சென்னை-சேலம் இடையே பசுமை வழிச்சாலை என்கிற பெயரில் எட்டு வழிச்சாலை அமைக்க திட்டமிட்டு அதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. அறிவிப்பு வெளியானதிலிருந்தே மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டத் துவங்கினர். அதற்கு காரணம் மரங்களையும், விவசாய நிலங்களையும் அபகரித்து அரசு எட்டு வழிச்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. பொதுமக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் நிலம் அளவிடும் பணிகள் தினந்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கைது செய்து கொண்டே.
இந்த திட்டம் நன்மை பயக்குமா இல்லையா என்கிற விவாதம் ஒரு புறம் இருக்கட்டும், ஆனால் அரசின் திட்டங்களை எதிர்ப்பதாலேயே கைது என்கிற அடக்குமுறையை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது.
மன்சூர் அலிகான் கைது,மாணவி வளர்மதி கைது,பியூஸ் மானுஸ் கைது, துண்டுப் பிரசுரம் வைத்திருந்தார்கள் என்று தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பை சார்ந்த 19 பேர் கைது, ஆம் ஆத்மி தமிழக தலைவர் வசீகரன் என இத்திட்டத்தை எதிர்ப்பவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர். வயதான ஒரு முதிய பெண்மணியைக் கூட விட்டுவைக்கவில்லை இந்த கொடுங்கோல் அரசு.
அரசு இது போன்ற திட்டங்களை செயல்படுத்தும்போது பொதுவாகவே எதிர்ப்புகள் இருக்கும். அதையும் எதிர் கொள்ளவேண்டியதுதான் அரசின் பொறுப்பு, அதை விட்டுவிட்டு போராடுபவர்களை கைது செய்வது என்பது மிகப்பெரிய அடக்குமுறை. அந்த அடக்குமுறையை அரசு சமீபமாக அதிக அளவில் கையாண்டு வருகிறது. தூத்துக்குடி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பலரை கைது செய்த அரசு மக்கள் அதிகாரத்தை சேர்ந்த 6 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்துள்ளது. இதில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த தந்தை,இரண்டு மகன்களும் அடக்கம். அதனை தொடர்ந்துதான் எட்டு வழிச்சாலையை எதிர்ப்பவர்களை கைது செய்தது அரசு. அதிலும் குறிப்பாக மாநில அரசை எதிர்பவர்களைவிட மத்திய அரசை எதிர்ப்பவர்களை உடனடியாக கைது செய்கிறது தமிழக அரசு.
கைது செய்வதால் மக்களை அச்சப்படுத்தி தங்கள் திட்டங்களை செயல்படுத்தி விடலாம் என்கிற நோக்கில் அரசு இவ்வாறு செய்கிறது. ஆனால் சுதந்திர போராட்ட காலத்திலிருந்தே மக்களுக்காக போராடுபவர்கள் கைது செய்யப்பட்டு பல்வேறு சித்திரவதைக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பதையெல்லாம் அறிந்து விட்டுதான் மக்கள் போராளிகள் களத்திற்கு வருகிறார்கள் என்பதை அறிந்தும் அறியாமலேயே. மக்களுக்காகவே திட்டத்தை செயல்படுத்துகிறோம் என கூறும் அரசு அவர்களிடம் கருத்து கேட்பது என்பதையே மறுக்கிறது.
அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது மக்களுக்கு முதலில் அந்த திட்டத்தின் சாதக பாதகங்களை புரிய வைக்க வேண்டும், அதை மக்கள் ஏற்றுக்கொண்டால் அந்த திட்டத்தை நிறைவேற்றலாம் இல்லையென்றால் அந்த திட்டத்தை கைவிடலாம் அல்லது சிறிது காலம் மக்கள் ஏற்று கொள்ளும்வரை ஒத்திவைக்கலாம். ஆனால் அதையெல்லாம் செய்யாமல் ஆட்சியில் அமர்ந்திருக்கிறோம் என்கிற அதிகாரத்தோடு நாங்கள் முடிவெடுத்து விட்டால் அதை செய்யாமல் விடமாட்டோம் என்கிற சர்வாதிகார போக்கோடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நடந்து கொள்வது ஜனநாயகத்தை சீர்குலைக்கவே செய்யும். அதை உணர்ந்து யாருக்கும் அஞ்சாமல் தமிழக அரசு செயல்பட வேண்டும், அவ்வாறு இல்லாமல் தொடர்ந்து போராடுபவர்கள் மீது அடக்குமுறையை ஏவி அவர்களை கைது செய்து வந்தால் அதன் எதிர்வினையை நிச்சயமாக சந்திக்க நேரிடும்.