எழுதியவர் : அபய் குமார், வரலாற்றுத் துறை ஆராய்ச்சி மாணவர், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்(JNU), புதுடில்லி
இன்னும் சில வாரங்களில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வரலாற்றாய்வு மையத்தில் எனது முனைவர் படிப்பிற்கான ஆய்வறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டியிருக்கிறது. கடைசி தேதி நெருங்கும் சூழலில் அதற்காக எனது முழு முயற்சியினையும் மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் இந்த கடித்த்தை எழுதுவதன் மூலம் ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் உருவாகியுள்ள மிகத் தீவிரமான ப்ரச்னையினை பல்கலைக்கழகத்தின் வருகையாளர் என்ற அடிப்படையில் தங்கள் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று விரும்புகின்றேன். அந்த ப்ரசனையில் தாங்கள் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் கோருகின்றேன்.
கடந்த மே 18, 2018 அன்று நடந்த பல்கலைக்கழக குழு கூட்டத்தில் “இஸ்லாமிய தீவிரவாதம்” என்கின்ற பாடப் பிரிவை துவங்க முடிவானதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியானது. பல்கலைக்கழக குழு இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற பாடப் பிரிவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் தெரிகிறது. இந்த பாடம் தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் மையம்(Centre for National Security Studies –CNSS) வழங்கும் பல்வேறு பாடங்களில் ஒன்றாக இருக்கிறது. ஒரு சிலர் இஸ்லாமிய தீவிரவாதம் என்பது நக்சலிசம், அரசுக்கு எதிரான ஆயுதக் கிளர்ச்சி, மக்கள் தொகை மாற்றம் போன்ற தேசிய பாதுகாப்பு பாடத்திட்டத்தின் பல்வேறு ஆய்வுப் பிரிவுகளில் ஒன்றே என்று வாதிடுகின்றனர். குழப்பங்கள் நீடிக்கும் இந்த ப்ரச்னையில் ஜேன்யு நிர்வாகம் சரியான தகவல்களை வெளியிட்டு தங்களது நிலைப்பாட்டினை தெரிவிக்க வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. கடந்த சில காலங்களாக JNU நிர்வாகம் அதன் பாரம்பரியத்தை விட்டு வேற்றுதளத்தில் பயணிக்க முற்படுவதுடன், பல தவறான செயல்திட்டங்களை நடைமுறைபடுத்துவதில் பிடிவாதமாக இருப்பதாக நாங்கள் கவலை கொள்கின்றோம்.
இக்கடிதம் மூலம் இந்த ப்ரச்னை குறித்து ஒரு முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.
உண்மையிலேயே பல்கலைக்கழக நிர்வாகம் இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற பாடப்பிரிவையோ, ஆய்வுப் பொருளையோ கொண்டு வருவதாக முடிவெடுத்திருந்தால் அந்த முடிவு உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். ஏனென்றால் இந்த நடவடிக்கை JNU பல்கலைக்கழக ACT 1966 ல் கூறப்பட்டிருக்கும் தாரக மந்திரங்களான சமூக நீதி, மதச்சார்பின்மை, ஜனநாயக வாழ்க்கை வழிமுறை,சமூகத்தின் ப்ரச்சனைகளை உலகளாவிய மற்றும் அறிவியல் பூர்வமாக கையாளும் வழிமுறைக்கு எதிரானதாக உள்ளது.
சில அறிவு ஜீவிகளும், இதனை ஆதரிப்பவர்களும் இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற பாடப்பிரிவு கொண்டு வரப்படுவது துரதிருஷ்டவசமானது என்ற வாதத்தை ஏற்க மறுக்கின்றனர். ஊடகங்களில் அப்படிப்பட்ட ஒருவர் இந்த பாடப்பிரிவு இஸ்லாமியத் தீவிரவாதம்(Islamic Terrorism) அல்ல, இஸ்லாமியவாதிகளின் தீவிரவாதம்(Islamist Terrorism) என்று கூச்சமில்லாமல் நியாயப்படுத்த முயன்றார். அப்படி கூறுவதன் மூலம் தான் இஸ்லாத்திற்கு, முஸ்லிம்களுக்கு எதிரானவர் இல்லை என்று அடையாளப்படுத்த நினைத்தார். ஆனால் அவர் கூறியதற்கும் 9/11 தாக்குதலுக்கு பிறகு ஜார்ஜ் புஷ் கூறிய நல்ல முஸ்லிம்-கெட்ட முஸ்லிம் என்பதற்கு பெரிய வித்தியாசம் இல்லை என்பதை அவர் உணரவில்லை.
எனது அறிவிற்க்குட்பட்டு உலகத்தில் மதச்சர்பின்மை, முற்போக்கு எண்ணங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ள எந்த பல்கலைக்கழகத்திலும் இஸ்லாமிய தீவிரவாதம், இந்து தீவிரவாதம், சீக்கிய தீவிரவாதம், புத்த தீவிரவாதம், கிறிஸ்தவ தீவிரவாதம், யூத தீவிரவாதம் சார்ந்த பாடங்கள் இருப்பதாக தெரியவில்லை. பின்பு ஏன் JNU போன்ற பல்கலைக்கழகம் ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்த வேண்டும்? தீவிரவாதம் என்பது எந்த மதத்திற்கோ, சமூக அமைப்பினருக்கோ சொந்தமானது கிடையாது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அடிக்கடி தீவிரவாதத்தைப் பற்றி பேசுபவர்களும் கூட அதற்கான வரையறையினை சொல்லியதில்லை.
உலகளவில் தீவிரவாதத்திற்கு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு வரையறை இதுவரை பெறப்படவில்லை. தீவிரவாதத்திற்கான அளவுகோல் தொடர்ச்சியாக மாற்றத்திற்குள்ளாகி வருகின்றது என்பதையே வரலாறு சொல்லிச் செல்கின்றது. இன்று தீவிரவாதி என்ற முத்திரை அரசியலுக்காக, அதிகாரத்தின் மூலம் உருவாக்கப்படுகின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது.
உதாரணத்திற்கு ஆங்கில ஏகாதிபத்திய அரசு நமது சுதந்திர போராட்ட வீரர்களை தீவிரவாதிகள் என்று அழைத்தது. சுதந்திரத்திற்கு பிறகும் கூட பல்வேறு தனிநபர்கள், சமூக, மத குழுக்கள் மீது தீவிரவாத முத்திரை குத்தப்பட்டது. 1970-80 களில் தீவிரவாதிகள் என்று ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் அடையாளப்படுத்தப்பட்டனர் என்பதும், 20ம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்கா அறிவித்த தீவிரவாதத்திற்கு எதிரான போரின் மூலம் வேறு ஒரு மதப்பிரிவினர் தீவிரவாதிகள் ஆக்கப்பட்டதும் உண்மைதானே? புதிய தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்கள் அமைதி, நவீனம், மனித உரிமை, பாலின உரிமை, ஜனநாயகம் போன்றவற்றிற்கு அச்சுறுத்தலாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர்.
இஸ்லாமிய வெறுப்புத் தொழிலைக் கொண்டவர்கள் நாகரிகங்களுக்கு இடையிலான மோதல் கருத்தை அப்படியே ஏற்றுக் கொண்டவர்களாக தாங்கள் இருப்பதை உணரவில்லை. கலாச்சாரம் என்பதைத் தாண்டி வன்முறையைப் பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை. இஸ்லாம்/முஸ்லிம் சமூகம் நாகரிகத்திற்கு முந்தைய , மதவெறி, மூடநம்பிக்கைகளால் சிக்குண்ட, நவீன மதிப்பீடுகளுக்கான ஆபத்தான் அச்சுறுத்தலாக இருப்பதாக அவர்களது ஆழ்மனதின் எண்ணங்கள் இருக்கின்றன. அவர்கள்குறைவாகவே இஸ்லாம்/ முஸ்லிம்கள் குறித்து படிக்கின்றனர். அரசியல், பொருளாதார கண்ணோட்டத்தில் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் பார்க்க அவர்கள் தலைப்படுவதில்லை. இஸ்லாமிய/முஸ்லிம் சமுகம் இஸ்லாம் மற்றும் அதன் புனித நூலுக்கு அப்பாற்பட்ட காலனித்துவம், முதலளித்துவம் போன்றவற்றின் தாக்கத்தாலும் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பரிசீலிக்க முன்வருவதில்லை. இஸ்லாமிய வெறுப்புத் தொழிலைக் கொண்டவர்கள் காலனித்துவம் ,நவீன காலனித்துவம், முதலாளித்துவம் போன்றவையும் கூட சமுகத்தில் வன்முறையையும், பயங்கரவாதத்தையும் தூண்டக்கூடியவை என்ற உண்மையை ஏற்க மறுக்கின்றனர்.
கலாச்சார விளக்கம் குறித்த அவர்களது அடிப்படைகள் பின்வரும் முக்கியமான கேள்விகளை கேட்க அவர்களை அனுமதிப்பதில்லை. தீவிரவாதம் மூலம் யார் அனுகூலம் அடைவது? நவீன ஆயுதங்களை அவர்களுக்கு மேலை நாடுகள் விற்காமல் இருந்தால் அவர்களால் எப்படி செயல்பட முடியும்.? வளர்ந்த நாடுகளால் நவீன தொலைத் தொடர்புகள் கட்டுப்படுத்தப்பட்டால் தீவிரவாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் அதனை எப்படி பயன்படுத்த முடியும்? ஆயுத வியாபார நிறுவனங்கள் முதல் உலக நாடுகளில் மட்டுமே இருப்பது அமைதிக்கு ஆபத்தில்லையா? தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் ஏன் அரசு அல்லாதவர்களுக்கு எதிராக மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றது? அரசுகளும் தீவிரவாதத்தில் ஈடுபடுகின்றன தானே?அரசுகளிடம் கட்டற்ற வளங்களும் அதிகாரமும் இருப்பதால், அரசு அல்லாதவர்களின் தீவிரவாதத்துடன் ஒப்பிடும்போது அரசுகளின் தீவிரவாதம் பலமடங்கு அதிகமாக இருக்கின்றது தானே?
இந்த கேள்விகளை எல்லாம் தங்களை கேட்டுக் கொள்வதற்கு பதிலாக எதற்கெடுத்தாலும் இஸ்லாத்தை குறை கூறுவதை சிலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் இஸ்லாம் அறிவு, அறிவியல், உற்பத்தி போன்ற துறைகளில் அளப்பரிய பங்களிப்பினை வழங்கியுள்ளதை வரலாறு நமக்கு பாடம் எடுக்கின்றது. நவீனத்திற்கு எதிரானது என்ற குற்றச்சாட்டிற்கு மாற்றமாக மேற்கின் மறுமலர்ச்சிக்கு இஸ்லாம் பல்வேறு கொடைகளை வழங்கியுள்ளது.
இந்திய வரலாறும் கூட இந்த உண்மையினை வெளிப்படுத்துகின்றது. இந்திய சமூகத்தின் எல்லாத் துறைகளிலும் அறிவு முதல் உற்பத்தி வரை, கலை, கலாச்சாரம் முதல் கட்டிடக்கலை, இசை வரை நேர்மறையான மாற்றங்களை இஸ்லாம் புகுத்தியுள்ளது. இஸ்லாத்தின் சமத்துவ கொள்கைகள் சாதி அடுக்கு முறையை எதிர்கொண்டு பல்வேறு விடுதலைகளை தலித்துகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் வழங்கியுள்ளது. வரலாற்று அறிஞரும், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைகழக நிறுவனர்களில் ஒருவருமான சுலைமான் நத்வி அவர்கள் இஸ்லாத்தின் வருகைக்கு முன்னர் கீழ்சாதியினருக்கு கல்வி மறுக்கப்பட்டிருந்தது, இஸ்லாத்தின் சமத்துவ கொள்கைகளால் அந்த நிலை மாறியது என்று தெரிவிக்கின்றார். இந்தியாவிற்கும் இஸ்லாமிய நாடுகளுக்குமான உறவு எப்போதும் நட்புணர்வுடனேயே இருந்துள்ளதாக வரலாறு தெரிவிக்கின்றது. இன்றும் கூட பல இலட்சக்கணக்கான மக்கள் முஸ்லிம் நாடுகளில் வேலை செய்து மிகப் பெரிய அளவிலான வருமானத்தை தேசத்திற்கு அளிப்பதன் மூலம் தேசப் பொருளாதாரத்தை வலிமைபடுத்த உதவுகின்றனர். இந்தியா தனது எரிபொருள், ஆற்றல் வளங்களுக்கு முஸ்லிம் நாடுகளையே பெரிதும் சார்ந்திருப்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இந்தியாவின் பாதுகாப்பு இஸ்லாமிய சக்திகளால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாக சொல்லப்படுவது மிகைப்படுத்தப்பட்ட கூற்றாகும். அத்தகைய பார்வை அரசுகளாலும், போர் விரும்பிகளாலும் பரப்பப்படுகிறது. உண்மையில் பாதுகாப்பு என்பது மனிதநேய அணுகுமுறையுடன் இருப்பதே பொருத்தமானது என்பதே எனது பார்வை. ஒரு அரசு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாவிடில் எவ்வளவு கருணையான அரசாக இருந்தாலும் அதனால் தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது.
இந்த கருத்துகளின் மூலம் ஜேஎன்யூவின் வருகையாளர் என்ற முறையில் இந்த ப்ரச்னையில் தங்களின் தலையீட்டை உடனடியாக கோருகின்றேன். இஸ்லாமிய தீவிரவாதம் என்ற பாடப்பிரிவை சேர்ப்பதால் ஒரு சில பிரிவினர், இயக்கத்தினர் தனிப்பட்ட முறையில் ஆதாயம் அடையலாம். ஆனால் சமூகத்தில் மத ரீதியான பதற்றத்தை ஏற்படுத்தி இந்தியாவிற்கு வெளியில் நாட்டைப் பற்றிய அவப்பெயரை உருவாக்கவே இந்த முடிவு வழிகோலும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தமிழில் : சர்ஜூன்
எழுதியவர் : அபய் குமார், வரலாற்றுத் துறை ஆராய்ச்சி மாணவர், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்(JNU), புதுடில்லி