இக்கால சூழலில் பெண்ணியம் பேசக்கூடியவர்களை ஏதோ வேற்றுகிரகத்தவர் போல தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் விகிதம் அதிகரித்துள்ளது. ஆணாதிக்க சமூகத்தை விரட்டவந்த இந்த பெண்ணியக்குழுக்கள் தற்போது பெண்ணாதிக்க சமூகமாக மாறுவது போலவும்,ஆண்களையும் சமூக, அதிகார, பொருளாதார ரீதியாக பின்னுக்கு தள்ளுவதே பெண்ணிய குழுக்களின் நோக்கம் போன்ற பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் மாற்றம் என்ற பெயரில் பெண்களை சமூக சீர்கேட்டில் தள்ளிவிடுவதாகவும் கருதுகின்றனர். உலக அளவில் பெரிதளவாக கொண்டாடப்பட இருக்கும் மார்ச்8, உலக பெண்கள் தினத்தைக் முன்னிட்டு சில விசயங்களை நான் பகிர விரும்புகிறேன். பெண்ணியத்தின் நவீன உருவம் மற்றும் அவைகளின் படிப்படியான வளர்ச்சி குறித்து நாம்அறிந்து கொள்ளவேண்டியது அவசியமாக இருக்கிறது.
ஐரோப்பிய நாட்டு வழக்கத்தின்படி பெண்களுக்கு தேவையான அடிப்படை தேவைகள் அனைத்தும் ஒரு ஆணின் அனுமதியுடனே பூர்த்திசெய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் ஒருபோதும் ஆண்களுக்கு நிகரானவராக கருதப்படமாட்டார்கள்..பெண்களை சமயலறைக்கு மட்டும் சொந்தக்காரர்களாக மாற்றி, அவர்களின் தனிநபர் உரிமைகளில் கூட ஆண்களின் ஆதிக்கம் தென்பட்டது. அதுமட்டுமல்லாது சில அடிப்படைவாதிகள் பணத்திற்காக தங்கள் வீட்டு பெண்களை விற்கவும் துணிந்தார்கள். பெண்களை இரண்டாம் பாலினமாக கருதும் ஆணாதிக்க சமூகத்திற்கு எதிராக கி.பி.14 ஆம் நூற்றாண்டில் பெண்களுக்கான சமஉரிமை குழுக்கள் தோன்றின. ஆண்களைப் போல பெண்களுக்கும் இச்சமூகத்தில் கல்வி, அரசியல் போன்ற தளங்களில் சமவாய்ப்பு அளித்தாலே அவர்களும் திறமையாளர்களாக மாற முடியும்.
முதல்நிலைபெண்ணியம்:
மேற்கு ஐரோப்பிய நாடுகளில் 17 மற்றும் 18-ம் நூற்றாண்டுகள்“ அறிவின் வசந்த காலமாக” பார்க்கப்பட்டது. கல்வி, அறிவு, மதம், கடவுள் நம்பிக்கை என பல தலைப்புகளில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன. அதேகாலத்தில் அங்கிருந்த சில ஆண் அறிஞர்களின் உந்துதலின் அடிப்படையில் வாழ்வுரிமை, கல்வி, சொத்துரிமை, போன்ற எல்லா நிலைகளிலும் சம வாய்ப்பினை நிலை நாட்டவும், ஆண்களையும் பெண்களையும் ஒரே தரத்தில் நடத்த வேண்டுமென்ற முழக்கங்களுடன் பெண்ணிய குழுக்கள் தங்கள் உரிமைப் போராட்டத்தை துவங்கினர். ஆங்கில பெண்ணியவாதிகளில் முக்கியமானவராக கருதப்படும் மேரிவுல்ச்டன்’கிராப்ட்(Mary Wollstonecraft)-ஆல் 1792 ல்எழுதப்பட்ட‘A Vindication of the Rights of Woman’ எனும் புத்தகத்தில் பெண்கள் ஆண்களை (கணவன், தந்தை, சகோதரன் என எல்லா நிலைகளிலும்) சார்ந்தே வாழ வேண்டும் எனும் கருத்தை கடுமையாக எதிர்த்ததோடு, பெண்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் சமஉரிமையும் சட்டப்பாதுகாப்பும் தேவை என குரல் எழுப்பினர்.
இந்த உரிமைக்கான எழுச்சிக்குரல், வசந்த காலத்தில் உருவான சகோதரத்துவம், சுதந்திரம், சம உரிமை போன்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு பிரெஞ்சு, இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகளில் பெரும் மனித சுழற்சியை (புரட்சி) ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாது. இதனையடுத்து பெண்ணியவாதிகள் சமஉரிமை போராட்டத்தை தீவிரமாக ஆரம்பித்தனர். அமெரிக்க போன்ற நாடுகளில் கறுப்பினமக்களின் விடுதலைப் போராட்டத்தையும் தூண்டியது. இதனைதொடர்ந்து1850களில் பெண்ணியக்கங்கள் தங்கள் வாக்குரிமைக்கான போராட்டத்தை‘suffrage movement’ துவங்கினர்.
பெண்ணுரிமைகளுக்காக வலியுறுத்தும் முன் எது பெண்ணுரிமை என்ற கேள்வி எழுகிறது, இதே கேள்வி அன்றைய பெண்ணியாவதிகளிடம் எது நமது நோக்கமாக இருக்கப்போகிறது என்ற பெரும் விவாதங்களை உருவாக்கியது. நடுத்தர, மேல்தட்டு பெண்ணியவாதிகள் தங்கள் கல்வி மற்றும் வாக்குரிமைக்காக அரசுக்கெதிரான போராட்டங்களை கட்டவிழ்த்து விட்டனர். மற்றொரு நிலையில் கறுப்பின மற்றும் உழைக்கும் வர்க்கத்தை சார்ந்த பெண்ணியவாதிகள் பெண் பாதுகாப்பு, ஊதிய உயர்வு, வேலைநேர குறைப்பு, தாய்மைக்கு சிறப்புரிமை போன்ற உரிமைகளுக்காக குரல் கொடுத்தனர்.ஆண்களை போல பெண்களுக்கு சமஉரிமை கிடைக்க வேண்டுமானால் அடித்தட்டு பெண்ணியவாதிகள் முன்வைக்கும் உரிமைகளுக்கு போராடுவது வீணாகக்கூடும் என மேல்தட்டு பெண்ணியவாதிகள் கருதினர். ஆனால் பெரும்பாலான பெண்விடுதலை போராளிகள் பொதுமற்றும் தனிநபர் வாழ்வில் பெண் பாதுகாப்புச் சட்டம்அவசியம் என்பதில் ஆர்வம் காட்டி வந்தனர்.
பிரிட்டிஷ் அரசு தன் நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 1918ல் வாக்குரிமையை வழங்கியது. இதனை தொடர்ந்து அமெரிக்க ஐக்கிய நாடுகளும் தங்கள் நாட்டு பெண்களுக்கு வாக்குரிமையை வழங்கியது. உலகப் போரின் தாக்கத்தினால் பெண்ணிய இயக்கங்களின் குரல்கள் ஓய்ந்தன. இரண்டாம் உலகப்போரின் போது ஆண்கள் எல்லையில் இருக்க பெண்கள் அரசு பணிகளில் அமர்த்தப்பட்டனர். போர்கள் ஓய்ந்தவுடன் பெண்கள் மீண்டும் தங்கள் வீட்டு பராமறிப்பாளராகவே மாறினார்.
இரண்டாம்நிலைபெண்ணியம்:
பிரெஞ்சுநாட்டில் 1965 வரை கணவனின் அனுமதியின்றி மனைவிகள் வேலைக்கு செல்லக்கூடாது என்பது சட்டமாகஇருந்தது. மேலும் பெரும்பாலான நாடுகளில் பெண்களின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்பட்டன.அமெரிக்க வாழ் கறுப்பின மக்களின் சிவில் உரிமை இயக்க போராட்டத்தின் வாயிலாக பெண்ணியம் புதுப்பொலிவுடன் அமெரிக்காவிலும், மேற்கு ஐரோப்பாவிலும் மலர்ந்தன. சைமன்-டி-போவியர் (Simone de Beauvior)1949ல் தன்னுடைய இரண்டாம் பாலினம் (Second Sex)எனும் புத்தகத்தில் எழுதிய கருத்துப்படி, ஒருவர் பிறப்பால் அல்ல,வளர்ப்பாலேயே பெண்ணாக உருவாகிறாள் எனும் கருத்து பால்(Sex)மற்றும் பாலினத்திற்கும்(Gender) வேறுபாடுகள் இருப்பதாக உணரமுடிகிறது. பால் என்பது பிறப்பு முறையை குறிக்கும், அதுபோல பாலினம் என்பது ஒருவரின் சமூக கட்டமைப்பைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. ஆணாதிக்க சமூகம் சிறுவர், சிறுமியரை பல்வேறு வழிகளில் ஊக்குவிப்பதாக கூறி, சிறுவர்களைஎந்த திறமைகளையும் வெளிக்கொனறாத வண்ணம் செய்வதற்கு பெண்பால் என்றும், சிறுமிகளின் திறமைகளை கண்டறியவிடுதலை விட்டும் தடுப்பதற்கு ஆண்பால் என்றும் வழங்கிவந்தனர். பெட்டி பிரிடன் (Betty Friedan) 1963ல் தன்னுடைய The Feminine Mystique எனும் புத்தகத்தில், மனைவியாக, தாயாக, என்ன சூழலை அவர்களுக்கு இச்சமூகம் வழங்குகிறது என்ற கேள்வி எழுப்பிய வண்ணம், பெண்கள்தாயாக, மனைவியாக சிறந்த குடும்ப, சமூக கட்டமைப்பை கொடுக்க முடியும் என்பதை புனிதமாக இந்த சமூகம் பின்பற்றி வருகிறது. ஆனால் இவ்வழிமுறையால் அவர்களின் தனித்திறமைகள் அனைத்தும் மழுங்கடிக்கப்படுகின்றன. சில பெண் குழுக்கள் 1960 களில் “தனிநபர் வாழ்வும் அரசியலே” எனும் முழக்கத்தை முன்னெடுத்தனர். இதற்கு பரவலாக பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும், மையமாக பெண்களின் குடும்ப சூழலில் அவர்களுக்கு எதிராக நடக்கும் எல்லா வன்முறைகளும் தனிநபர் சார்ந்து இருந்தாலும் அது பொதுவான அரசியல் நோக்குடன் தான் பார்க்கவேண்டும், ஏனெனில் பெண்கள் இந்த நாட்டின் பிரஜைகளாக இருக்கின்றனர். பொதுவெளியில் ஒரு தவறு நடந்தால் சட்டப்படி எவ்வாறு தண்டனை வழங்கப்படுகிறதோ அதே போல, தனிநபருக்கு (பெண்களுக்கு) இழைக்கப்படும் தீங்குகளுக்கும் சட்டப்படி தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.ஆண்கள் பெண்களை பாரம்பரியத்தின் பெயரால் அடிமைப்படுத்துவதை அரசு உறுதிசெய்த விடுதலைமுறை நமக்கு சொல்லித்தரவில்லை. பெண் என்பவள் குழந்தை ஈன்றவும், அவர்களை பாலியல் சுரண்டளுக்காக மட்டுமே தகுந்தவள் போல சித்தரிப்பதும் என பெண்களை ஒடுக்கினர். பரஸ்பர சொத்துரிமை, பெண்களுக்கான இடஒதிக்கீடு போன்று பொது சமுதாயத்தில் முடிவு செய்யப்படும் விசயங்கள், அதிகளவிலான பெண்களின் தனி வாழ்விலும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
சமூக உரிமை சார்ந்த பெண்ணிய குழுக்களை பொறுத்தவரை பெண்களுக்கு தாய்மை, ஆதரவு, வேலை நேர குறைப்பு போன்ற தனிநபர் பாதுகாப்பு குறித்தான வேலைகளை செய்துவந்தனர். அதே கால கட்டத்தில் தான் சில (அடிப்படைவாத) தீவிர போக்கு கொண்ட பெண்ணிய அமைப்புகளும் (Radical Feminism) தோன்றினர். இவர்களின் கூற்றுப்படி சட்டம் இயற்றுபவர்களே ஆணாதிக்க சமூகத்தை சார்ந்தவர்களாக இருக்கும் நிலையில் சட்டத்தின் வழியில் பெண்ணுரிமையை பெற முடியாது. மேலும் ஆணாதிக்கத்தை முற்றிலுமாக முடக்கிவிட்டு பெண்களை ஆணின் தரத்திற்கு உயர்த்த வேண்டும் என தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டனர். Catherine Mac Kinnon, Kate Millet (Sexual Politics 1970), Shulamath Firestone (The Dialectics of Sex 1970) தீவிர பெண்ணியவாதிகளில் அடங்குவர்.இவர்களுக்கு பலமுகங்கள் இருந்தாலும், பெரும்பாலானோர் ஆணாதிக்கத்தை வெறுத்தனர் ஆண்களை அல்ல.ராபின் மோர்கன் போன்றோர் ஆண்களை வெறுப்பதற்காகவே பெண்ணுரிமைக்காக போராடினர். பெண்கள் எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுகூட தனிநபர் உரிமை சார்ந்தது என வாதாடினார். பெண்களை ஒடுக்குதல், பெண்களை ஆபாசமாக காண்பித்தல், கற்பழிப்பு, மத நம்பிக்கைகளின் அடிப்படையை பெண்களிடம் திணித்தல், பாரம்பரியத்தை கடைபிடித்தல் இவை அனைத்தும் ஆணாதிக்கமாகவே பார்க்கப்பட்டது. இச்சூழ்நிலையில் பெண்களுக்கு வழங்கவேண்டிய சம உரிமைக் கோட்பாட்டை விட்டுவிட்டு பெண்ணியவாதிகளின் நோக்கத்தை தவறாக சித்தரிப்பதை ஆண்கள் கையாண்டனர்.
மூன்றாம்நிலைபெண்ணியம்:
ஒரு சில பெண்ணியவாதிகள் இன்றும் இரண்டாம் நிலை பெண்ணியம்தான் தொடர்வதாக எண்ணுகின்றனர். ஆனால் பெரும்பாலான பெண்ணியவாதிகள் மூன்றாம்நிலை 1990களில் தொடங்கிவிட்டதாக உறுதியளிக்கின்றனர். இரண்டாம் நிலை பெண்ணியத்தில் மேல்தட்டு பெண்களுக்கு கவனம் செலுத்தியதை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தனர். பெண்கள் என்பவர்கள் ஒரே வகையான ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படுபவர்கள் அல்ல. வகுப்பு, இனம், சாதி என பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அவர்களின் வகுப்பு, மதம், வாழ்வுமுறை சார்ந்து அவர்களின் உரிமைகள் வேறுபடும். மேல்தட்டு மற்றும் உழைக்கும் வர்க்கத்தை சார்ந்த இருவரின் ஒடுக்குமுறைகளும் வெளிக்காட்டப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தனர். உள்ளும், வெளியிலிருந்தும் இந்த பெண்கள் தங்கள் சமூகத்தவர்களாலேயே இன்னல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். திருநங்கைகள், லெஸ்பியன், இருபால் உறவு பெண்கள் தங்கள் உரிமைகளை உறுதிப்படுத்தி கொள்ள துவங்கியதும் கூட, மூன்றாம் நிலை பெண்ணியத்தின் ஒருபகுதி தான்.
ஐரிஸ் மரியன் எங் (Justice and Politics of Difference, 1990)பெண்களுக்கு எதிரான (ஒதுக்குதல்,தனிமைபடுத்தல், உரிமையைப் பரித்தல், கலாச்சார ஆதிக்கம், வன்முறை) போன்ற முக்கிய ஐந்து குற்றங்களை கண்டார். முதல் மற்றும் இரண்டாம்நிலை பெண்ணியம் நிறுவனம் சார்ந்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை மட்டுமே சந்தித்தது. ஆனால் மூன்றாம் நிலை பெண்ணியம்வேறு ஆணாதிக்க முறையை கொண்டு வளர்ந்து வரும் நாடுகளில் நடைபோட ஆரம்பித்துள்ளன. முன்சென்ற பெண்ணிய இயக்கங்களுக்கு வலு சேர்க்கும் வண்ணம் மூன்றாம் நிலை பெண்ணியவாதிகள் பொது இடஒதிக்கீடு, அரசியல் அதிகாரம், சமூக உரிமைக்காக குரல் கொடுத்தனர்.
இக்கட்டுரை வாசகர்களுக்கு மேற்குலகிலும், தற்போது இந்தியா போன்ற பல நாடுகளிலும் வளர்ந்துவரும் பெண்ணியத்தின் பல்வேறு முகங்கள் அதன் தனித்தன்மைகள் குறித்து விளக்குவதற்கே. தற்போது சமூக வலைதள நகர்வுகள் கூட நான்காம் நிலை பெண்ணியம் என்று கூறப்படுகிறது. பெண்களுக்கான சம உரிமைகள் இன்றும் வழங்கப்படவில்லை என்பதே உண்மை. பெரும்பாலான ஆண்கள் கூட இன்று பெண்ணுரிமைக்காக போராட ஆரம்பித்துவிட்டனர். ஆணும், பெண்ணும் வீட்டிலும் நாட்டிலும், உறவுகளிலும், அவர்களின் அதிகாரம் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி அறிந்து கொள்ள வேண்டும். பெண்களுக்குரிய மரியாதையையும், உரிமைகளையும் அன்றாட வாழ்வில் நடைமுறை படுத்த வேண்டும். ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் சமூக, அதிகார ரீதியாக என்று சமத்துவம் நிளவுகிறதோ, அன்று தான் பெண்ணியவாதிகளின் போராட்டம் உண்மையான வெற்றி பெரும்.
Translated work by
Mohamed Sharjun S
Author: Asifa Zunaidha F (Doctoral Candidate, Jawaharlal Nehru University)
In Tamil: Mohamed Sharjun S, (B.A.,)