வேட்டியை கீழாடையாக அணியும் வழக்கம் நெடுங்காலமாக நம் தமிழகத்தில் இருந்துவருகிறது. கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் முதலிய அண்டை மாநிலங்களிலும் இது புழக்கத்தில் இருக்கும் ஒன்றுதான். எனினும், தமிழ்நாட்டில் வேட்டிக்கு ஒரு தனி இடம் உண்டு. நாம் வேட்டி என்று சொல்வதை வேறு சில பெயரை கொண்டும் பிற மாநில மக்கள் குறிப்பிடுகிறார்கள்.
சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு கிரிக்கட் கிளப் சங்கத்தில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் வேட்டி உடுத்தி சென்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமன் அவர்களும் உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் இருவரும் கிளப்பினுள் அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
தமிழர்களின் பாரம்பரிய ஆடையான வேட்டியை அணிந்து பொது இடங்களுக்கு செல்ல தமிழ் நாட்டில் கூட உரிமை இல்லையா! என்று ஆக்ரோசப்பட்டு சமூக ஆர்வலர்கள் எதிர் குரல் எழுப்பினார்கள். வேட்டிக்கு அனுமதி மறுக்கும் கிளப்புகளையே மூடவேண்டும் என்றும் சிலர் கோரிக்கை விடுத்திருந்தார்கள். அந்தளவிற்கு கடுமையான பிரச்சினையாக மாறியது.
இந்த நிகழ்வுக்கு பல அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். அறிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள் வாயிலாக கண்டனக்குரல் தமிழகமெங்கும் ஒலித்தது. சட்டப்பேரவை வரையிலும் இந்த விவகாரம் கொண்டுசெல்லப்பட்டது.
இதனை தொடர்ந்து இது போன்ற விதிகளை அமல்படுத்தும் தனியார் கிளப்புகள், வேட்டிக்கு தடை விதிக்கும் விதிமுறையை நீக்க நடப்புக் கூட்டத்தொடரில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததை தொடர்ந்து இந்த பிரச்சினை ஓய்ந்திருக்கிறது.
வேட்டிக்கு அனுமதி வழங்கும் கோரிக்கையை தமிழக அரசு சட்டமாகவே இயற்ற முன்வரும் வேளையில் தமிழக முஸ்லிம்களால் பெருவாரியாக அணியப்பட்டுவரும் கைலிக்கும் வேட்டிக்கு இணையான இடத்தை கொடுக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் மனிதநேய மக்கள் கட்சி பதிவு செய்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சட்டத் திருத்தத்தில் வேட்டியை போலவே கைலியும் மதிக்கப்படவேண்டும் என்று முஸ்லிம் தமிழர்கள் ஆவல் கொண்டுள்ளனர்
வேட்டி, கைலி இவை இரண்டிற்கும் மத சாயம் பூச இயலாது. அனைத்து தரப்பு மக்களாலும் இவைகள் அணியப்பட்டு வருகிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
அதே சமயம். தமிழ் முஸ்லிம்கள் வெண்ணிற கைலியை பெருவாரியாக பயன்படுத்துவதையும் நினைவில் வைக்கவேண்டும். நாகூர், காயல்பட்டினம், கூத்தாநல்லூர், கீழக்கரை போன்ற ஊர்களில் வெண்ணிற கைலி கட்டிக்கொண்டு பொது நிகழ்வுகளில் பங்குகொள்ளும் வழக்கம் உள்ளது. அது அங்கு நாகரீகமாகவும் பார்க்கப்படுகிறது.
தற்காலத்தில் ஆடைகளில் சிலவற்றை அநாகரீகம் என்று ஒதுக்கி விடுகிறார்கள். கிரிக்கட் கிளப், சாப்பிங் மால், திரை அரங்குகள் முதலிய இடங்களுக்கு குறிப்பிட்ட சில ஆடை ரகங்கள் தான் அனுமதிக்கப்படுகிறது. நாகரீகம் என்பதற்கு வரையறையாக மேற்கத்திய பாணியையே வைத்துள்ளனர்.
என்ன ரக ஆடை அணிகிறார்கள் என்பதை விட, அணிந்த ஆடை உடலை மறைத்து கண்ணியமாக இருக்கிறதா என்று தான் பார்க்கவேண்டும். அதுதான் சரியான அணுகுமுறையாக இருக்க முடியும்.
தற்காலத்தில் மேற்கத்திய ஆடையை கௌரவமாக கருதும் மனோபாவம் பொது புத்தியில் ஆழமாக பதிந்துவிட்டது. வெள்ளையன் விட்டு சென்ற எச்ச சொச்சத்தை இன்று நாம் தலைமேல் தூக்கி பிடித்துள்ளோம்.
அவரவர் வாழும் தட்ப வெப்ப சூழ்நிலைக்கு இணங்க ஆடை உடுத்துவது வழமை. குளிர் நிறைந்த பகுதி வாழ் மக்கள் உடல் முழுதும் ஆடையால் மூடி, காலில் ஷூ அணிவார்கள். வெப்பம் மிகுந்த பகுதியில் வாழ்பவர்கள் காட்டன் உள்ளிட்ட மென்மையான ஆடை அணிகின்றார்கள்.
மேற் குறிப்பிட்ட கிளப், மால் போன்ற இடமானது உயர்சாதி மக்களும், அதிகார வர்க்கத்தினரும் கோலோச்சும் இடமாக உள்ளமை கவனத்தில் கொள்ளத்தக்கது. அந்த சமூகத்தின் மீது மேற்கத்திய மனோபாவம் வேரூன்றிருக்கிறது. அவர்களிடமிருந்து அடித்தட்டு மக்களை வேறுபடுத்தி காண்பிக்கும் நடவடிக்கையாக உடை கலாச்சாரம் உள்ளது என்றே கொள்ளவேண்டும்..
இன்னொன்றையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். தமிழர்கள் உபயோகித்த தொன்மை வாய்ந்த ஆடைதான் வேட்டி என்பதை மறுப்பதற்கில்லை ஆனால் அது ஒரு நூறு ஆண்டு தான் அனைத்து தரப்பு மக்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கீழ் சாதி மக்கள் என்று ஒரு பிரிவினரை சமூகத்திலிருந்து விளக்கியே வைத்திருந்தார்கள். மேல் சாதி மக்கள் அவர்களை வதை செய்துவந்தனர். எல்லா மட்டங்களிலும் அவர்களை நசுக்கியே வைத்தார்கள். விரும்பிய ஆடை அணியவோ காலனி அணியவோ அவர்களுக்கு உரிமை வழங்கப்படவில்லை.
அன்றைய காலகட்டத்தில் உயர் சாதிக்காரர்கள் மட்டுமே வெள்ளை வேட்டி கட்டிக்கொண்டு தெருவில் நடக்க முடிந்தது. மாற்ற சாரார் அவர்களை வேடிக்கை பார்த்து பெருமூச்சு விட முடியுமே தவிர அவர்களை போல ஆடை அணிய இயலாது.
இதை இங்கு நினைவுப்படுத்த காரணம் என்னவெனில் வேட்டி விவகாரத்தில் கைலி குறித்த பேச்சுக்கள் எழும்போது, வேட்டிக்கு பாரம்பரியம் உண்டு ஆனால் கைலிக்கு அது கிடையாது என்ற வாதம் வைக்கப்படுகிறது ஆகையால் சாதி கொடுமையை குறிப்பிட வேண்டியிருக்கிறது.
வேட்டியை முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை, அதை ஒத்த தோற்றத்தில் உள்ள கைலியையும் (குறிப்பாக வெண்ணிற கைலி) பொது இடங்களில் அனுமதிக்கவேண்டும் என்றே வலியுறுத்துகிறோம்.
ஆடை அணிவது என்பது இந்திய அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமை. சட்டத்திருத்தத்தில் வேட்டியுடன் கைலியையும் இணைக்கவேண்டும் என்று கேட்பதும் ஜனநாயக உரிமை தான். இதில் எள்ளளவும் தவறில்லை.