மதங்களை வகைப்படுத்திப் பார்க்கும்போது, ஆப்ரஹாமிய மதம் என குறிப்பிடப்படும் யூத, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாத்தை செமித்திய மதம் எனவும், இறைத்தூதர்கள் இல்லாத இந்துமதம் போன்ற மதங்களை செமித்திய அல்லாத (non-semitic) மதம் எனவும் குறிப்பிடுகிறோம்.
வரலாற்றெழுத்தியலில் ஈடுபடத் தொடங்கிய காலம் தொட்டு, இந்த மதங்களின் வரலாற்றைஅறிந்துகொள்வதில் மனிதர்களுக்கு ஆர்வமும் கரிசனமும் இருந்துவந்துள்ளன. விளைவாக, அவற்றின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் தெரிந்துகொள்ள ஏராளமான முயற்சிகளும் ஆய்வுகளும் நடந்துவந்திருக்கின்றன. அந்த வகையில், நாம் வாழும் நாட்டில் பெரும்பான்மை மதமாய் அறியப்படும் இந்து மதம் பற்றி அமெரிக்க அறிஞர் வெண்டி டோனிகர் எழுதிய நூல், “இந்துக்கள்: ஒரு மாற்று வரலாறு”. இது சுமார் 900 பக்கங்களைக் கொண்டது.
வெண்டி டோனிகர் சமய வரலாற்று அறிஞர். சமஸ்கிரதத்திலும் இந்திய ஆய்விலும் முனைவர் பட்டம் பெற்றவர். The Origins of Evil in Hindu Mythology, Splitting the difference : Gender and Myth in Ancient Greece & India உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். சற்றேறக்குறைய 50 ஆண்டுகள் இந்துமதம் குறித்த ஆராய்ச்சியின் திரட்சியாக “இந்துக்கள்: ஒரு மாற்று வரலாறு” எனும் இப்புத்தகத்தை இவர் எழுதியுள்ளார்.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் இந்நூலை ஆங்கிலத்தில் பென்குயின் பதிப்பகம் வெளியிட்டது. வெளிவந்தவுடனேயே இந்நூலை தடை செய்யவேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்துத்துவவாதிகள் வழக்குத் தொடுத்தது நமக்கு நினைவிருக்கலாம். இந்துத்துவ அடிப்படையில் கல்வி திட்டத்தில் மாற்றியமைக்கும் இலக்குடன் செயல்படும் ‘ஷிக்ஷா பச்சாவ் அந்தோலன்’ எனும் அமைப்பின் நிறுவனர் தீனாநாத் பத்ரா, ஆர்.எஸ்.எஸ். உதவியுடன் இதை செய்தார்.
பென்குயின் நிறுவனத்திற்கு இந்துத்துவவாதிகளிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியதும், அந்நிறுவனம் பணிந்துபோய் இந்நூலை விநியோகிப்பதையே நிறுத்திக்கொண்டது. இனி இதை வெளியிடுவதில்லை என்றும் சொல்லியது. அருந்ததி ராய் இந்துத்துவவாதிகளின் இந்நடவடிக்கையைக் கண்டித்ததோடு, பென்குயின் நிறுவனத்தின் முடிவை தவறு என சுட்டிக்காட்டி ஒரு கடிதம் எழுதியது இங்கே குறிப்பிடத்தக்கது.
வரலாற்றைக் கையகப்படுத்துவதற்கான திரிபு வேலைகளை இந்துத்துவ பயங்கரவாதிகள் நெடுங்காலமாக செய்துவருகின்றனர் என்பது ஊரறிந்த இரகசியம். இந்து ராஷ்டிர கனவை முன்னெடுப்பதற்குத் தகுந்தாற்போல் புராணங்களையும் இதிகாசங்களையும் வரலாறாய் சித்திரித்து எழுதுவதில் முனைப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதிலும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன், அவர்களின் மோசடிகள் இன்னும் வீரியம் பெற்றுள்ளன.
இந்த மோசடிகளையெல்லாம் தோலுரித்துக் காட்டுபவர்களையும், அறிவியல்பூர்வமாக வரலாற்றை எழுதும் அறிஞர்களையும் ஆதிக்க சக்திகளான பிராமணியவாதிகளும் அவர்களின் நேச சக்திகளும் விட்டுவைப்பதில்லை. அவர்களின் குரல்வளையில் கால் வைத்தேனும் அந்தக் குரல்களை ஒடுக்க முனைகின்றனர். இந்த சூழலில், நேர்மையாக எழுதப்படும் வரலாற்றை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கவேண்டியது அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது.
பேராசியர் வெண்டி டோனிகரின் கடின உழைப்பையும் சிரத்தையையும் கொண்டு, இந்துமதம் குறித்து ஆதாரப்பூர்வமாக எழுதப்பட்டிருக்கிற “The Hindus: An Alternative History” புத்தகத்தை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு பேராசிரியர் க. பூரணச்சந்திரன் மொழிபெயர்த்துள்ளார். எதிர்வெளியீடு இதை வெளியிட்டுள்ளது.
சமகால உலகில் இந்து மதத்தைப் பற்றி அறிந்துகொள்வதில் ஆர்வமுள்ளவர்கள் இந்நூலைப் படிக்கவும் விவாதிக்கவும் வேண்டும் என்றும், குறிப்பிடத்தக்க கல்வியறிவினால் உருவான படைப்பு இது என்றும், இந்த புத்தகத்தை திறனாய்வு செய்த வரலாற்றாசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.