எழுதியவர் : அஷ்ஃபாக் அஹமது, சமூக ஊடகவியலாளர்
சமூகத்திற்கு அச்சுறுத்தலாக கருதப்படும் ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட் போன்ற திட்டங்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் விழிப்புணர்வு பதிவுகள் மணல் விசயத்தில் அவ்வளவு முனைப்பு காட்டியதில்லை. தமிழகத்தில் காலம் காலமாக அரங்கேறி வரும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று தான் இந்த மணல் கொள்ளை. மணல் என்பது தொப்புள்கொடிக்கு சமம் என்று படித்ததுண்டு. தொப்புள்கொடி தாயோடு குழந்தையை இணைக்கு பாலம். அது போல ஆற்றின் தொப்புள் கொடியாக விளங்குவது தான் இந்த மணல். நிலத்தடி நீரை பாதுகாத்து தக்க வைப்பதற்கு மணல் மிக மிக இன்றியமையாத ஒன்று. மணல் ஒன்றும் அற்ப விலைக்கு விற்கப்பட வேண்டிய ஓர் சாதரணப்பொருள் அல்ல, அது ஓர் பொக்கிஷம்..! நம் சந்ததிகளுக்கான விலைமதிப்பற்ற சொத்து..!
விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக எடுக்கப்பட்ட மணலால் நிகழ்ந்த பாதிப்புகள் எண்ணில் அடங்காதவை. 1924 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கொள்ளிடம் ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்ததற்கு மூலக்காரணம் மணற்கொள்ளை. மனிதனுக்கு காய்ச்சல் வருவது போல் பாலத்துக்கும் காய்ச்சல் என வெட்கமே இல்லாமல் ஒரு பெரியவர் இடிந்ததற்கு ஓர் காரணம் சொன்ன ஞாபகம்..!
திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் சமீபத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழப்புகளை ஏற்படுத்தியதும் மணற்கொள்ளை தான். ஆற்றில் மூழ்கியவர்களை விபத்தாக சித்தரித்து வழக்குகளை மூடி எளிதாக கடந்து சென்றது காவல்துறை. ஆழமே இல்லாத ஆற்றில் எப்படி மூழ்கியிருக்க முடியும்? ஆறுகளில் குவாரிகளை அமைத்து மணலை அள்ளுகிறோம் என்ற பெயரில் பல அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டது தான் பல உயிர்கள் மடிய காரணாமாயின. இப்படியாக மனித உயிர்களும் இயற்கை வளங்களும் அப்பட்டமாக சூறையாடப்பட்டு வருகிறது.
மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த சில ஊர்களில் மக்கள் வெகுண்டெழுந்து போராடினார்கள், போராடியும் வருகிறார்கள். ஆனால் அவர்களில் சிலர் மீது அடக்குமுறை பாய்கிறது, பொய்வழக்குகள் சித்தரிக்கப்படுகிறது. இன்னும் கொலை கூட நடக்கிறது. தட்டிக்கேட்கும் அரசு அதிகாரிகளும் காணாமல் போய் விடுகிறார்கள்.
மணல் அள்ளுவதற்கென விதிமுறைகளை வகுத்தது உயர்நீதிமன்றம். மூன்றடி ஆழத்துக்கு மட்டுமே மணல் அள்ள வேண்டும், இயந்திரங்களை பயன்படுத்த கூடாது, இப்படி பல விதிமுறைகள் உண்டு. உலகில் எங்கும் இல்லாத சட்டமாய் ஆற்றிலிருந்து மணலை அள்ளினால் குண்டர் சட்டம் பாயும் என்ற எச்சரிக்கையும் உண்டு. ஆனால் இவை அனைத்தும் மணலோடு மணலாய் புதைக்கப்படுகிறது.
மணற்கொள்ளையை தடுக்க அழுத்தம் கொடுக்கப்பட்டால் சைக்கிளில் மணல் அள்ளுபவர்களை கண்துடைப்பிற்கு கைது செய்வதும், இயந்திரங்களை கொண்டு லாரிகளில் அள்ளுபவர்களை விடுவிப்பதுமாக செயல்படுகிறது சில அரசு இயந்திரங்கள்.
எல்லாம் பணத்தின் செயல்..!
அடுக்கடுக்காக உயிரிழப்புகளையும் விலைமதிப்பற்ற வளங்களையும் சுரண்டி பலத்த பாதிப்புகளை ஏற்படுத்திய மணல் மாஃபியாக்கள் அதிகார வர்க்கத்தின் துணைகொண்டு சுதந்திரமாக வலம் வருகிறார்கள். வெறும் மணலை விற்றே அரசியல் செல்வாக்குடன் பணமுதலையாக உருவெடுத்த கருப்பு வரலாறுகளெல்லாம் தமிழகத்துக்கு மட்டுமே உண்டு. ஆற்று மணலை எடுத்தவர்கள் இப்போது ஏரியில் அள்ளி கடல் மணலையும் எடுக்க தொடங்கி விட்டார்கள் என்பது தான் கூடுதல் வேதனை.
அண்டை மாநிலமான கேரளாவிலும் ஆறுகள் அதிகம். ஆனால் அங்கு மணல் கொள்ளை இல்லை. அவர்களுக்கு தேவையான மணல் தமிழக ஆறுகளில் இருந்து தான் கொள்ளையடிக்கப்பட்டு விற்கப்படுகிறது. இயற்கை வளங்களை பாதுகாப்பதில் தீவிரம் காட்டும் அவர்களுக்கு பணத்தை கண்டு மயங்கி மணலை அனுப்புகிறது மணல் மாபியா கும்பல்.
இன்று பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்க மூலக்காரணமும் மணற்கொள்ளை தான். ஆற்றில் இருந்து மணலைத் திருடினால் நிலத்தடி நீர் குறையத் தொடங்கும். நீலத்தடி நீர் குறைந்தால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும். இதனால் விவசாயமும் செத்து மடியும். இப்படி மணலைத் தொட்டால் அடுக்கடுக்கான பாதிப்புகள் ஏற்படுவது நிச்சயம்.
பல்வேறு இடங்களில் தண்ணீருக்காக வீட்டுக்கு வீடு போர்வெல் போடப்படுகிறது. முன்பெல்லாம் வெறும் 20 அடியில் கிடைத்த தண்ணீர் இப்போது 1000 அடியை எட்டியும் கிடைப்பதில்லை. இது இப்படியே தொடர்ந்தால் வெகு சீக்கிரத்தில் காலி குடங்களுடன் குடிநீருக்காக அல்லல் படும் நிலை உருவாகும்.(இப்பவே உருவாயிடுச்சி)
மணலுக்கு மாற்று வழியை யோசித்து அதை நோக்கி நகரத் தொடங்குவோம். ஆற்றை பாதுகாத்து மணல் கொள்ளையை முடிந்தளவு தடுக்க முயல்வோம். அலட்சியமாக கடந்து செல்லாமல் பொறுப்புணர்வோடு செயல்படுவோம். கோடிகளில் சொத்து சேர்ப்பது முக்கியமல்ல, இயற்கை தந்த வரங்களை பாதுகாக்க தெரிய வேண்டும். மணலும் நீரும் விலைமதிப்பற்ற ஓர் இயற்கை வரம். கொஞ்சமாவது இயற்கை சொத்துக்களை நம் சந்ததிகளுக்கும் விட்டு வைப்போம்
மணல் அழிந்தால் நீரும் அழியும்
என்ன செய்யப் போகிறோம்..?
கட்டுரையாளரை தொடர்பு கொள்ள : 8754665196