அவள், இந்த உலகின் சரிபாதி நபர்களை குறிக்கும் அடையாளச் சொல். ஆனால் அவளாக உலகில் வாழ்வதில் உள்ள பிரச்சினைகளை ஒவ்வொரு நாளும் அவள் அனுபவித்துதான் ஆக வேண்டும். ஒரு பக்கம் உடைகளால் உருவங்களை மறைத்து வீட்டின் அடுப்பங்கரையில் உட்கார வைத்து தன் அடக்குமுறையையும், தன் அதிகாரத்தையும் பறை சாற்றுகிறது ஆண் சமூகம் என்றால் மற்றொரு புறம் உடைகளை களைந்து வீதி உலா வர வைத்து தன் வணிகத்தையும், தன் மோகத்தையும் தனித்து கொள்கிறது அதே ஆண் சமூகம்.
ஆணாதிக்கம் நிறைந்த இச்சமூகம் பெண்ணடிமைத்தனத்தை எந்த வகையிலும் ஏவ தயாராகவே வரலாறு முழுக்க காணக்கிடைக்கிறது. அதிலும் பெண் விடுதலை என்ற நோக்கில் பல தலைவர்களும், சிந்தனைவாதிகளும் தன் கருத்துகளிற்கேற்ப சிலவற்றை தீர்வுகளாக முன் வைத்தனர். ஆனால் அவை செயலில் இல்லாத காணல் நீராகவும், இன்னும் சில காணலாகவே இருந்து விடட்டும் என்றும் தோன்றும். உதரணமாக ‘கற்பு நிலை என்று சொல்ல வந்தார் இரு கட்சிக்கும் அதனை பொதுவில் வைப்போம்’ என்றார் மகாகவி அது இன்றும் காணல் நீராகக் கிடக்கிறது. அது சரி, தந்தை பெரியார் அதனினும் ஒரு படி மேலே சென்று ‘’கற்பென்று ஒன்றுமில்லை’’ என்கிறார். இந்த கருத்துக்கள் சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தினால் பெண் விடுதலையை அல்ல, பாலியல் விடுதலைதான் தரும்.
ஆனால் பெண் விடுதலையை சமூகத்தில் சாத்தியமாக்கியவர் நபிகள் நாயகம் அவர்கள். அதற்கான வரலாற்று சான்றுகளும் நம் கண்முன்னே இருக்கின்றன. ஆனால் வரலாற்றுப் பிழை என்னவென்றால் பெண் அடிமைத்தனத்தை நபிகளார் அவர்களோடு இணைத்தே இந்த சமூகம் தூக்கிப் பிடித்திருக்கிறது. நான் அந்தக் கருத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டு பெண் விடுதலையின் தலைவர் நபிகள் நாயகம் என்கிறேன். ஏன் என்றால்,
பிறக்கும்பொழுதே கள்ளிப்பாலிற்கு அழும் குழந்தைகளாக பெண் குழந்தைகளை மாற்றி வைத்தது உலகம். இன்று வரை நமது உலகில் நடைபெறும் அவலம் இது. அன்றைய அரபுலகில், பிறந்த பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்தனர். ஆனால் இஸ்லாமோ பெண் குழந்தைகளை கொலை செய்வதை கடுமையாக எதிர்த்தது. இஸ்லாம் உயிர்பெற்று மக்கத்து மாநகரில் வசந்தமாய் வளர்ந்த போது முஸ்லிம்களை சித்திரவதைக்கு உள்ளாக்கினர் சமூகத்தில் பெரிய அந்தஸ்து உடையவர்கள், இன்றைய மொழியில் சொன்னால் கார்ப்பரேட்டுகள். அவர்களின் சித்திரவதைக்கு பலியான முதல் உயிர்பலி சுமையா என்ற பெண் அவர்கள். இஸ்லாத்திற்காக முதல் உயிர்த்தியாகம் செய்த சுமையா அவர்கள் இஸ்லாத்தை தன் வாழ்வு நெறியாக ஏற்றுக் கொண்டது, இஸ்லாம் பெண் சிசுக்கொலையை எதிர்த்ததால் தான். ஆம் அவர் தன்னுடைய சகோதரி உயிருடன் புதைக்கப்படுவதை தன் சிறுப் பிராயத்தில் பார்த்திருந்தார். பெண் சிசுக்கொலையை இஸ்லாம் எதிர்க்கிறது என்பதை தன் மகன் மூலமாக தெரிந்து கொண்டதும் சுமையா அவர்கள் இஸ்லாத்தை தழுவிக்கொண்டார். திருக்குர்ஆன் சிசுக்கொலையைக் குறித்து இவ்வாறுக் கூறுகிறது.
“மேலும், வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். நாமே உங்களுக்கும் உணவளிக்கின்றோம்; அவர்களுக்கும் அளிப்போம்.” (திருக் குர்ஆன் 6:151)
சரி சிசுக்கொலையில் இருந்து பிழைத்து வந்தாலும் வாழ்வில் பிழைத்திருக்க கல்வி அவசியமாயிற்றே. ஆனால் உலகில் சரிபாதி உலவும் பெண்களில் கல்வி கற்பவர்களோ பாதிக்கும் குறைவுதான். இந்தியாவில் பெண்கள் 65 சதவிகிதம் தான் எழுத படிக்கத் தெரிந்தவர்கள். இது பொதுச் சதவிகித்தில் இருந்து 25 சதவிகிதம் குறைவாகும். இந்திய அரசாங்கம் கல்வியைப் பெற்றுக் கொள்வது மக்களின் உரிமை என்றது, ஆனால் நபிகளாரோ ஒவ்வொரு மனிதரும் கல்வியைப் பெறுவதினை கட்டாயக் கடமையாக்கினார். அப்படியானால் ஏழை, பணக்காரன், மலைவாழ் மக்கள், மீனவர், சமவெளி மக்கள், ஆண், பெண் என பேதம் பாராது மக்களிற்கு கல்வியை வழங்குவது அரசின் கடமையாகிறது. குறிப்பாக பெண் கல்வி கற்பதினை ஊக்கப்படுத்தினார் நபிகள் நாயகம் அவர்கள். விளைவு பெண்கள் இஸ்லாமிய வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றவர்களாக, குறிப்பாக கல்வியில் பெரும் சாதனைகளை படைத்தவர்களாக வலம் வந்தனர்.
நபிகளாரின் மனைவியான அன்னை ஆயிஷா அவர்கள் மிகச் சிறந்த ஞானம் பெற்றவர்களாக இருந்தார்கள். நீதி வழங்குபவராக, ஆலோசனைகள் நல்குபவராக, ஆட்சியில், குடும்பத்தில், தனிப்பட்ட வாழ்வில் சிக்கல்களைத் தீர்ப்பவராக இருந்த அன்னை ஆயிஷா அவர்கள் பல இஸ்லாமிய அறிஞர்களின் ஆசிரியராக திகழ்ந்தார்கள். வரலாற்றில் கல்வியில் சிறந்த முஸ்லிம் பெண்மணிகளை நாம் பெருமளவு அடையலாம் காண முடியும். அவர்களுக்கெல்லாம் முன்மாதிரியாக விளங்கியவர் அன்னை ஆயிஷா அவர்கள்.
இஸ்லாமிய வரலாற்றில் தலைசிறந்த அறிஞர்களில் ஒருவரான இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள் நஃபீஷா (ரஹ்) என்னும் பெண் அறிஞரின் மாணவர். மற்றொரு அறிஞரான இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்கள் அப்பெயரால் அடையாளப்படுத்தப்பட காரணம் அவரது மகள் ஹனீஃபா அவர்களின் சிறப்பான கல்வி ஞானம் ஆகும். ஏன் உலகின் முதல் சான்றிதழ் வழங்கும் பல்கலைகழகமான அல் கராவியூன் பல்கலைகழகத்தைக் உருவாக்கியவர் பாத்திமா அல் ஃபிக்ரி என்ற முஸ்லிம் பெண் தான். இத்தகைய சிறந்த மாற்றத்தை ஏற்ப்படுத்திய நபிகள் நாயகமைத்தான் பெண்களைக் கல்வி கற்க அனுமதிப்பதில்லை என்று இச்சமூகம் சொல்கிறது. உண்மையில் இந்தியாவில் முஸ்லிம்கள் ஒட்டு மொத்தமாகவே கல்வியில் பின் தங்கி இருக்கிறார்கள். காரணம் சுதந்திர போராட்டத்தின் பொழுது அந்நியர்கள் வழங்கும் கல்வியை கற்க மாட்டோம் என்ற அரசியல் முடிவினை எடுத்ததினால் தான்.
முஸ்லிம்களின் மீது சுமத்தப்படும் பெண்ணடிமைத்தனம் என்ற குற்றச்சாட்டிற்கு முதலில் எடுக்கப்படும் ஆயுதம் உடை. ஹிஜாப் எனும் உடை ஒழுக்கமுறை முற்றிலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒன்று. முகம், கைகள், கால்களைத் தவிர மற்ற உடல் அங்கங்களை தன் கணவர், தந்தை, சகோதரர்கள், மற்றும் அந்த வகையில் வரும் உறவினர்களை தவிர மற்றவர்கள் முன்னிலையில் வெளிக்காட்ட கூடாது. சுருக்கமாக இதனையே உடையோழுக்கமாக இஸ்லாம் முன்னிறுத்துகிறது. இந்த உடையொழுக்கம் எந்த வகையிலும் ஒரு பெண்ணை தன்னுடைய அலுவல்களிலிருந்தும், சாதனைகளிலிருந்தும் தடுப்பதில்லை. மேலும் வணிகம் சார்ந்த ஒரு பொருளாக பெண்ணை பாவிப்பதிலிருந்து இஸ்லாம் பாதுகாக்கிறது. அதுமட்டுமல்ல உடையொழுக்கம் இஸ்லாத்தில் பெண்களுக்கானது மட்டுமல்ல ஆண்களிற்கும் தான். ஆண்கள் இறுக்கமான ஆடை அணியக்கூடாது, பட்டாடை அணியக்கூடாது, உடல் தெரியும் வண்ணம் மெல்லிய ஆடை அணியக்கூடாது, தங்க ஆபரணங்கள் அணியக் கூடாது என்ற கட்டுபாடுகள் இஸ்லாத்தில் இருக்கின்றன.
அடுத்து அவள் வளரும் பொழுது அனுபவிக்கும் முக்கியமான பிரச்சனை பாலியல் ரீதியான துன்புறுத்தலாகும். சமீபத்தில் MeToo என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆன பொழுது அத்தனை பேரும் இந்த பிரச்சனைகளை உணர்ந்திருப்பீர்கள். ஆம் உலகின் மிகப்பெரிய பிரச்சனை, ஒரு பெண், ஒரு குழந்தை அனுபவிக்கும் நரகம் அது. ஆனால் நபிகளார் ஒரு பெண்ணை தவறான பார்வையில் பார்ப்பதனையே சைத்தானின் பார்வை என்கிறார். ஒரு நபித்தோழர் ஒரு பெண்ணை குளிக்கும் பொழுது பார்த்ததை விபச்சாரத்தின் குற்றமாக பாவித்து அவருக்கு மரண தண்டனை விதித்தார். ஆம் அவர் குழிக்குள் இறக்கப்பட்டு கல்லால் அடித்து மரணத்தை தழுவும் தண்டனை பெற்றார். இனி யார் ஒரு பெண்ணை சீண்டிவிட முடியும். மற்றுமொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த பெண்ணை பார்த்ததற்காக தான் விபச்சாரம் செய்ததாக அந்த நபித்தோழரே எந்த சாட்சியும் இல்லாமல் தானாக முன்வந்து தண்டனையை ஏற்றார். ஆண்களின் மனோநிலையை இஸ்லாம் மாற்றியது.
மேலும் ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக தவறு செய்ததாக குற்றம் சுமத்த வேண்டுமானால் அந்த நபர் மொத்தம் நான்கு சாட்சிகளை அழைத்துவர வேண்டும். ஒருவர் தவறினாலும், அல்லது சாட்சியில் பிழை இருந்தாலும் அவர்கள் எழுபது சாட்டையடிகளை ஏற்க வேண்டும். “அவ தப்பானவங்க” என்று சாதரணமாக ஒரு பெண்ணை இழிவுபடுத்தும் நிலையை இஸ்லாம் முற்றிலுமாக மாற்றி அமைத்தது. தவறு செய்யாத ஒரு பெண்ணை “அவ ஒரு மேட்டர்” என்று சர்வ சாதரணமாக சொல்லி கடந்து செல்லும் ஆண்களிற்கு இஸ்லாம் ஆட்சியில் இருந்தால் எழுபது கசையடிகளை வாங்கித்தர முடியும்.
அடுத்ததாக ஒரு பெண் சந்திக்கும் பிரச்சனை திருமணம். தான் விரும்பியவரை திருமணம் செய்து கொள்ளும் உரிமையை ஒரு பெண்ணிற்கு இஸ்லாம் வழங்குகிறது. “கண்ணிப் பெண்ணாக இருந்தால் அனுமதி வழங்க வேண்டும் என்றும், விதவையாக இருந்தால் சொல்லால் கட்டளை இட வேண்டும் என்றும், பெண்ணின் சம்மதம் இன்றி செய்து வைக்கப்படும் திருமணம் செல்லாது என்றும் நபிகளார் அவர்கள் கூறுகிறார். பெண் மணமகன் இடமிருந்து திருமணக் கொடை எனும் மஹர் எவ்வளவு வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். அதனை நபிகளார் இப்படி கூறினார் ஒரு பெண் மலையளவு பொற்குவியலையே தன் திருமணத்துக்காக கேட்டாலும், அதை ஆண் மஹராக தர வேண்டும்.
இன்னும் திருமண வாழ்வில் பெண்ணிடம் ஒரு ஆண் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் தெரியுமா?
‘’உங்களில் சிறந்தவர்; உங்கள் மனைவியரில் சிறந்தவர்’’ என்கிறார் நாயகம்(ஸல்) அவர்கள். அப்படி பெண்ணிடம் சிறந்தவராக இல்லாதவரிடம் பல்லை கடித்து கொண்டு வாழவும் நபிகளார் கூறவில்லை.
நபிகள் நாயகம் அவர்கள் ஒரு ஆண் பெண்ணை விவாகரத்து செய்வதினை விட ஒரு பெண் ஆணை விவாகரத்து செய்யும் நடைமுறையை இலகுவாக்கினார்.
முத்தலாக் எனும் நடைமுறை இன்று பெண்களை வாட்டி எடுப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உண்மை யாதெனில் ஒரே தவணையில் மூன்று தலாக் சொல்வதினை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. அப்படி பெண்களை ஏமாற்றி விடவும் முடியாது. விவாகரத்து வழங்கிய நபர் பெண்ணிற்கு அவளது மறுமணம் வரை பொறுப்பாளியாகவே இருப்பார். நடுத்தெருவில் விட்டுவிட்டெல்லாம் அந்த ஆண் சென்று விட முடியாது. தான் கொடுத்த மணக்கொடையை அந்த ஆண் பெண்ணிடம் இருந்து பெறவும் முடியாது. குழந்தையும் தாயுடன் இருக்கவே அனுமதிக்கப்படும்.
கணவனை இழந்த ஒரு பெண் அல்லது விவாகரத்தான ஒரு பெண் மறுமணம் செய்து கொள்ளும் உரிமையை வழங்கினார் நபிகள் நாயகம் அவர்கள். இந்தியாவில் விதவை மறுமணம் செய்வது எந்தளவிற்கு எதிர்ப்புக்குள்ளாகி இருந்தது தெரியுமா? தந்தை பெரியார் அவர்கள் விதவை திருமண எதிர்ப்பை ‘’சமூதாய தற்கொலை’’ என்று விமர்சனம் செய்யுமளவு.
பெண்களிற்கான சொத்துரிமையையும் வழங்கியது இஸ்லாம். அதனை இலகுவும் ஆக்கியது. ஆனால் நமது நீதிமன்றங்களில் பெண்கள் தங்களுக்கு உரித்தான சொத்தினை போராடிப் பெறுவது குதிரைக் கொம்புதானே!
மேலும் நபிகளாரின் தோழரும், மிக அதிகமான நபிகளாரின் பொன்மொழிகளின் அறிவிப்பாளருமான அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் பொன்மொழிகளை தவறாக கூறிவிட்டால் அன்னை ஆயிஷா அவர்கள் அதனை கண்டித்து உடனடியாக அதனை சரி செய்பவராக நமக்கு வரலாற்றில் காண்கிறார்.
இரண்டாவது கலீஃபா உமர் அவர்கள் பெண்களிற்கு மணமகன் வழங்கும் திருமணக் கொடைக்கு வரம்பு நிர்ணயித்த பொழுது அதனை எதிர்த்து பெண் ஒருவர் அந்த சபையில் பல பேர் முன்னிலையில் தன் கருத்தை பதிவு செய்து அச்சட்ட வரம்பையே பின்வாங்கச் செய்தார்.
பல நேரங்களில் தன்னுடைய மனைவியரிடத்தில் ஆலோசனையைப் பெற்றார் நபிகள் நாயகம் அவர்கள். ஹுதைபிய்யா உடன்படிக்கையின் பொழுது அண்ணலார் அவர்கள் அன்னை சல்மா அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் இக்கட்டான தருணத்தில் தீர்வினை முன்வைத்தார்.
தவறெனும் போது ஆண்களை கண்டிப்பதும், ஆண்களின் முன்னிலையில் தன்னுடைய கருத்தை பதிவு செய்வதும், ஆண்களிற்கு ஆலோசனை வழங்குவதும் பாவமாகவும், அவமரியாதைக் குறியதாகவும் பார்க்கப்பட்ட அன்றைய காலத்தில் இந்த உரிமைகளை இலகுவாக பெண்களுக்கு வழங்கியவர் நபிகள் நாயகம் அவர்கள்.
ஆட்சி புரியவும், போர் புரியவும், ஆசிரியராகவும், பள்ளிவாசல்களில் பெண்களின் பங்கேற்பையும் நபிகளார் தடை செய்யவில்லை. ஒரு பெண் தான் வேலைக்கு செல்வதை எந்த வகையிலும் இஸ்லாம் தடை செய்யவில்லை. குர்ஆன் மூஸா நபி (அலை) அவர்களின் வரலாற்றின் வழியாக இதனை விளக்குகிறது. (பார்க்க திருக்குர்ஆன் 28:23) ஆண்களை உழைக்க கட்டாயப்படுத்திய இஸ்லாம் பெண்களிற்கு அதனை கட்டயமாக்கவில்லை அவ்வளவே.
எல்லாவற்றிற்கும் மேலாக பெண் விடுதலையே தான் உருவாக்க வந்த சமூகத்தின் வெற்றியாக கருதினார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
நபிகளாரிடம் எதிரிகளின் வேதனைகளை தாங்க முடியாத தன் தோழர்கள், அதனை முறையிட்ட பொழுது நாயகம் அவர்கள் கூறுகிறார்கள்.
“நிச்சயமாக அல்லாஹ் இந்த விவகாரத்திற்கு உதவியை வழங்குவான்! ஒரு நாள் வரும் அந்த நாளில் சன்ஆ முதல் ஹழ்ரமௌத் வரை தனியே பயணிக்கும் ஒரு பெண் அல்லாஹுவின் அச்சத்தை தவிர, தனது ஆடுகளை ஓநாய் அடித்து விடும் என்ற அச்சத்தை தவிர வேறு எந்த அச்சமும் இல்லாமல் பயணிக்கும் அளவு அல்லாஹ் உதவியை வழங்குவான்” என்றார்கள்.
ஒரு பெண் தனியே, யாருடைய அச்சமும் இல்லாமல், தன் கற்பைக் குறித்த எந்த பயமும் இல்லாமல், ஆண்களின் மீது நம்பிக்கையோடு பயணம் செய்யும் நிலைதான் நபிகளார் உருவாக்க விரும்பிய சமூகம். அப்படியொரு சமூகத்தை உருவாக்கவும் செய்தார் நாயகம் அவர்கள்.
நபிகளார் அவர்கள் தன் சமூகத்தை மனதளவிலும், சட்டங்களாலும் நீங்கள் ஒரே இனத்தவர்கள் தான் என்றும், பெண்களிடம் ஆண்களை நல்ல முறையில் நடந்து கொள்ளும்படியும் எச்சரித்தவண்ணம் இருந்தார்கள். தனது இறப்பிற்கு முன்னதாக நிகழ்த்திய இறுதிப் பேருரையில் கூட இந்த எச்சரிக்கையை, அறிவுரையை நபிகளார் அவர்கள் இந்த மனித சமூகத்திற்கு வழங்கினார்கள். பெண்களிற்கான முழு உரிமையையும், பாதுகாப்பையும் வழங்கிய தலைவர் நபிகள் நாயகம் அவர்கள் மட்டுமே. அதனால் தான் நான் நபிகளாரை பெண் விடுதலையின் தலைவர் என்கிறேன்.
“அவர்களுடைய அதிபதி அவர்களுக்கு இவ்வாறு மறுமொழி கூறினான்: “உங்களில் எவருடைய நற்செயலையும் நான் வீணாக்கவே மாட்டேன் அவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி! நீங்கள் ஒருவர் மற்றவரிலிருந்து தோன்றிய (ஒரே இனத்த)வர்களே! எனவே (எனக்காக) நாட்டைத் துறந்தவர்கள், மேலும் என் வழியில் தம் இல்லங்களை விட்டு வெளியேற்றப்பட்டு துன்பத்திற்குள்ளாக்கப்பட்டவர்கள், இன்னும் (எனக்காக) போர் புரிந்தவர்கள், கொல்லப்பட்டவர்கள் ஆகியோரின் குற்றங்குறைகளையும் நான் மன்னிப்பேன். இன்னும் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனங்களில் திண்ணமாக அவர்களை நுழைவிப்பேன். இது, அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்குக் கிடைக்கும் நற்கூலியாகும். மேலும் அழகிய நற்கூலி அல்லாஹ்விடமேயுள்ளது.”
(திருக்குர்ஆன் 3:195)
– ஸஃபியா அல் ஹிந்த்
Diploma in Print & Multimedia journalism,
iijnm-Bangalore
safiyaalhind@gmail.com