காஷ்மீர் மாநிலம் கத்துபவா பகுதியில் ஆஸிஃபா எனும் 8 வயது சிறுமி மிகவும் கொடுரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிகழ்வு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அதனைக் குறித்து வகுப்பறையில் பேசினார் என்ற ஒற்றை காரணத்திற்காக கோவை சட்டக்கல்லூரி மாணவி பிரியா இடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது .
ஏற்கனவே கல்வி தனியார் மயமாக்கப்பட்டு , சமூகத்துடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் , சமூக அக்கறை இல்லாதவர்களாக, அரசியல் நீக்கம் செய்யப்பட்ட மாணவர்களை உருவாக்க அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. படித்து மதிப்பெண் பெற்று சம்பாதிப்பது மட்டும்தான் உனது வேலை என கற்பிக்கப்பட்டு வரும் இந்நிலையில் அரசியல் விழிப்புணர்வுடன் இயங்கும் மத்திய பல்கலைக்கழகங்களையும் , சட்டக் கல்லூரிகளையும் குறிவைத்து தொடர்ந்து தாக்கப்படுவது சமூகத்தின் மீது விழக்கூடிய மிகப்பெரிய அடியாகும். மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடக் கூடிய கொடுமையானது நிச்சயமாக ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கக்கூடிய செயல் ஆகும் .
தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் பெரும் அரசியல் தலைவர்கள் தங்களது கல்லூரி காலங்களில் அரசியல் விழிப்புணர்வுடன் செயல்பட்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். இந்த நிலையை முற்றிலும் ஒழிக்கவே கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் அரசியல் நீக்கம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தேச விரோத சக்திகளால் செய்யப்படுகின்றன . அதன் வெளிப்பாடாகவே அரசியல் பேசும் மாணவர்கள் மீது உடல் ரீதியாகவும் , மன ரீதியாகவும் தொடர்ந்து தாக்குதல் நிகழ்த்தப்பட்டு வருகின்றது .
மக்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்காக பயிலக்கூடிய சட்டக்கல்லூரி மாணவர்களுக்கே நீதி மறுக்கப்படுதல் என்பது தேசத்திற்கான அவமானம். உடனடியாக கல்லூரி நிர்வாகம் அந்த மாணவியினுடைய இடைக்காலத் தடையை நீக்குவதோடு , வெளிப்படையாக தாங்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் .