ஒரு வாரத்தில் இரண்டு காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
ஜெயலலிதா சமாதியில் கடந்த 4ம் தேதி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் அருண்ராஜ் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். நேற்று இரவு சென்னை அயனாவரம் காவல்நிலைய ஆய்வாளர் சதீஷ்குமார் என்பவர் தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை என்று எழுதி வைத்துவிட்டு காவல்நிலைய வாசலிலேயே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த சில வருடங்களாக மத்திய, மாநில பாதுகாப்புப் படையினர், காவல்துறையினர் பணி நேரங்களிலேயே இப்படி தங்களைத் தாங்களே சுட்டுக் கொல்வதும், சிறு ப்ரச்னைகளுக்காகக் கூட சக பணியாளர்களை சுட்டுக் கொல்வதுமான துன்பியல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
அரசுகளும், காவல்துறை உயர் அதிகாரிகளும் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி பணிச் சுமைகளை குறைப்பது, உளவியல் ரீதியாக மன அழுத்தங்களை நிவர்த்தி செய்வது, பல வருடங்களாக நிரப்பப்படாமல் இருக்கும் பணியிடங்களை நிரப்புவதன் மூலம் பணிச்சுமைகளை சமமான அளவில் பிரித்துக் கொடுப்பது போன்ற நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் உடனடி கவனம் செலுத்தி மேற்கொள்ள வேண்டும்.
காவல்துறையை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழக முதல்வர் தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்குள் நடந்துள்ள இந்த சம்பவங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.