சேர்வதற்கு காரணிகளாக அமைவதாக தில்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையில் பணியாற்றும் பேராசிரியர் ருத்ரஷிஷ் சக்ரவர்த்தி கூறுகிறார். ஆராய்ச்சிப் படிப்புகளை அதிகமாக வழங்கும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) வில் PhD படிப்பிற்கான எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் ஒட்டுமொத்தமாக சூழல் சரியாக இல்லை என்றும் அவர் கூறுகிறார்.
சில புள்ளி விவரங்கள் :
* PhD படிப்பிற்கு விண்ணப்பித்த மொத்த மாணவர்கள் – 1.62 இலட்சம்
* அதில் தமிழக மாணவர்கள் – 29,778
* அதிகமாக அறிவியல், பொறியியல் துறைகளில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்
* 57.4% மாணவர்களும், 42 6% மாணவிகளும் ஆராய்ச்சிக்காக பயில்கின்றனர்
* பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் 19 துணைத் துறைகளில் 38,714 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்
* மருத்துவ அறிவியல் துறையில் 7086 மாணவர்களும் அறிவியல் துறையில் 41844 மாணவர்களும்(அதிகமாக வேதியியல் துறையில் சேர்ந்துள்ளனர்) ஆராய்ச்சிப் படிப்புக்காக சேர்ந்துள்ளனர்.
தமிழில் – ஹசினா