ஒரு காலத்தில் ஐரோப்பா இருண்ட கண்டமாக இருந்தது. ஐரோப்பியர்கள் நாகரித்தின் நிழலைக்கூட எட்டாமல் இருந்தனர். தற்போது சர்வ வல்லமையும் பெற்றிருக்கும் ஐரோப்பாவும் அமெரிக்காவும் வளர்ச்சி பெறுவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே ஈராக்கும் சிரியாவும் நாகரிகமடைந்துவிட்டன. ஈராக்கின் தலைநகரான பாக்தாதும், சிரியாவின் தலைநகரான டமாஸ்கசும் பல்லாண்டுகாலம் உலகிற்கே ஒளி விளக்காய் திகழ்ந்த நகரங்களாகும். இவை பின்னாளில் வீழ்ச்சியுற்றன. தற்காலத்தில் இவற்றின் நிலைமை பரிதாபகரமானது.
ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் நடக்கும் உள்நாட்டு யுத்தங்களின் விளைவாக, மனிதன் வாழ்வதற்கே தகுதியற்ற நிலமாக இவை மாறியுள்ளன. மக்கள் நிம்மதி இழந்து தமது வாழ்விடங்களை விட்டே விரண்டோடிக் கொண்டிருக்கின்றனர். இவ்விரு தேசங்களின் வீதியெங்கும் குண்டு மழை பொழிகின்றது. நாலா புறமும் மரண ஓலம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அகதிகளின் எண்ணிக்கை சரசரவென உயர்ந்துகொண்டுள்ளது. மத, இன பாரபட்சமின்றி எல்லாத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், உலகின் கவனம் ஈராக், சிரியாவின் பக்கம் திரும்பியுள்ளது.
இன்றைய சூழலை புரிந்துகொள்வதற்கு முன்பு, நாம் கடந்தகால வரலாற்றை மீள்பார்வையிட வேண்டியது அவசியமாகிறது. முதலாவதாக, ஈராக்கின் கடந்தகால பக்கங்களை சற்று பார்வையிடுவோம்.
டைக்ரீஸ், யூப்ரடீஸ் நதிகளுக்கு இடைப்பட்ட தேசம் ‘மெசபட்டோமியா’ என கிரேக்கர்களால் அழைக்கப்பட்டது. அதில் இன்றைய ஈராக் பகுதியும் அடங்கும். கிரேக்கர்களின் வருகைக்கு முன், அதாவது கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பே பண்டைய ஈராக் நிலப்பரப்பில் ‘சுமேரியர்’ என அழைக்கப்படும் இனத்தினர் அரசமைத்திருந்தனர். அவர்களது தலைநகராக ‘ஊர்’ எனும் நகரம் இருந்தது. இறைத் தூதர் இப்ராஹீம் (அலை)-இன் பிறப்பிடமாக இப்பகுதி கருதப்படுகிறது.
பின்னாளில், ‘சார்கோன்’ என்ற மன்னர் படையெடுத்து சுமேரிய பேரரசை வீழ்த்தி அக்காட் பேரரசை நிறுவினார். இது 3 நூற்றாண்டுகள் நீடித்தது. பல மன்னர்களது கட்டுப்பாட்டில் இருந்த பண்டைய ஈராக் பிரதேசம், கி.மு.1500 வாக்கில் ‘பாபிலோன்’ பேரரசின் கீழ் வந்தது. அக்காட் பேரரசு, அசிரியர்கள் மற்றும் பாபிலோனியர்கள் என பண்டைய ஈராக்கை ஆட்சி செய்த பலர் நாகரிக வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றினர்.
கி.மு.331இல் இருந்து கி.பி.636 வரை பாரசீக சாம்ராஜ்ஜியத்தின் கட்டுக்குள் இருந்த ஈராக்கை கலிஃபா உமர் (ரலி) கைப்பற்றினார். அறிவு, நாகரிக வளர்ச்சிக்கு கலிஃபா உமரும் (ரலி) அவருக்குப் பின் வந்த ஆட்சியாளர்களும் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. 1258இல் ஹுலாஹு கான் தலைமையில் படையெடுத்து வந்த மங்கோலியர்கள், பண்டைய ஈராக்கில் அப்பாசிய மன்னர்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தனர். வரலாற்று பாரம்பரியமிக்க பாக்தாத் நகரம் சூறையாடப்பட்டது. பின்னாளில், கொடுங்கோலர்களாக இருந்த மங்கோலியர்களே இஸ்லாமிய நெறியைத் தழுவினர் என்பது வியக்க வைக்கும் வரலாறு. இப்படி ஈராக்கின் சரித்திர பக்கங்கள் நீண்டுகொண்டே செல்கிறது.
முதலாம் உலகப் போருக்கு பிற்பாடு, ஃபிரான்சும் பிரிட்டனும் இரகசியமாக செய்துகொண்ட Sykes – Picot ஒப்பந்தத்தின் விளைவாக உதுமானிய மன்னர்களின் பிடியிலிருந்த ஈராக்கும் ஏனைய அரபு நிலங்களும் துண்டாடப்பட்டன. பிரட்டனின் கட்டுப்பாட்டில் ஈராக் கொண்டுவரப்பட்டது. 1932ஆம் ஆண்டு ஈராக்கிற்கு பிரிட்டிஷார் சுதந்திரம் கொடுத்தனர். பிறகு, பிரிட்டனின் மேற்பார்வையில் ஈராக்கில் தொடர்ந்த கைப்பாவை முடியாட்சிக்கு 1958இல் ஏற்பட்ட புரட்சியின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதன் பின் வந்த ஆட்சியாளர்களும் நிலையான ஆட்சியைக் கொடுக்கவில்லை. ஏகப்பட்ட ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டன. ஸ்திரத்தன்மை கொஞ்சமும் இல்லாது போனது.
அரபு தேசியவாதம்; சோசலிசம்; மதச்சார்பின்மை ஆகியவற்றை கொள்கைகளாகக் கொண்டு உருவாக்கப்பட்ட “பாத்” (மீள் உயிர்ப்பு) கட்சி ஈராக்கில் பரவத் தொடங்கியது. திடீரென அவர்கள் 1963இல் இராணுவ சதிப் புரட்சியின் மூலம் ஆட்சிக்கு வந்தனர். அதன் பின்னரும் ஈராக்கில் சச்சரவுகள் நீடிக்கவே, 1968இல் மீண்டுமொரு சதிப் புரட்சி செய்து பாத் கட்சியினர் ஆளுகைக்குள் ஈராக்கை கொண்டுவந்தனர்.
அப்போது அமைந்த அஹ்மது ஹசன் அல் பக்ர் அரசின் துணை அதிபராக சதாம் ஹுசைன் இருந்தார். தனியாரின் பிடியில் இருந்த, எண்ணெய் நிறுவனங்களையும், வங்கிகளையும், பல தொழிற்சாலைகளையும் நாட்டுடைமை ஆக்கினார். இது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட வழிவகுத்தது. சதாம் 1979இல் ஈராக்கின் அதிபரானார். அது சமயம், உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்தமை ஈராக்கின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியது. ஈராக்கை சதாம் ஆட்சி செய்தபோது ஏராளமான மக்கள் நலத்திட்டங்களையும் ஆக்கப்பூர்வமான மாற்றங்களையும் முன்னெடுத்தார்.
ஒருபக்கம் சதாம் ஹுசைன் நல்ல முறையில் ஆட்சி புரிந்தாலும், மறுபக்கம் அவர் ஷிஆ முஸ்லிம்களையும், குர்து இன மக்களையும் ஒடுக்கினார் எனும் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஷிஆ தலைவர்களையும் பாத் கட்சியின் முக்கிய உறுப்பினர்களையும்கூட அவர் கைது செய்தார். அது நாட்டிற்குள் அவருக்கு எதிரான கண்டக் குரல் எழ காரணமாயிற்று. அதே வேளை, அங்கு ஷிஆ கலகக்காரர்களும் உருவாயினர்.
ஈராக், ஈரான் இடையே பாயும் ‘சத் உல் அரப்’ என்ற நீர்வழிப்பாதை தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஏற்கனவே சதாமின் மீது அதிருப்தியில் இருந்தது ஈரான். நீர்வழிப்பாதை சம்பந்தமான இப்பிரச்னை இருவர் மத்தியிலும் பூதாகரமாக வெடித்தது. 1980இல் சதாம் ஈரானின் மீது இராணுவத் தாக்குதலை தொடுத்தார். எட்டு ஆண்டுகள் நீடித்த இந்தப் போருக்கு, அமெரிக்கா ஆயுத உதவி செய்தது. மத்தியக் கிழக்கில் சில நாடுகளும் உதவிகள் செய்துவந்தன. இரு நாடுகளும் கடுமையான பாதிப்புக்குள்ளாயின. பிறகு, 1988இல் போர் முடிவடைந்தது.
இந்தப் போர் முடிவுக்கு வந்ததோடு சதாம் அடங்கிப் போகவில்லை. வரலாற்று ரீதியில் கத்தார் நாடு ஈராக்கிற்கு சொந்தம் எனக் கூறி, 1990இல் கத்தாருக்கு படைகளை அனுப்பினார். உண்மையில், அமெரிக்கா ஈராக்கிற்கு உதவி வந்தது. சதாம் தங்களின் ஆள் என்று சொல்லிக் கொண்டது. சதாம் அந்த நம்பிக்கையில்தான் குவைத் மீது படையெடுத்தார். ஆனால், அது அமெரிக்கா வைத்த பொறி என்பது சதாமுக்கு தெரியவில்லை!
அந்த யுத்தத்தில் அமெரிக்காவே கத்தாருக்கு ஆதரவாக மாறியது. அமெரிக்காவும் பன்னாட்டு படைகளும் இணைந்து 1991 ஜனவரியில் ஈராக் மீது போர் தொடுத்தன. போரின் இறுதியில் சதாம் தோற்கடிக்கப்பட்டார். ஈராக் மீது பொருளாதாரத் தடை போடப்பட்டது. நாட்டின் பொருளாதாரம் நலிவுற்றது. செல்வ செழிப்புடன் இருந்த ஈராக் நொடிந்துப் போனது.
இப்படி பலவீனமான ஈராக்கின் மீது சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது 2003இல் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷின் படைகளும் பன்னாட்டுப் படைகளும் போர் தொடுத்தன. ஈராக்கில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அதிபர் சதாமும் தூக்கிலிடப்பட்டார். சதாம் ஆட்சியாளராக எண்ணற்ற அட்டுழியங்களைச் செய்தார். அவற்றில் பெரும்பாலானவை கத்தார் மீதான போருக்கு முன்பு செய்தவையே. இறுதியில், அவர் தண்டிக்கப்பட்டார். ஆனால், சதாம் செய்த கொடுமைகளுக்குத் துணை நின்ற பிரிட்டனோ, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளோ இன்றுவரை தண்டிக்கப்படவில்லை!
சதாம் கொல்லப்பட்ட பின், அந்நிய ஆக்கிரமிப்பின் கீழ் ஈராக் வந்தது. பலவகையில் பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். அமெரிக்கா ஈராக்கை தன் பிடிக்குள் வைத்துக் கொண்டு மக்களுக்கு விரோதமாக நடந்துகொண்டது. ஒருகட்டத்தில் மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். பின்னர், அமெரிக்காவின் அரசியல் மற்றும் வணிக இலாபங்களுக்குச் சாதகமான ஒரு ஷிஆ அரசாங்கம் அங்கே ஏற்படுத்தப்பட்டது. பெரும்பான்மை ஷிஆ முஸ்லிம்கள் ஈராக்கை ஆளத் தொடங்கினர். ஏனைய சிறுபான்மையினருடன் அவர்கள் முறையாக அதிகாரத்தை பகிர்ந்தளிக்கவில்லை.
கடந்த 2006இல் இருந்து செப்டம்பர் 2014 வரை ஈராக்கின் பிரதமராக இருந்த ஷிஆ ஆட்சியாளர் நூரி அல் மாலிகியும், தற்போதைய பிரதமர் ஹைதர் அல் அபதியும் ஈராக்கின் சன்னி முஸ்லிம்கள், குர்து இன மக்களுக்கெதிராக கட்டவிழ்த்துவிடும் கொடுங்கோன்மையும், அடக்குமுறையும் அரசை எதிர்த்து மக்கள் போராடுவதற்கு வழிவகுத்துள்ளன.
இந்த வரலாற்றுப் பின்னணியில் இருந்தே நாம் ஈராக்கை அணுகவேண்டும். அப்போதுதான், ஈராக் பிரச்னையின் உக்கிரமும், மக்கள் அலைக்கழிக்கப் படுவதற்கு பின்னுள்ள அரசியலும், ஐ.எஸ் தீவிரவாதிகள் நாசமாக்கும் பாரம்பரியச் சின்னங்களின் மகத்துவமும் நமக்குத் தெரியவரும்.
2.
பண்டைய ஈராக்கோடு சிரியா இணைந்தே இருந்தது. மெசபட்டோமியா என்பது இன்றைய ஈராக் நாட்டோடு சிரியா, துருக்கி, ஈரான் ஆகிய நாடுகளின் பகுதிகளை உள்ளடக்கிய நிலப்பரப்பாகும். உலகம் தோன்றியதிலிருந்து இந்தப் பகுதியில் மக்கள் வாழ்ந்து வந்ததற்கான சான்றுகள் உள்ளன. பாபிலோனியர்களும், கிரேக்கர்களும், பாரசீகர்களும் இந்நிலப்பரப்பை ஆட்சி புரிந்திருக்கின்றனர். பண்டைய நாகரிகத்தின் எச்சங்களையும், அவர்கள் வாழ்ந்து மறைந்ததற்கான சுவடுகளையும் இன்றும் நாம் அங்கே பார்க்க முடியும்.
கி.பி.1500இல் எகிப்தின் வசமிருந்த பண்டைய சிரியா, பல்வேறு ஆட்சியாளர்களின் பிடியில் இருந்துவந்திருக்கிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான் இஸ்லாமிய ஆட்சியாளர்களின் கீழ் சிரியா கொண்டுவரப்பட்டது. அரபு இஸ்லாமிய வரலாற்றில் சிரியாவை ‘ஷாம்’என்றழைத்தார்கள். இந்த ஷாம் எனப்படுவது சிரியாவை மட்டும் குறிக்கும் சொல் அல்ல. மாறாக, சிரியாவையும் சேர்த்து இன்றைய ஈராக்,ஜோர்டான், பாலஸ்தீன், இஸ்ரேல், லெபனான் ஆகிய நாடுகளையும் உள்ளடக்கிய ஒரு பெருந்தேசமாகும்.
‘குலஃபா ஏ ராஷிதீன்’ என்றழைக்கப்படும் இஸ்லாமிய கலீஃபாக்களின் ஆட்சி முடிவடைந்த பிறகு, உமையா எனும் முஸ்லிம் மன்னர்களின் ஆட்சி அங்கே தொடர்ந்தது. டமாஸ்கஸ்தான் அவர்களது மொத்த சாம்ராஜ்ஜியத்தின் தலைநகராக இருந்தது. உமையாக்கள் சிரியாவை நான்கு மாகாணமாக பிரித்து வைத்திருந்தனர். அவை டமாஸ்கஸ், பாலஸ்தீன், ஹோம்ஸ் மற்றும் ஜோர்டான் ஆகியவையாகும். மிகப் பரந்த அளவில் அன்றைய சிரியா வியாபித்திருந்தது.
அப்பாசிய மன்னர்களும் எகிப்தின் மம்லூக் சுல்தானும் இந்நாட்டை ஆட்சி புரிந்துள்ளனர். இங்கு குறிப்பிடத்தக்கதொரு அம்சம், முஸ்லிம் மன்னர்கள் அந்த பெரும் நிலப்பரப்பை ஆட்சி செய்த காலங்கள் உண்மையிலேயே பொற்காலம்தான். விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சிக்கும்,நாகரிக வளர்ச்சிக்கும் அவர்கள் ஆற்றிய பங்களிப்புகள் மெச்சத்தக்கவை. இறுதியாக, முதலாம் உலகப் போருக்கு பின் 1916இல் Sykes – Picotஒப்பந்தத்தின் மூலம் அரபு நிலங்கள் துண்டாடப்படும் வரை சிரியாவும் துருக்கி உதுமானிய மன்னர்களின் வசம்தான் இருந்தது. அந்த ஒப்பந்தம் போடப்பட்ட பிற்பாடு, ஃபிரான்சின் கட்டுக்குள் சிரியா கொண்டுவரப்பட்டது.
ஃபிரான்சின் ஆக்கிரப்பை எதிர்த்து சிரியா நாட்டு மக்கள் முனைப்புடன் போராடினார்கள். இருப்பினும், சிரியாவுக்கு சுதந்திரம் வழங்குவதற்கு ஃபிரான்ஸ் பல்லாண்டு காலம் இழுத்தடித்தது. கடைசியாக, 1944 ஜனவரி 1ஆம் நாள் சிரியாவை சுதந்திரக் குடியரசாக ஃபிரான்ஸ் ஏற்றுக்கொண்டது. இருப்பினும், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகே தனது இராணுவத்தை விளக்கிக் கொண்டது. 1943இல் இருந்து 1949 வரை சுக்ரி அல் குவாட்லி என்பவர்தான் சிரியாவை ஆட்சி செய்தார். அதனைத் தொடர்ந்து புரட்சிகள் வெடித்து, ஆட்சி மாற்றங்கள் அடிக்கடி நிகழ்ந்தன.
1949இல் இருந்து தொடர்ச்சியாக நிலையற்ற ஆட்சியே சிரியாவில் இருந்து வந்தது. 1971இல் சிரியாவும் எகிப்தும் சேர்ந்து ‘ஐக்கிய அரபு குடியரசு’ என்ற இணைப்பை ஏற்படுத்தின. ஆனால், அதுவும் பயனளிக்கவில்லை. அதே ஆண்டில், சிரியாவின் பாத் கட்சியிலிருந்த ஹாபிஸ் அல் அஸ்ஸாத் அதிபரானார். 1963இல் தொடங்கி பாத் கட்சியின் ஆட்சிதான் சிரியாவில் நடக்கிறது. இருப்பினும், நிலையான ஆட்சி என்றால் அது ஹாபிஸ் அல் அஸ்ஸாத் அதிபரான பிறகுதான். அவர் ஆட்சிக்கு வந்தக் கையோடு, சட்டமன்றங்களைக் கலைத்து, அரசியல் சட்ட திட்டத்தையும் அகற்றி எதேச்சதிகார ஆட்சி புரிந்தார்.
ஹாபிஸ் அல் அஸ்ஸாதின் சர்வாதிகார ஆட்சி சுமார் 30 ஆண்டுகள் நீடித்தது. இறுதி வரை அவர் எதிர்க் கட்சிகளுக்கு சட்ட அங்கிகாரம் வழங்கவே இல்லை. ‘ஒருக்காலும் எதிர்க்கட்சிகளுக்கு சட்ட அங்கிகாரம் கொடுக்கப்பட மாட்டாது’ என்றே பகிரங்கமாக சொல்லி வந்தார். ஹாபிஸ் அல் அஸ்ஸாத் 2000ஆம் ஆண்டு காலமானார். இதன் பிற்பாடு, ஹாபிஸின் மகன் பஷ்ஷார் அல் அஸ்ஸாத் அதிபரானார். இன்று வரை இவர்தான் சிரியாவின் அதிபராய் உள்ளார்.
ஏறத்தாழ இரண்டு கோடி மக்கள் தொகை கொண்ட சிரியாவில், 90 விழுக்காடு முஸ்லிம்களும் 10 விழுக்காடு கிறிஸ்தவர்களும் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் 15 விழுக்காட்டிற்கும் குறைவாகவே அலவி ஷிஆ முஸ்லிம் பிரிவினர் இருக்கின்றனர். பஷ்ஷார் அல் அஸ்ஸாத் அலவி ஷிஆ பிரிவைச் சார்ந்தவர். இராணுவத்திலும் இன்னபிற அரசின் முக்கியப் பொறுப்புகளிலும் அலவி பிரிவினருக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்து வந்தார். ஏனைய இனத்தினரை இவை அதிருப்தியடையச் செய்தன.
மத்தியக் கிழக்கில் 2011 தொடக்கத்தில் ஏற்பட்ட ‘அரபு வசந்தம்’ எனும் புரட்சி சிரியாவிலும் படர்ந்தது. சிரியா நாட்டு மக்கள் கொதித்தழுந்தார்கள். இந்த வேளையில்தான், பஷ்ஷார் அல் அஸ்ஸாதிற்கு எதிராக அவர்களது போராட்டம் ஆரம்பமானது. உள்நாட்டுப் போர் வெடித்தது. நிறைய ஆயுதக் குழுக்களும் அரசிற்கு எதிராக பூற்றீசல்களைப் போல் முளைத்தன. சிரியா தேசமே ஸ்தம்பித்தது. இதற்கிடையிலேயே அஸ்ஸாத் அரசு லெபனானுடன் யுத்தம் செய்துகொண்டிருந்தது. பிறகு, ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் தீர்மானத்திற்கு இணங்க தனது படைகளை லெபனானில் இருந்து திரும்பப் பெற்றது.
இன்றுவரை, சிரியாவில் அரசிற்கு எதிரான போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை! தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. இவற்றை இரும்புக் கரம் கொண்டு அடக்குவதில் அஸ்ஸாத் முனைப்பாகச் செயல்படுகிறார்.
3.
ஒரு நாட்டில் வாழக்கூடிய அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து ஆட்சி புரியும்போது, அங்கே அரசிற்கு எதிரான உள்நாட்டு கலகங்களும் போர்களும் எழுவதற்கு வாய்ப்பில்லை. ஈராக், சிரியா அரசாங்கங்கள் இந்த அம்சத்தில் முறையாக நடந்துகொள்ளாமல் இருந்தன. இவ்விரு தேசங்களிலும் அரசிற்கு எதிரான பல ஆயுதக் குழுக்கள் வலுவாக காலூன்றியமைக்கு இதுவே காரணம்.
அமெரிக்காவின் நலன் சார்ந்து ஈராக் ஷியா அரசு இயங்கி வருகிறது. பெரும்பான்மை மக்களான ஷியா முஸ்லிம்களை தன்வயப்படுத்துவதற்காக சன்னிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக செய்துவருகிறது. இந்த அரசாங்கத்தோடு இணங்கிச் செல்ல முன்வந்த வடக்கு ஈராக்கின் சன்னி தலைவர்களையும்கூட ஈராக் அரசு புறக்கணித்தது.
சிரியாவும் இதை போலவே அலவி ஷியா பிரிவினருக்கே முக்கியத்துவம் கொடுத்து, ஏனைய தரப்பினரை உதாசீனம் செய்வதால்தான் அங்கும் பிரச்னை நீடிக்கிறது. இங்கு ஒன்றை குறிப்பிட்டாக வேண்டும், இவ்விரு தேசங்களிலும் நிலவும் பிரச்னைகளுக்கு ஷியா-சன்னி மோதல் மட்டும்தான் காரணம் என நாம் எளிமையாக எண்ணிவிடக் கூடாது. அது வெறும் மேம்போக்கான பார்வை. ஆகவே, உள்நாட்டுப் போர் ஏன் நடக்கிறது? இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்? யார் பயன் அடைகிறார்கள்? என்றெல்லாம் பார்க்கவேண்டியிருக்கிறது.
ஈராக்கில் பெரும்பான்மை ஷியா அரசுக்கு உதவும் இதே அமெரிக்காதான் சிரியாவின் ஷியா அரசாங்கத்திற்கு எதிர்நிலையில் நிற்கிறது. ஆக, இங்கு ஷியா – சன்னி என்பவற்றைத் தாண்டி, இந்த சிக்கல்களுக்கெல்லாம் பின்புலமாக இருந்து, அமெரிக்காவும் சில வளர்ந்த நாடுகளும் குளிர்காய்கின்றன. ஒரு நாட்டின் மீது படையெடுத்து அல்லது ஆக்கிரமித்துத் தான் அந்நாட்டை தனக்குச் சாதகமாக பயன்படுத்த முடியும் என்பதில்லை. நேரடியாக நுழையாவிட்டாலும் தனது ஆதிக்கத்திற்கு அடிபணிந்த பொம்மை அரசுகளின் ஊடாகவும் தான் விரும்பியவற்றைச் சாதிக்க முடியும். அமெரிக்கா மற்றும் சில மேலை நாடுகளின் பொருளாதார நலன் சார்ந்தே அங்கு அரசியல் நகர்வுகள் நடக்கின்றன.
ஈராக் மற்றும் சிரியாவின் பிரச்னை உக்கிரமடைந்ததற்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு முக்கியக் காரணமாகும். அந்த அமைப்பிற்குப் பின்னால் இருந்து இயக்குவது அமெரிக்காவின் மத்திய உளவுத்துறையும் இஸ்ரேலிய உளவுத்துறையான மொசாதும்தான் என அமெரிக்க தேசிய பாதுகாப்புத் துறையின் (NSA) முன்னாள் அதிகாரி எட்வார்ட் ஸ்னோடன் கூறியதை நாம் மறந்துவிடக் கூடாது.
ஏராளமான ஆயுதக்குழுக்கள் ஈராக்கிலும் சிரியாவிலும் இயங்கி வருகின்றன. அவற்றில் ஐ.எஸ். குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூன் 2015 வரை அதன் கட்டுப்பாட்டில் 3 இலட்சம் சதுர கி.மீ இருந்தது என்று அல் ஜசீரா குறிப்பிடுகிறது. ஐ.எஸ்-இன் ஆயுத பலமும், அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள பெரும் நிலப்பரப்பும், அவர்கள் நிகழ்த்தும் கொடுஞ்செயலும் அனைவரின் கவனத்தையும் அவர்களின் பக்கம் திருப்பியுள்ளது.
ஐ.எஸ். படை யாருடைய கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது எனும் கேள்விக்கு விடைகான முற்படும்போது, பல கோணங்களில் அவர்களைப் பற்றிய கருத்துகள் சொல்லப்படுவதை பார்க்க முடியும். அவர்களின் பின்புலம் குறித்து பார்ப்பதற்கு முன், அவர்களின் தோற்றம் பற்றி பார்வையிட வேண்டியது அவசியம்.
1999ஆம் ஆண்டு ஈராக்கில் சன்னி முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இனக்குழுக்களை உள்ளடக்கி ஜமாஅத் உல் தவ்ஹீத் வல்ஜிஹாத் என்ற பெயரில் போராட்ட இயக்கமாக செயல்பட்டு வந்தது. அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்தபோது அவற்றை எதிர்த்து இவ்வியக்கம் போராடியது. அமெரிக்கா வெளியேறிய பின்னர் பெரும்பான்மை ஷியா அரசை இந்த இயக்கத்தினர் எதிர்தார்கள்.
ஜமாஅத் உல் தவ்ஹீத் வல்ஜிஹாத் இயக்கத்தை ஜோர்டானை சேர்ந்த அபூமுஸப் அல் ஷர்காவி என்பவர்தான் தலைமை தாங்கி வந்தார். அல் காயிதாவின் ஒசாமா பின் லேடனுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டதன் விளைவாக, இவரது இயக்கம், தன்சிம் காயிதே அல்ஜிஹாத் பி பிலாத் அல்ரபிதயின் (இரு ஆறுகள் பாயும் நாட்டின் அறப்போர் இயக்கம்) என்று பெயர் மாற்றம் செய்தது. இதை ஈராக்கின் அல் காயிதே என்று அழைக்கப்பட்டது. அல் காயிதா என்றால் அடிப்படைவாதம் என்று பொருள். இது பல அவதாரங்களை எடுத்திருந்த நிலையில், 2006 ஜூன் மாதம், அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் ஷர்காவி கொல்லப்பட்டார். அதே ஆண்டு அக்டோபர் மாதம் தவ்லத்துல் இஸ்லாமியா (இஸ்லாமிய அரசு) என்கிற பெயரில் இந்த இயக்கம் செயல்படத் தொடங்கியது. 2010 முதல் அபு பக்கர் அல் பாக்தாதி இவ்வியக்கத்தின் தலைவராய் உள்ளார். ஈராக்கில் யுத்தம் செய்வதற்கு அவர்களுக்கு வாய்ப்பில்லாமல் இருந்தது.
சிரியாவில் 2011இல் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம் இவர்களுக்கு மீண்டுமொரு போர் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. இவர்கள் சிரியா சென்று போராடத் தொடங்கினர். 2012 முதல் ஜபத் நுஸ்ரா என்ற பெயரில் அந்த ஆயுதப் படையினர் முறையாக செயல்படத் தொடங்கினர். நுஸ்ரா சக்திமிக்க படையாக உருவாகியிருந்த சமயம், 2013 ஏப்ரல் மாதம் , ஈராக்கில் அபு பக்கர் அல் பாக்தாதியின் தீவிரவாதக் குழுவை சிரியாவிலும் கிளை பரப்பினார். ISIL (Islamic state of Iraq and Levant) என்ற பெயரில் அது இயங்கியது. Levant எனும் ஃபிரஞ்ச் சொல் ஷாம் தேசத்தை குறிக்கும். பின்னாளில் தான் இந்த இயக்கம் ISIS (Islamic state of Iraq and Syria) என்று பெயர் மாற்றம் பெற்றது. ஜபத் நுஸ்ராவுடன் இதை இணைக்கவேண்டும் என்பது பாக்தாதியின் விருப்பம். அதற்காக அவர் முயற்சி செய்தார்.
ஆனால், ஜபத் நுஸ்ராவின் தலைவரான அபு முஹம்மத் அல் ஜீலானி அதை மறுத்துவிட்டார். இதன் விளைவாக, பஷ்ஷார் அல் அஸ்ஸாதின் எதிர்பாளர்களுக்குள்ளேயே மோதல் வெடித்தது. பயங்கரவாதக் குழுக்கள் தாங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர். அல் காயிதா இயக்கத்தோடும் ISIS கொண்டிருந்த உறவும் துண்டிக்கப்பட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது. தீவிரவாதக் குழுக்கள் தங்களுக்குள் மோதிக்கொள்வதும் தொடர்ச்சியாக நடந்துவருகிறது.
ஒருகட்டத்தில், ISIS மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்தது. தன்னுடைய பலத்தை பன்மடங்கு அதிகரித்தது. பிறகு, ஈராக்கின் பகுதிகளான அல் அன்பார்,நினேவா, கிர்குக், சலாதீன் போன்றவற்றை ஈராக் இராணுவத்திடமிருந்து கைப்பற்றியது. அதே போல், சிரியாவின் பகுதிகளான அர் ரஹா, இத்லிப், தேர் எ ஷர், அலப்போ முதலியவற்றை தனது பிடிக்குள் கொண்டுவந்தது. கடந்த 2014 ஜூன் இஸ்லாமிய தேசம் உருவாகிவிட்டதாக ISIS பிரகடனப்படுத்திய பிறகு IS (Islamic state) என்கிற பெயரில் இயங்குகிறது.
ஐ.எஸ். தோற்றம் இப்படித்தான் நிகழ்ந்தது. இந்த இயக்கத்தை பின்புலமாக இருந்து இயக்குவது யார்? என்பதற்கு நிறைய கருத்துகள் சொல்லபடுகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க கணிப்புகளை மட்டும் நாம் பார்ப்போம்.
*சிரியா அரசிற்கு ஆதரவாக ஈரான், ரஷ்யா, ஃபிரான்ஸ் போன்ற நாடுகள் இருப்பதை போல், அரசிற்கு எதிராக செயல்படும் இயக்கங்களின் பின்னணியில் அமெரிக்காவின் மத்திய உளவுத்துறையும் இஸ்ரேலிய உளவுத்துறையான மொசாதும் இருக்கிறது.
*ஈரான் மற்றும் சிரியாவின் ஷியா அரசுகள் வலிமை பெறுவதைத் தடுப்பதற்காக சௌதி அரேபியாதான் அமெரிக்காவின் துணைகொண்டு ஐ.எஸ்.-இற்கு பின்னால் இருந்து இயக்குகிறது. முஸ்லிம் உலகை ஷிஆ பிரிவு ஆதிக்கம் செலுத்த வேண்டுமா? அல்லது சன்னி பிரிவினர் ஆதிக்கம் செலுத்த வேண்டுமா? எனும் போட்டி அங்கே நிலவுகிறது. இதை சௌதி-ஈரான் பனிப்போர் என்பதாக ஒரு பார்வை இருக்கிறது.
*சதாம் ஹுசைனின் பாத் கட்சியிலும் இராணுவத்திலும் உயர் பொறுப்பில் இருந்தவர்கள் பயங்கரவாத ஆயுதக் குழுவுடன் இணைந்து, அதிகாரத்தை பிடிப்பதற்கு கணக்குப் போடுகின்றனர்.
*சிரியாவின் எல்லா போராட்ட இயக்கங்களையும் ஆயுததாரிகளையும் மட்டுப்படுத்தவே பஷ்ஷார் அரசு ஐ.எஸ். இயக்கத்தை தோற்றுவித்திருக்கிறது.
இவ்வாறாக, பல கோணங்களில் ஐ.எஸ். பற்றி கருத்துகள் இருக்கின்றன. ஐ.எஸ்.-இன் மேல்மட்ட உறுப்பினர்கள் இரண்டாம், மூன்றாம் தர உறுப்பினர்களுடன் எந்த உறவுகளையும் கொண்டிருக்கவில்லை. மேல்மட்டத்திலிருந்து வரும் ஆணைகளை கீழ்மட்ட உறுப்பினர்கள் செயல்படுத்துகின்றனர். துல்லியமாக நாம் அவர்களைப் பற்றிய ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாமல் இருப்பதற்கு இதுவே காரணம்.
நாம் ஒரு விஷயத்தை மட்டும் திட்டவட்டமாக சொல்ல முடியும். ஐ.எஸ். பயங்கரவாதிகளின் குரூர செயல்பாடுகள் ஒட்டுமொத்த மனித இனத்திற்கும் எதிரானது. குறிப்பாக உலகில் வாழும் எல்லா முஸ்லிம்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஈராக், சிரியா நாட்டு மக்களின் இருப்பே கேள்விக்குறியாகியுள்ளது. இதில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலனுக்குத் தக்க சரியாக அரசியல் நகர்வுகள் அமைந்துள்ளன என்று சொல்லலாம்.
ஆகவேதான், ஐ.எஸ் தீவிரவாதிகளைக் கண்டித்து, நடுநிலை இஸ்லாமிய சிந்தனையாளர்கள் கருத்துரைத்துள்ளனர்.
International Union of Muslim Scholars-இன் தலைவர் டாக்டர் யூசுப் அல் கர்ளாவி சொல்கிறார்: “அரபு நாட்டு ஆட்சியாளர்களின் மோசமான ஆட்சி புரிதலினால் விரக்தியடைந்த முஸ்லிம் இளைஞர்கள் வன்முறைக் குழுக்களில் இணைந்து கொள்கின்றனர். ஆனால், வன்முறைக் குழுக்கள் தமது ஆயுத பலத்தால் நிலைமைகளை மிக மோசமாக மாற்றிவிடுகின்றனர். இவர்கள் அரபுலக பிரச்னைகளுக்கு உணர்ச்சியால் தீர்வு காண விரும்புகின்றனர். தமது இலக்கை அடைவதற்கு இஸ்லாமிய சாயம் பூசப்பட்ட சில சுலோகங்களை ஆதாரம் காட்டுகிறார்கள்”.
அதே போல், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசியர் தாரிக் ரமழான் ஐ.எஸ். குறித்து கருத்துரைக்கும்போது, “ஆட்சியாளர்கள் மக்களால் தெரிவு செய்யப்படவேண்டும் என்பது இஸ்லாத்தின் பிரதான அம்சம். ஐ.எஸ். இன் போலி கிலாஃபத் முஸ்லிம் உம்மாவிற்கான அரசியல் கட்டமைப்புமல்ல. அதன் தலைவர் மக்களால் தெரிவு செய்யப்பட்டவருமல்ல” என்கிறார்.
ஈராக்கிலும் சிரியாவிலும் வரலாற்று பாரம்பரியம் மிக்க கலாச்சார சின்னங்களையெல்லாம் ஐ.எஸ். நாசமாக்கியது. குலஃபா ஏ ராஷிதீன் என்றழைக்கப்படும் இஸ்லாமிய ஆட்சியாளர்கள்கூட இதுபோன்ற நாசவேலைகளை செய்தது கிடையாது. இஸ்லாம் இந்நிரப்பரப்பை தன் கட்டுக்குள் வைத்திருந்தபோது இவை பாதுகாக்கப்பட்டன. ஆனால், ஐ.எஸ். ஈராக் மொசுல் மியூசியத்தில் 2500 ஆண்டுகள் பழமையான தொல்பொருட்கள் யாவற்றையும் அடித்து நொறுக்கியது. மேலும், சிரியாவின் மியூசியங்களில் தொல்பொருட்களை திரு, அதை பிரிட்டனுக்கு கள்ளத்தனமாக விற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல், சுமார் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிருஸ்துவ தேவாலயத்தை ஐ.எஸ். தீயிட்டுக் கொளுத்தினர். இதுபோல் இஸ்லாத்தின் விழுமியங்களுக்கு மாற்றமாக நடந்துகொள்ளும் ஐ.எஸ். அமைப்பிற்கு சர்வதேச அளவில் இஸ்லாமிய அறிஞர்கள் கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர்.
ஈராக்கில் குர்திஸ்தான் பகுதியில்தான் ஐ.எஸ். ஆதிக்கம் செலுத்த சிரமப்படுகிறது. குர்திஸ்தான் ஈராக்கிலேயே தனி அந்தஸ்து பெற்று சுயமாக செயல்படும் நிலப்பரப்பாகும். கோஹீக், அர்பில் போன்ற நகரங்களை இது உள்ளடக்கியிருக்கிறது. பெஷ்மெர்கா படையின் பாதுகாப்பிலும் மேற்கத்திய நாடுகளின் ஒத்துழைப்போடும் குர்து மக்கள் வசித்துவருகின்றனர். குர்து மக்கள் சன்னி முஸ்லிம் பிரிவினர். எண்ணெய் வளம் மிகுந்த பகுதி அது. குர்திஸ்தான் பிராந்திய அரசு (KRG) இந்நிலப்பரப்பை ஆட்சி புரிகிறது.
இந்த அரசு தனக்கான அரசியல் சாசனத்தையும் நாடாளுமன்றம், இராணுவம், தேசிய கோடி முதலியவற்றை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதை தனி நாடாகவே அறிவிக்கக் கோரியும் அங்கே இயக்கங்கள் செயல்பட்டு கொண்டிருகின்றன.
சிரியாவிலும், ஈராக்கிலும் ஐ.எஸ்., ஆரார் அல் ஷாம், நுஸ்ரா, ஜூந்த் அல் அக்சா, நஷ்சபந்தி போன்ற ஆயுதக் குழுக்களைப் போலவே மிதவாத போக்கு கொண்ட ஏராளமான அமைப்புகளும் இயக்கங்களும் செயல்படுகின்றன. அவை அனைத்தும் தனக்கான கோரிக்கைகளையும் இலக்குகளையும் கொண்டு இயங்குகின்றன. எல்லா இயக்கங்களை விடவும் ஐ.எஸ். இயக்கத்தின் செயல்பாடுகளால் பெரும் குழப்பங்களை ஈராக்கையும் சிரியாவையும் சூழ்ந்துள்ளன.