சில தினங்களுக்கு முன் ஆவணப்படத் திரையிடல் நிகழ்வு ஒன்றுக்குச் சென்றிருந்தேன். இரு ஆவணப்படங்கள் அங்கே திரையிடப்பட்டன. அதில் ஒன்று “She Write” (2005) என்பது. தமிழகத்தில் இயங்கிவரும் நான்கு கவிதாயினிகள் பற்றியது அது. சுகிர்தராணி, மாலதி மைத்ரி, சல்மா, குட்டி ரேவதி ஆகியோர் அதில் இடம்பெற்றிருந்தனர். இந்த ஆணாதிக்கச் சமூக அமைப்பில் ஒரு கவிஞராக இயங்குவதற்கு எப்படியான சவால்களையெல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை அவர்கள் தங்களின் சொந்த அனுபவங்களின் வழியே விளக்கினர். சொந்தச் சமூகமே தங்களுக்கு ஏற்படுத்திவரும் நெருக்கடிகளை அவர்கள் எடுத்துரைத்தனர்.
ஒரு சாமானிய பார்வையாளனாக அந்தப் படத்தைப் பார்க்கும்போது, அது எடுக்கப்பட்டிருப்பதன் நேர்த்தி மிகவும் பிடித்திருந்தது. கேமரா, இசை போன்ற தொழில்நுட்ப அம்சங்கள் அனைத்தும் நேர்த்தியாக இருந்தன. ஆவணப்படம் திரையிட்டு முடிந்தபின் கலந்துரையாடல் நடைபெற்றது. அப்போது பொதுவெளியில் சொல்லவேண்டும் என்று நெடுநாள்களாக என் மனத்தில் வைத்திருந்த சிலவற்றை இயக்குநர்களிடம் கேள்விகளாகக் கேட்டேன். அவர்கள் எனது கருத்துகளை ஆமோதித்துதான் பதில் தந்தார்கள்.
அங்கே எடுத்துரைத்த விஷயங்கள் இவைதாம். ஆவணப்படத்தில் காட்டப்பட்ட நான்கு கவிதாயினிகளும் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர்கள். இரண்டு பேர் தலித், ஒருவர் முஸ்லிம். இங்குதான் நமக்கு பெண்ணிய படைப்புகள் சார்ந்த சில கேள்விகள் எழுகின்றன. உயர்சாதி அல்லது உயர் வர்க்கப் பெண்கள் தாம் சார்ந்த சமூகத்து ஆண்களால் பாதிக்கப்படுவதே இல்லையா? அவர்களெல்லாம் முழுமையாக விடுதலை அடைந்துவிட்டார்களா? அடித்தள சாதிகள், வர்க்கங்கள் அல்லது மதச் சிறுபான்மையின பெண்கள்தான் பாதிப்புக்கு உள்ளாகிறார்களா?
“இல்லை” என்றால், ஏன் ஆதிக்கச் சமூகங்களை விடவும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பண்பாட்டுச் சிக்கல்கள் ஊதிப்பெருக்கப்படுகின்றன? (தமிழ்நாட்டில் மட்டுமல்ல. இந்திய அளவிலும் இதே போக்குதான் நிலவுகிறது.) இவைதாம் நான் முன்வைத்தவை. உண்மையில், உயர்சாதி பெண்களை விடவும் ஒடுக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்த பெண்கள் நிறைய விஷயங்களில் முற்போக்கானவர்களாக இருக்கிறார்கள் என்பது மனங்கொள்ளத்தக்கது.
அ.மார்க்ஸ் ஒருமுறை பின்வருமாறு குறிப்பிட்டார். “சமூகப் படிநிலை உயர உயர பெண்கள் மீதான ஒடுக்குமுறை அதிகமாகின்றது என்பதுதான் உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. அடித்தள மக்கள் மத்தியில் ஒப்பீட்டளவில் பெண்கள் சுதந்திரமாக உள்ளனர். எடுத்துக்காட்டாக ஒன்றைச் சொல்கிறேன். பெண்கள் மாதவிலக்கின்போது மூன்று நாட்கள் ஒதுங்கி இருக்க வேண்டும் என்பது இங்கு பார்ப்பனர் மற்றும் இதர உயற்சாதியினர் மத்தியில்தான். எந்த அடித்தள மக்களிடமும் அந்த வழக்கம் வரலாற்றில் இல்லை.”
சமீபத்தில் தலித்களின் பிரச்னைகள் பற்றி தலித் அல்லாத பெண் ஒருவர் புத்தகமோ, கருத்தோ வெளியிட்டார். அந்த செய்தியை அறிந்ததும், “இவங்களுக்கெல்லாம் தலித் சமூகம் பத்தி என்ன தெரியும்?!” என்கிற ரீதியில் ஒரு தலித் செயல்பாட்டாளர் (பெண்) எரிச்சலடைந்தார். இதைப் பார்த்த எனக்கு வியப்பாக இருந்தது. ஒரு சமூகத்தின் பிரச்னையை யார் பேசினால் என்ன என்று நினைத்தேன்.
ஆனால் இப்போது யோசிக்கும்போது, அந்த தலித் செயல்பாட்டாளரின் உள்ளுணர்வை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆம், உயர் சாதியினர் (அல்லது அவர்களின் அடிவருடிகள்) அடித்தள சாதியினரின் பண்பாட்டு சிக்கல்களை விவரிப்பதன் பின்னுள்ள அரசியல் மோசமானது. அவர்கள் தங்களின் சமூகத்துக்குள் இருக்கும் பெண் ஒடுக்குமுறையை, பிற சாதியினர் மீது தன் சாதியினர் கொண்டுள்ள வன்மத்தை ஏன் எழுதுவதோ, ஆவணப்படம் எடுப்பதோ இல்லை? நாம் கேட்கவேண்டிய முக்கியக் கேள்வி இதுதான்.
வருணாசிரம பெண்ணியம் பேசுவோரிடம் மேற்சொன்ன கேள்விகளையெல்லாம் நாம் எழுப்பவேண்டியிருக்கிறது. (வருணாசிரம பெண்ணியத்தை சவர்ண பெண்ணியம் என்று மலையாளத்தில் கூறுகிறார்கள்.) ஒடுக்கப்படும் தரப்பினரில் உயர் சாதியினரின் கைப்பாவையாகச் செயல்படுவோர் குறித்தும் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியிருக்கிறது.
உயர்மட்ட சாதி இந்துக்கள், உயர் வர்க்கத்தினர் தங்களின் பண்பாட்டு மூலதனத்தைத் தற்காத்துக்கொண்டு, இவர்களுக்குக் கீழே ஒடுக்கப்படும் தலித்கள், முஸ்லிம்கள், அடித்தட்டு மக்களை பண்பாட்டு ரீதியில் ஒடுக்குகிறார்கள். “காலச்சுவடு” இதழின் அரசியல் இதற்கு மிகச் சிறந்த உதாரணம்.