மார்ச் 6ஆம் தேதி நாசிக்கில் தொடங்கிய விவசாயிகள் பேரணி ஆறு நாட்களில் 60,000 விவசாயிகளுடன் மும்மை மாநகரையே ஸ்தம்பிக்க வைத்தது மராட்டியத்தில். விவசாயக் கூலிகள், பழங்குடியினர், முதியவர்கள், பெண்கள் என இந்த எளியவர்களின் குரலுக்குக் குலைநடுங்கிப் போனது மராட்டிய பா.ஜ.க. அரசு.
ஆனால், இந்தப் பெரும் பேரணி போகிற போக்கில் நிகழ்ந்துவிட்ட நிகழ்வல்ல. எண்ணற்ற விவசாயிகளின் தற்கொலைகள், அரசுகளின் கார்ப்ரேட்களுக்கான ஆதரவு நிலைப்பாடு, புறந்தள்ளப்படும் விவசாயக் கோரிக்கைகள், மத்திய மாநில அரசுகிள்ன விவசாயம்சார் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை போன்ற தொடர் புறக்கணிப்பின் பெருவெடிப்பே மராட்டிய விவசாயிகளின் இந்த நீண்டப் பேரணி.
இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் நடந்த இந்தப் போராட்டத்தின் வெற்றி மொத்த இந்திய விவசாயிகளின் ஒரு தொகையீட்டு நிகழ்வாக சாமன்யர்களின் பொதிபுத்தி கொண்டாடுவதற்கான காரணங்களும் இல்லாமில்லை.
இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் மொத்தமுள்ள 24.39 கோடிக் குடும்பங்களில் 18 கோடிக் குடும்பங்கள் விவசாயப் பின்புலம் கொண்டவை. இப்படியான ஒரு தேசத்தில்தான் 1995ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 3,00,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, கடந்த 3 ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் தற்கொலை செய்து கொண்டு விவசாயிகளின் எண்ணிக்கை 11,000 பேர் என்று இந்திய ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது.
1947இல் இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் 51.9% விவசாயம் பங்களித்திருக்கிறது. ஆனால், இன்றோ வெறும் 13.5% மட்டுமே. இந்த வகை படிப்படியான விவசாய ஒடுக்கங்கள் அரசுகளினால் நேரடியாகவும், மறைமுகமாகவும் செயல்படுத்தப்படுகின்றன.
சில முதலாளிகளின் இலாபப் பேராசைக்காக அரசாங்கமே முன்னின்று நடத்திக் கொண்டிருக்கும் இந்த விவசாய கருவறுப்பு வேலை சில ஆயிரம் விவசாயிகளின் பேரணியால் முறியடிக்கப்பட்டிருக்கிறது என்பதே நம் மகிழ்ச்சிக்கான காரணம்.
மகாராஷ்டிர விவசாயகளின் முக்கியப் பிரச்சினை அவர்களின் கடனும், பழங்குடியின மக்களிடமிருந்து பிடுங்கப்பட்ட நிலங்களுமே. மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் விவசாயிகளின் 30,000 கோடிக் கடன்களை ரத்து செய்வதாக 2017இல் அறிவித்தார். இந்த அறிவிப்பு செயல் வடிவம் பெறும்போது பல்வேறு நிர்வாகச் சிக்கல்களைச் சந்தித்தது. விவசாயிகளின் கடன் என்பது வங்கிகளில் இருந்து மட்டுமே பெறப்படுவதில்லை. மாறாக, தனிநபர்களிடமிருந்தும் பெறப்படுகிறது. இதனைக் கருத்தில் கொள்ளாமல் விவசாயக் கடன் ரத்து குறித்த சிறுபிள்ளைத்தனமான முடிவும், பழங்குடியின மக்கள் ஆண்டாண்டு காலமாய் விவசாயம் செய்து வந்த நிலங்களை வன நிலங்கள் காப்புரிமைச் சட்டம் என்கிறப் பெயரில் பிடுங்கிக் கொண்டதும் விவசாயிகளை மிகப்பெரும் கொந்தளிப்புக்கு உள்ளாக்கி விட்டது. தினந்தின ஜீவனத்திற்கே அல்லாடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் வாழ்வில் விளையாடிக் கொண்டிருக்கும் மராட்டிய பா.ஜ.க வை விஞ்சி நிற்கிறது மத்தியில் ஆளும் பா.ஜ.க
2014 நாடாளுமன்றத் தேர்தலில் எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தி விவசாயிகளுக்கு எவ்வித நட்டமுமில்லாத குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்போம் என்று சொன்ன பா.ஜ.க. இன்றுவரை அதற்கென ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. பா.ஜ.க அரசு விவசாயிகளுக்கு எதிரான மனநிலையையே கொண்டிருக்கிறது என்பதற்கு மற்றுமொரு உதாரணம் பா.ஜ.க அவசர கதியில் அறிமுகப்படுத்தி ஒரு முழுமையில்லாத ஜி.எஸ்.டி. என்கிற வரிமுறை. இதனால் டிராக்டர்கள் மற்றும் வேளாண் பொருட்களுக்கான வரி 12 சதவீதத்திற்கு உயர்ந்திருக்கிறது. உரங்களின் வரி கூட 1.3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.
பா.ஜ.க.வின் விவசாயக் கொள்கைகளும், ஏற்றுமதி இறக்குமதி கொள்கைகளும் இந்திய மக்களின் உணவுப் பாதுகாப்பையோ, விவசாயிகளின் வாழ்வாதாரத்தையோ பிரதானப்படுத்துவதாய் இல்லை. மாறாக, கார்ப்பரேட் நிறுவனங்களின் தரகு தொகைக்காகவே வகுக்கப்பட்டிருக்கிறது. 2017இல் இந்தியாவின் மொத்த பருப்பு உற்பத்தி 22.95 மில்லியன் டன். இந்த உற்பத்தி நாட்டு மக்களின் தேவைக்குப் போதுமானதாக இருந்த போதிலும் 6.6 மில்லியன் டன் பருப்பையும் 5.9 மில்லியன் டன் கோதுமையையும் எவ்வித இறக்குமதி வரியுமில்லாமல் இறக்குமதி செய்திருக்கிறது மத்திய அரசு. இதனால் ஏற்பட்ட விலை வீழ்ச்சியினால் இந்திய விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். ஒரு பொருள் தேவைக்கதிகமாய் கிடைக்கும்போது விலை வீழ்ச்சியடையும் என்கிற குறைந்தபட்ச பொருளாதார அறிவில்லாமலா பா.ஜ.க. மத்தியில் நாட்டை ஆள்கிறது?
விவசாய கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபத்திற்காக நடைபெறும் தேவையில்லாத இறக்குமதிகளும், தீராதார சுரண்டல்களும் நாட்டை எப்போதும் மீளா வறட்சிக்கு என்பதற்கு ஆவாஸ் பள்ளத்தாக்கு அணைத்திட்டம் ரத்தமும், சதையுமான ஒரு எடுத்துக்காட்டு.
எத்தியோப்பியாவின் ஆவாஸ் பள்ளத்தாக்கில் உலக வங்கியின் நிதி உதவியில் 1960இல் கட்டப்பட்ட பிரம்மாண்டமான அந்த அணையால் 10 இலட்சம் மக்கள் இறந்தனர். 30 இலட்சம் மக்கள் பட்டினிக்கும் புலம்பெயர்வுக்கும் ஆளானார்கள். அன்றாடத் தேவைக்கும் விவசாயத்திற்கும் மேய்ச்சல் நிலத்திற்கும் பயன்பட வேண்டிய நீர் அணைபோட்டு நிறுத்தப்பட்டு ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்களின் பெரும் வேளாண் பண்ணை நிலங்களுக்கு வழங்கப்பட்டது. எத்தியோப்பிய மக்களிடம் ஒரு மிகப்பெரிய விவசாயச் சுரண்டலை அரசு ஆதரவுடன் நிகழ்த்தி கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் இலாபங்களைப் பெருக்கிக் கொண்டன.
எத்தியோப்பியாவிற்கும், இந்தியாவுக்கும் வேளாண் வறட்சிக்கான காலங்கள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், தனியார் மயத்தினால் திரண்டெழுந்து நிற்கும் கார்ப்பரேட் நிறுவனங்களும், அதற்கு துணை நிற்கும் அரசும் விவசாயத்தை அழிவின் பிடியில் திணிக்கும் சூழ்ச்சி எத்தியோப்பியாவிற்கும், இந்தியாவிற்கும் வெவ்வேறானதல்ல.
மெரில் லிஞ்ச் போன்ற அமெரிக்க வங்கிகளும், நிதி ஆலோசனை நிறுவனங்களும் இந்தியாவின் விவசாயக் கடன் தள்ளுபடி என்பது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அவ்வப்போது உலக வங்கி மற்றும் உலக வர்த்தக மையம் இவைகளின் தூண்டுதலின் பெயரில் அறிக்கைகளையும், ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்தியச் சூழலின் வங்கிப் பொருளாதாரத்தை சற்று ஆழமாய் ஆராய்ந்தால் நமக்கு இதன் மறைமுக கார்ப்பரேட் அரசியல் விளங்கும்.
கடந்த ஆண்டு வரை விவசாய வாராக் கடன் 60,200 கோடி. இது 2016ஆம் ஆண்டை விட 23% அதிகம். அதே நேரத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த வங்கித் துறை கடன் மதிப்பு 3,67,24,000 கோடி.
பொதுவாக வங்கிக் கடன்கள் “முக்கியத் துறைகள்” “முக்கியத்துவமற்ற துறைகள்” என பிரித்து கடன்களை வழங்குகிறது. முக்கயித் துறைகளின் கீழ் விவசாயம், கல்வி போன்ற துறைகளும், முக்கியத்துவமற்ற துறைகளில் கார்ப்பரேட் நிறுவனங்களும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
முக்கியத்துறைகளுக்கு வழங்கப்பட்ட கடன்களின் மதிப்பு 9,92,400 கோடி. முக்கியத்துவமற்ற துறைகளுக்க வழங்கப்பட்ட கடன்களின் மதிப்பு 26,800,000 கோடி. முக்கியத்துறை கடன்களில் விவசாயத்தின் வாராக்கடன் 60,200 கோடி. அதாவது 6% மட்டுமே. கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராக்கடன் சுமார் 5,58,000 கோடி. முக்கியத்துவமற்ற வாராக்கடனில் 20.83% ஆகும்.
இலட்சக்கணக்கான கோடி ரூபாய்களை கார்ப்பரேட் முதலாளிகளின் வங்கிக் கடன்கள் மூலம் கபளீகரம் செய்துவிட்டு 11,000 ரூபாய் கடனுக்காக ஒரு விவசாயி தற்கொலை செய்ய வேண்டியிருக்கிறது.
பா.ஜ.க.வின் தவறான விவசாயக் கொள்களும், பொருளாதாராக் கொள்ககளும் இந்தியாவின் கிராமப் பொருளாதாரம் என்ற கொள்கையையே நிர்மூலமாக்கி இந்திய விவசாயிகளை கையறு நிலைக்குத் தள்ளியிருக்கிறது. இதன் விளைவுகளை பா.ஜ.க. தேர்தல்களிலும் சந்திக்க ஆரம்பித்திருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் பா.ஜ.க மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 56 சதவீதமாக இருந்த பா.ஜ.க ஓட்டு வங்கி பஞ்சாயத்துத் தேர்தல்களில் வெறும் 15 சதவீதமாக சுருங்கியிருக்கிறது. உத்திரப் பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் 13 சதவீத ஓட்டு வங்கியைப் பெற்றுள்ளது. குஜராத் சட்டமன்றத் தேர்தலிலும் கூட கிராமப்புறங்களில் தனது வாக்கு வங்கியை இழந்து சொற்ப வாக்கு வித்யாசத்தில் தடுமாறி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.
பா.ஜ.க.வின் திறனற்ற ஆட்சியையும், அவசரகதி சட்டங்களையும் விவசாயத்தையும் நேரடியாக பாதிப்பதை எதிர்த்து கிளர்ந்தெழுந்து மராட்டிய விவசாயிகள் தங்களது வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றனர்.
1943ஆம் ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது பல்லாயிரக்கணக்கானோர் மாண்டனர். அதனைப் பார்வையிட்ட பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில், “இந்தப் பஞ்சத்திலுமா காந்தி சாகவில்லை?” என்று கேட்டார். ஆனால, இன்று நடந்த போராட்டத்தில் விவசாயிகள் வென்று, “காந்திகள் எப்போதும் சாவதில்லை” என்று சர்வாதிகார ஆட்சியாளர்களுக்குப் புரிய வைத்திருக்கின்றனர்.
– மு. காஜா மைதீன்