எழுதியவர் – ஹூசைனம்மா
முதலில், அந்தச் சிறுமியின் தாய்க்கும், தந்தைக்கும், சகோதரிக்கும் என் பாராட்டுகள் – எதற்கும் அஞ்சாமல், மானம்-மரியாதை-கௌரவம் என்ற வெற்றுப் பிதற்றல்களுக்குக் காது கொடுக்காமல் தைரியமாக இக்கொடூரத்தை வெளிக்கொணர்ந்ததற்காக.
ஒரு நிர்பயாவுக்காக நாடு முழுவதுமே இணைந்து போராடியபோது, இம்மாதிரிச் சம்பவங்களுக்கு இத்தோடு முற்றுப்புள்ளி வைக்கப்படுவிடும் என்று நம்பியவர்கள்தான் நாமெல்லாம். ஆனால், அதன் பின்புதான் அதிகரித்து விட்டது போல் தோன்றுகிறது – அதுவும் அதிகக் கொடூரமாக!! நடக்கும் நிகழ்வுகள் அப்படித்தான் நம்ப வைக்கின்றன.
என்னதான் காரணம்?
குற்றங்களைக் கண்டிக்கும் நாம், குற்றவாளிகளை உடனே தூக்கிலேற்றச் சொல்லிக் கண்டனம் தெரிவிக்கும் நாம், இந்தக் குற்றம் அதிகரிப்பதன் காரணங்களை யோசித்துப் பார்த்தோமா? அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து சரிசெய்யாமல், மேம்போக்காக நோயை மட்டும் குணப்படுத்தினால் அது அப்போதைக்கானத் தற்காலிகத் தீர்வாக மட்டும் அமையுமே தவிர, நிரந்தரத் தீர்வாக அமையாது. நோய் மீண்டும் மீண்டும் தாக்கத்தான் செய்யும் என்ற உண்மையை அறிந்தும் செயற்படுத்தாதவர்களாக நாம் இருக்கிறோம் என்பதைத்தான் காட்டுகிறது.
இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது, ஹெல்மெட் அணியச் சொன்னால், ”நான் விதிகளைப் பின்பற்றி ஒழுங்காகத்தான் ஓட்டுகிறேன்; ஆகையால் எனக்கு ஹெல்மெட் தேவையில்லை.” என்றோ; “சாலைகள் ஒழுங்காக இல்லை; அதைச் சரி செய்யுங்கள், பின்னர் ஹெல்மெட் பற்றிப் பேசுவோம்” என்றோ; “நான் ஏன் ஹெல்மெட் போடணும்? எதிரில் வண்டியோட்டி வருபவர்களை ஒழுங்காக ஓட்டிவரச் சொல்லுங்கள்!!” என்றோ யாரேனும் சொன்னால் என்ன சொல்வீர்கள்?
சாலை சரியில்லாததும், எதிரில் வருபவர்கள் தவறு செய்வதும் விபத்துக்கு முக்கியமானக் காரணங்கள்தான். அதற்காக ஹெல்மெட் அணிய மறுப்பதும், சாலை விதிகளை மீறுவதும் விவேகமா? அதுபோலத்தான் சமூகத்தை மட்டுமே – அதிலிருக்கும் களைகளை, குறைகளை, குற்றங்களை மட்டுமே சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தால் தீர்வு கிடைக்காது. நம்மால் ஆன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் நம்மை நாம் காத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்.
ஒரு நிகழ்வுக்கான பல்விதமான காரணங்களை ஆராய்ந்து விவரிப்பதனாலேயே, அந்தக் காரணங்களை எல்லாம் நியாயப்படுத்துகிறோம் என்று கற்பிதம் செய்து கொள்ளக் கூடாது. இக்கட்டுரை, குழந்தைகள், சிறுமிகள் மட்டுமல்லாது அனைத்து பெண்கள் மீதான பாலியல் தாக்குதலைக் குறித்தும் பேசுகிறது.
பல தலைப்புகளில் காரணங்களை நாம் அலசினாலும், அனைத்தும் ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடர்புடையவே. ஒன்றின் பாதிப்பு ஒரு “சங்கிலித் தொடர்” போல (chain reaction) இன்னொரு காரணத்தோடு பிணைப்பு உடையது. ஆகவே, ஒன்றை மட்டும் சரி செய்துவிட்டால் குற்றங்கள் குறைந்து விடும் என்று எதிர்பார்க்க முடியாது.
சமூகமாக நாம் நிறைய மாற வேண்டியிருக்கிறது.
“அண்ணா” என்றழைப்பதாலேயே அண்ணன் ஆகிவிட மாட்டார்!!
பெரும்பாலான பாலியல் குற்றங்கள் செய்யப்படுவது, நாம் நன்கு அறிந்த வட்டங்களில் உள்ளவர்களாலேயே. பெண்கள் தமது இயல்பான பாதுகாப்பு உணர்வு காரணமாக அவர்களை “அண்ணா” அல்லது “தம்பி”, “அங்கிள்”, “தாத்தா” என்றோ அழைப்பர். அவ்வாறு அவர்களை விளிப்பதின் மூலம் ஏற்படும் பாச உணர்வு அவர்கள் நமக்குத் தீங்கு செய்வதிலிருந்து தடுத்து விடும் என்று நம்புகிறோம். வெகுநாட்களாக அவர்கள் (வெளிப்படையாக) எதுவும் தவறு இழைத்ததில்லை என்பதே அவர்களை நாம் முழுமையாக நம்புவதற்கு போதுமானது என்பதே பொதுவான வழக்கமாயிருக்கிறது.
அந்த அடிப்படையில், வெகுநாட்களாக நம் வீட்டிற்கு வரும் பணியாட்கள், வண்டி ஓட்டுனர்கள், அடிக்கடி செல்லும் வங்கி போன்ற இடங்களின் அலுவலர்கள், அடுத்த வீட்டு அங்கிள்கள், அண்ணன்கள், உறவுகள், ஆகியோர் நமக்கு அல்லது நம் வீட்டுக் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அரண்கள் எனக் கருதுகிறோம்.
ஆனால், மீண்டும் மீண்டும் நடக்கும் நிகழ்வுகள், “இரத்த உறவுகள் அல்லாத எந்த உறவுமே நாம் முழுமையாக நம்பிக்கை வைக்கத் தகுந்ததல்ல” என்ற பாடத்தையே போதிக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், தாத்தா, சித்தப்பா, மாமா போன்ற இரத்த உறவுகளே நம்பிக்கை வைக்கும் தகுதியை இழந்து விட்ட காலம் இது!!
விதிவிலக்குகள் இருந்தாலும், எந்த உறவாக இருந்தாலும் – எந்த வயதாக இருந்தாலும் – ஒரு ஆண் எப்போதும் ஆண்தான் என்பதையும்; பிஞ்சுக் குழந்தையாகவே இருந்தாலும், அது ஒரு ஆணின் பார்வையில் பெண்தான் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்!!
ஊடகங்களில் பெண்:
திரைப்படங்கள் தொடங்கி இன்றைய சீரியல்கள் வரை பெண்கள் என்றால் ஒரு உபயோகிக்கும் பொருள்தான் என்ற எண்ணத்தைப் பார்ப்பவர்கள் மனதில் ஊன்றும் விதமாகத்தான் பெண்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்.
அத்தோடு, ஆடைக்குறைப்புதான் பெண்கள் சுதந்திரத்தின் அடையாளம் என்ற தவறானக் கருத்தையும் விதைத்ததின் பலன், நிஜ உலகிலும் பெண்கள் உடலைப் பெருமளவு வெளிக்காட்டும் உடைகள் அணிய ஆரம்பித்து விட்டனர். ஆண்களிடம் அது ஏற்படுத்தக் கூடிய விளைவுகள் குறித்துச் சொன்னால், ”என் உடை – என் உரிமை” என்று உரிமைக் குரல் எழுப்பினார்கள். குறைந்த ஆடைதான் முன்னேற்றத்தின் அடையாளமாகவும், அதைக் கண்டிப்பது ஆணாதிக்கமெனவும், பிற்போக்குத்தனமெனவும் கருதப்பட்டது.
உடல் தெரியும்படி உடை அணியும் ஒரு பெண், ஆணின் கண்ணுக்கு ஒரு உயிராக அல்ல, ஒரு பொருளாகத்தான் (an object) தெரிவாள் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை. இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாமல், பல பெண்கள் தங்கள் உரிமையைப் பறிப்பதாகக் கூக்குரலிட்டு, தமது இனத்துக்கே ஆபத்தை வரவழைத்துக் கொண்டார்கள்!!
இது தவிர, இணையத்தில் வெகு எளிதாகப் பரவிக் கிடக்கும் பாலியல் ஆபாசத் திரைப்படங்கள், ஒட்டுமொத்தமாக பெண்கள் போகப்பொருள் என்ற பார்வையை ஆழ விதைத்தது மட்டுமின்றி, எப்படியாவது ஒரு பெண்ணை அடைய வேண்டும், பாலியல் இன்பம் பெற்றே ஆக வேண்டும் என்ற வெறியைத் தூண்டுமளவு ஆபத்தானவையாக உள்ளன.
முன்பெல்லாம் பாலியல் வன்முறைகள் என்றால், ஒரு பெண் மீது ஒருவரால் செய்யப்படுவதாகத்தான் இருந்தன. ஆனால், இன்று பாலியல் குற்றங்கள் எல்லாம், ஒரே ஒரு பெண்ணின் மீது நண்பர்கள் பலரால் கூட்டாகத்தான் செய்யப்படுகின்றன. இதற்கு ஆபாசப் படங்கள்தான் காரணம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!!
பாலியல் வறட்சி:
இன்றைய பகட்டுச் சமூகத்தில், இளைஞர்களிடமும் இளம்பெண்களிடமும் திருமண வாழ்வு குறித்து யதார்த்தத்திற்கு மிஞ்சிய எதிர்பார்ப்புகள் காணப்படுவதால், திருமணம் செய்யும் வயது அதிகரித்துக் கொண்டே போகிறது. பாலியல் தேவைகள் உரிய வயதில் சட்ட ரீதியாக நிறைவேறாமல் போகும்போது , ஆபாச ஊடகங்களால் சூழப்பட்ட சமூகத்தில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத ஆண்கள், சட்டத்திற்குப் புறம்பான வழிகளில் ஈடுபடுகின்றனர்.
அதிலொன்றாகத்தான், எதிர்ப்புத் தெரிவிக்க இயலாத நிலையிலுள்ள சிறுமிகள், மூதாட்டிகள், அப்பாவியான இளம்பெண்கள் ஆகியோர் இவர்களால் பலியாக்கப்படுகின்றனர்.
“என் உடல் – என் உரிமை” போன்ற கொள்கை கொண்ட பெண்களால் பாதிக்கப்பட்ட கணவர்கள், மனைவியை வெறும் உடலாக மட்டுமே காணும் கணவர்களால் உடலுறவை வெறுக்கும் பெண்கள், கணவன் – மனைவி இருவரும் வேறு ஊர்களில் பணிபுரிவது போன்ற காரணங்களால் திருமணமான ஆண்களிலும் பாலியல் வறட்சிக்குள்ளானவர்கள் இருக்கின்றனர்.
தாத்தாக்கள் ஏன் இந்த பிரிவில் வருகின்றனர்? தம்பதிகள் ஒரு குறிப்பிட்ட வயது தாண்டிவிட்டால், பிறகு தாம்பத்தியம் கொள்வது கூடாது என்ற எண்ணம் நம் இந்தியச் சமூகத்தில் தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வரும் வழக்கம். ஒரு தம்பதியின் முதல் பெண்குழந்தை பூப்படைந்து விட்டாலும் இதுதான் நியதி. மனைவி தன் உணர்வுகளை ஆன்மீகத்தின் பெயரால் அடக்கிக் கொள்வார். ஆண்களால் அது முடியுமா? வயதால் தாத்தா என்றாலும், உணர்வால் அவரும் ஒரு ஆண்தானே!! கிடைக்க வேண்டிய இடத்தில் கிட்டாததை, வேறு இடத்தில் தேடுவார். அதனால்தான் தாத்தாக்களும் ஆபத்தானவர்களாக மாறிவிடுகிறார்கள்.
இவை தவிர, எல்லாம் சரியாகக் கிடைத்தாலும், வெறும் த்ரிலுக்காக எளிதாகக் கிடைக்கும் ”ஆபத்திலாத டார்கெட்” என்று நினைக்கும் பெண்கள் மீதும் இவ்வன்முறை ஆண்களால் நிகழ்த்தப்படுகிறது.
பெற்றோரும், குழந்தை வளர்ப்பும்:
இன்றைய சமுதாயத்தில் யாரையும் – நம் நெருங்கிய உறவாகவே இருந்தாலும் – நம்பமுடியாத காலகட்டத்தில் இருக்கிறோம். இன்று, தந்தை தாய் இருவரும் வேலைக்குச் செல்லும் சூழலில், தமது குழந்தைகளை யாரிடமேனும் தினமும் சில மணிநேரங்களாவது ஒப்படைத்துத்தான் ஆக வேண்டியிருக்கிறது. ஆனால், பள்ளி ஆசிரியர்கள் முதல் பள்ளிப் பேருந்தின் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் வரை யாரையும் முழுமையாக நம்ப இயலாத காலம் இது.
எத்தனை கெட்ட செய்திகள் கேட்டாலும், நம் வட்டத்தில் உள்ளவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல, நல்லவர்கள்தாம் என்றே நம் மனம் சொல்லும். இது, நாம் நடந்தவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள மறுக்கிறோம் என்பதன் அடையாளமே. நமக்கு நேரும் வரை காத்திருப்பது, கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்ற கதையாகிவிடும்.
பெண் குழந்தைகளுக்குத் தைரியம் சொல்லிக் கொடுக்கிறோம், தன்னைச் சுற்றி நடப்பவைகளை எதிர்கொள்ளும் சூழல்களை அவர்கள் சந்திக்க வேண்டும், பொத்திப் பொத்தி வளர்த்தால் இந்தத் திறமைகள் இல்லாமல் ஏமாளியாக, பயந்தாங்கொள்ளியாக வளர்ந்து விடுவார்கள் என்றெல்லாம் சொல்வது வெற்றுக் கூச்சல்கள். தைரியம் சொல்லித் தர வேண்டும். ஆனால், இளம் வயதில் உடல் – உணர்வு ரீதியான ஆபத்துகள் சாத்தியம் என்ற சூழ்நிலையில் முறையான பாதுகாப்பின்றி விட்டுவிட்டு, “நீ அதைத் தனியாகச் சமாளித்துக் கொள்” என்று சொல்வது எதிர்மறையான உள பாதிப்புகளையே குழந்தைகளிடம் ஏற்படுத்தும்.
ஆகையால், வேலைக்குச் செல்லும் பெண்கள், முறையான ஏற்பாடுகள் செய்வது இன்றியமையாதது.
பெண் குழந்தைகள் மட்டுமல்ல, ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் தொந்தரவுகள் ஏற்படத்தான் செய்கின்றன என்பதால் அவர்களையும் ஒரு வயது வரை கவனத்தில் வைத்திருக்க வேண்டும்.
எந்தக் குழந்தையானாலும், எது நடந்தாலும் பெற்றோரிடம் சொல்ல வேண்டிய சூழல் வீட்டில் இருக்க வேண்டியது பெற்றோரின் பொறுப்பு.
கூடுதலாக, பிள்ளைகள் தம் எதிர்பாலினத்தவரிடம் – பள்ளி நண்பர்கள் உட்பட உறவுகள், தெரியாதவர்களிடமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுக்க வேண்டும். தொடுதல் கூடாது; எவற்றைக் குறித்துப் பேசலாம், பேசக்கூடாது என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
முக்கியமாக, எதிர்பாராவிதமாக ஒரு பெண் அல்லது சிறுமி பாலியல் தாக்குதலுக்கு ஆளாகிவிட்டால், அதை அப்பெண்ணிற்கு ஏற்பட்ட இழிவாகக் கருதாமல், ஒரு விபத்தாக மட்டுமே கருதி, அச்சம்பவத்தை எதிர்கொள்ளும் மாற்றம் சமூகத்தில் அனைவரிடமும் வேண்டும். “கற்பு” என்பது இதனால் அழியக்கூடியதல்ல என்ற கருத்துத் தெளிவு அனைவரிடத்திலும் விதைக்கப்பட வேண்டும்.
மேலே குறிப்பிட்டது போல, சமூகமாக நாம் நிறைய மாற வேண்டியிருக்கிறது. தனி மனிதர்களில் முதலில் மாற்றங்கள் வர வேண்டும். அதுவே சமூகத்தை மாற்றியமைக்கும்.
கட்டுரையாளர் – சமூக ஊடகவியலாளர்