நமது நாட்டில் உயர் கல்வியை வணிகமயப்படுத்தும் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருகின்றன. ‘அதுதான் ஏற்கனவே மாறிவிட்டதே’ என சலிப்படையாதீர்கள். கல்வித் துறை தற்போதைய நிலையைவிட படுமோசமாக மாறவிருக்கிறது.
ஒரு கல்லூரியை நாம் எப்படி தரமதிப்பீடு செய்வோம். முதலாவது, என்ன பாடங்கள் அங்கே கற்றுத்தரப்படுகின்றன? பிறகு, கற்றுத்தரப்படும் பாடங்களுக்கு எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது? தகுதியான ஆசிரியர்கள் இருக்கிறார்களா? பாட திட்டம் தரமாக இருக்கிறதா? போன்றவற்றைக் கவனிப்போம். ஒருவேளை, இவற்றில் ஏதேனும் குறைகள் இருந்தாலோ வேறு ஏதேனும் பிரச்னைகள் இருந்தாலோ அதைக் களைவதற்கு நிர்வாகத்தை அணுகுவோம். பிரச்னை எல்லைமீறிப் போனால் சட்ட நடவடிக்கை எடுப்போம்.
காரணம், நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகளும், நமது எதிர்பார்ப்புகளும் தேவைகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு அவற்றுக்கு தீர்வு கிடைக்கும் என்று நாம் நம்புகிறோம். நமது நம்பிக்கையைக் குலைக்கும் விதமாக, ‘பணத்தை செலுத்திவிட்டு கல்வியை வாங்கிக்கொள். குறை நிறையெல்லாம் சொல்லக் கூடாது’ என கல்லூரி நிர்வாகத்தில் சொல்லப்பட்டு, எவ்வித நடவடிக்கையும் எடுப்பதற்கு நமக்கு வாய்ப்பே கிடைக்காமல் போனால் எப்படி இருக்கும்!
உண்மையிலேயே அப்படி ஒரு நிலைமை நம் நாட்டு மக்களுக்கு ஏற்படும் அபாயம் இருக்கிறது. இந்திய அரசு, உயர் கல்வியில் ‘சந்தை வாய்ப்பு’ வழங்குவதாக உலக வணிக மையத்துக்கு (WTO) வாக்களித்துள்ளது. கடந்த 2001 கத்தார் தலைநகர் தோஹாவில் இந்தப் பேச்சுவார்த்தை தொடங்கியது. 2005 ஆகஸ்டில் இதற்கான வாக்குறுதியைக் கொடுத்துவிட்டது. இந்தப் பேச்சுவார்த்தையின் இறுதிச் சுற்று எதிர்வரும் டிசம்பர் 15 முதல் 18 வரை கென்யாவின் தலைநகர் நைரோபியில் நடைபெறவுள்ளது. இதில் உலக வணிக மையத்தின் உறுப்பு நாடுகளின் வணிக அமைச்சர்கள் சந்தித்து, சேவைத் துறையில் வணிகம் பற்றிய பொது உடன்படிக்கையை (GATS) உறுதி செய்ய உள்ளனர்.
இந்திய அரசு வெளிப்படுத்தியுள்ள விருப்பங்கள் உறுதி செய்யப்பட்டால், இந்தியக் கல்வி அமைப்பே நிரந்தர சிக்கலில் மாட்டிக்கொள்ளும். இந்திய சட்டங்கள் அந்நிய பெருநிறுவனங்களின் நலன் காப்பதாக மாறும். அந்நிறுவனங்களை நம் நாட்டு சட்டம் கட்டுப்படுத்த முடியாது. அப்படியானால், அது எந்தளவு ஆபத்தானது! உயர் கல்வி மட்டுமல்லாமல் மருத்துவம், போக்குவரத்து, காப்பீடு, வங்கி உள்ளிட்ட வாழ்வாதார சேவைத் துறைகளிலும் சந்தை வாய்ப்பை அந்நிய பெருநிறுவனங்களுக்கு ஏற்படுத்தித் தருவதாக நம் நாடு வாக்களித்துள்ளது. உண்மையிலேயே இது தலைபோகும் காரியம்தான்.
GATS (General Agreement on Trade in Services) எப்படி உருவானது என்ற வரலாற்றுப் பின்னணியை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். 1945 வாக்கில் தொடங்கப்பட்ட உலக வங்கியும் சர்வதேச நிதி நிறுவனமும் (IMF) இரண்டாம் உலகப் போரில் நலிவடைந்த நாடுகளின் பொருளாதாரத்தை மீட்பதற்காக தோற்றுவிக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும், அவை வளர்ந்த நாடுகளின் நலனிலும் அந்நிய பெருநிறுவனங்களின் நலனிலும் மட்டுமே கரிசனம் காட்டி வருகிறது. ஒப்பந்தங்களின் மூலமாக வளரும், ஏழை நாடுகளின் சந்தையைப் பன்னாட்டு பண முதலைகளுக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் அமைப்பாகவே இவை செயல்படுகின்றன.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஃபிரான்ஸ், ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளின் GATT (General Agreement on Tariffs and Trade) எனும் ஒப்பந்தத்தின் ஊடாக தாம் உற்பத்தி செய்யும் பொருட்களைத் தங்குதடையின்றி பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தன. எளிய நாடுகளைச் சுரண்டவே இந்த ஒப்பந்தம் உதவியது. பண்டத்தை ஏற்றுமதி செய்து GATT ஒப்பந்தம் மூலமாக பல நாடுகளைச் சுரண்டியது போதாதென்று, நாட்டின் பொதுச் சேவைத் துறைகளையும், அறிவுசார் சொத்துகளையும் (intellectual property) தங்களின் கிடுக்குப்பிடிக்குள் கொண்டுவரவேண்டும் என வளர்ந்த நாடுகளும், பன்னாட்டு நிறுவனங்களும் நினைத்தன. இதன் விளைவாக, உலக வணிக மையம் நடத்திய உருகுவே பேச்சுவார்த்தையில் GATS, TRIPS ஆகிய ஒப்பந்தங்கள் உருவாயின.
1995ஆம் ஆண்டில்தான் GATT உலக வணிக மையமாக (WTO) மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த WTO உருவான பிறகு இந்தியா போன்ற வளரும், ஏழை நாடுகளை கொள்ளையடிப்பது வளர்ந்த நாடுகளுக்கும் பன்னாட்டு பெருங்குழுமங்களுக்கும் சுலபமானது. தற்போது, WTOவில் 161 உறுப்பு நாடுகள் இருக்கின்றன. IMF, உலக வங்கி ஆகியவற்றில் கடன் வாங்கிய நாடுகள் WTOவின் போருயில் அகப்படும். அதில் ஏற்படும் பெரிய சிக்கல் என்னவெனில், கடன் வாங்கிய காரணத்தால் WTO சொல்லும் பொருளாதாரக் கொள்கையையே அந்நாடுகள் பின்பற்ற வேண்டுமென மறைமுகமாக நிர்பந்திக்கிறது.
1991இல் நரசிம்மராவ் இந்தியாவின் பிரதமராக இருந்தபோது, அதிக அந்நியக் கடன் உடைய மூன்றாம் நாடாக நம் இந்தியா இருந்தது. அப்போது மன்மோகன் சிங் நிதியமைச்சர். வாங்கிய கடனை அடைக்க முடியாமல் திக்குமுக்காடிப் போனது இந்தியா. அடிப்படைத் தேவைகள் இறக்குமதி செய்யும் அளவுகூட நம்மிடம் நிதி (அந்நிய செலாவணி) இல்லை.
இதுதான் சரியான சமயம் என்று இந்தியாவை வேட்டையாடுவதற்கு உலக நிதி நிறுவனம் (IMF) களம் இறங்கியது. கடன் கொடுப்பதற்கு முன்வந்தது. ‘பன்னாட்டு நிறுவனங்களுக்கு சந்தையைத் திறந்துவிடவேண்டும்’ என அது நிபந்தனை விதித்தது. அதை ஒப்புக்கொண்டு, IMF-யிடன் இருந்து இந்தியா கடன் வாங்கியது. அதன்படி, நாட்டின் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் செய்தது. அரசுகளின் வருவாயை அதிகரித்துவிட்டு செலவினங்களைக் குறைப்பது என்பதே IMF சொல்லும் அடிப்படைக் கொள்கை. தாராளமயமாதல், தனியார்மயமாதல், உலகமயமாதல் (LPG) என்பவை கடன் வாங்கியதால் விளைந்தவையே.
இதன் விளைவாக உள்நாட்டு சிறு வணிகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. நுகர்வு கலாச்சாரத்திற்கு மக்கள் அடிமைகளாயினர். வியாபாரிகள், தொழிலாளிகள், பொது மக்கள் என பலதரப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டனர். பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் இன்னும் அதிகமானது. அதுமட்டுமல்லாமல், எல்லாத் துறைகளிலும் எண்ணிலடங்கா பிரச்னைகளை நமது நாடு சந்தித்து வருகிறது.
1981-82இல் இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராக இருந்தபோதே IMFல் கடன் வாங்கினார். அப்போதிருந்த கல்விக் கொள்கையில்கூட அது எதிரொலித்தது. அதிலிருந்து நம் நாடு படிப்பினை பெற்றிருக்க வேண்டும். ஆனால், நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் இரண்டாவது முறையாக கடன் பெறப்பட்டது.
வளரும் நாடுகள் கடன் சுமையில் இருக்கும்போது காப்பாற்றும் காவலனைப் போல் உள்ளே நுழைந்து, ஒப்பந்தங்கள் வாயிலாக அந்நாடுகளை மறைமுகமாக ஆட்சி செய்யும் வேலையைத்தான் IMF, உலக வங்கி ஆகியவை 1945இல் இருந்தே செய்துவருகின்றன.
இந்தப் பின்னணியில்தான் சேவைத் துறையில் வணிகம் பற்றிய பொது உடன்படிக்கையையும் (GATS) நாம் பார்க்கவேண்டும். 2005இல் GATS ஒப்பந்தத்தில் இந்திய அரசு வெளிப்படுத்தியுள்ள விருப்பங்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் நைரோபியில் உறுதி செய்யவிருக்கிறது. பொதுச் சேவைத் துறை பறிபோனால் அது தீய விளைவுகளை உண்டாக்கும். அதிலும் குறிப்பாக, கல்வித் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை (FDI) அனுமதித்தால் அது நம் நாட்டையே சீரழித்துவிடும்.
உயர்கல்விக்கு அரசு பொறுப்பேற்காமல் இன்றைய நவீன தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தி, கீழ்கண்ட வகைகளில் அதை நிறைவு செய்யலாம் என காட்ஸ் ஒப்பந்தம் பரிந்துரைக்கிறது.
- எல்லைத் தாண்டிய விநியோகம்:
சேவைக் கட்டணங்கள் செலுத்தி அயல்நாட்டு விநியோகிப்பவரிடம் இருந்து அஞ்சல்வழிக் கல்வி பெறுதல். அதாவது, இணையதளம் மூலமாக. - வெளிநாட்டு நுகர்வு: வெளிநாட்டிற்கு நேரடியாக சென்று கட்டணங்கள் செலுத்தி கல்வி பெறுதல்.
- வணிகத்திற்காக நேரடி வருகை: வெளிநாட்டி நிறுவனங்கள் இங்கு வந்து சேவைக் கட்டணம் வசூலித்து கல்வி வழங்குதல்.
- தனியாள் நேர்வருகை: வெளிநாட்டு ஆசிரியர்கள் தனியாட்கள் என்ற முறையில், இந்தியாவுக்கு வந்து இங்குள்ள நிறுவனங்களில் சேவை வழங்கி கட்டணங்கள் வசூலித்தல்.
இந்த நான்கு வகைகளிலுமே இந்தியா தன் சந்தையைத் திறந்துவிட்டிருக்கிறது. கல்வி வணிகர்கள் நம் இந்தியாவில் களமிறங்கினால், நமது நாட்டு மாணவர்கள் கல்வியைக் கற்பவர்களாக இருக்க மாட்டார்கள். கல்வியை வாங்கும் நுகர்வாளராக இருப்பார்கள். வெளிநாட்டவர்களும், பன்னாட்டு நிறுவனங்களும் இலாபமீட்டும்.
அப்படி செய்தால், கல்விக் கொள்கையே பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதமாக மாற்றப்படும். ஆய்வுகள்கூட பொது நலன் சார்ந்ததாய் இருக்காது. அவர்களது நலனையும் இலாபத்தையும் சார்ந்ததாகவே இருக்கும்.
இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். வெளிநாட்டுக் கல்வி வணிகர்கள் குறித்து 2000ஆம் ஆண்டு உலக வங்கியே ஓர் ஆய்வறிக்கை கொடுத்தது. அதில் ‘வளர்ச்சி பெற்ற நாடுகளில் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்கள் பிற்பட்ட நாடுகளில் தரம்தாழ்ந்த கிளைகளை நிறுவின’ என்று பதிவு செய்துள்ளது. ஆக, பத்து பைசாவுக்கும் புண்ணியமில்லாத கல்வியைக் கொண்டு நாம் என்ன செய்வது?
ஆகவே, எப்படிப் பார்த்தாலும் கல்வியில் அந்நிய நேரடி முதலீடு செய்யப்படுவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் உள்நாட்டு ஒழுங்குமுறையும் சீர்கெடும். சமூக ரீதியாக பாரதூரமான விளைவுகளை உண்டாக்கும். மேல்தட்டு மக்களுக்கே கல்வி என்ற நிலை ஏற்படும். எளிய மக்களுக்கு கல்வி எட்டாக்கணியாக மாறும். சமூக ஏற்றத்தாழ்வுகளை ஊதிப்பெருக்கும்.
மொத்த மக்கள் தொகையில் 8.15 சதவிகிதத்தினர் மட்டுமே பட்டதாரிகளாக உள்ளதாக 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சொல்கிறது. அப்படியென்றால், சமூக ஒடுக்குமுறையினால் தங்களது திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் போன SC/ST, சிறுபான்மையினரின் நிலை என்னவாக இருக்கும்! இவர்களின் சமூக – பொருளாதார முன்னேற்றத்திற்கான கல்வி உதவித் தொகை, மானியம், இடைவிடாது போராடி பெற்ற இட ஒதுக்கீடு முதலியவை காணாமல் போகும். சட்டப் பாதுகாப்பிலிருந்து இவர்கள் முற்றிலுமாக விளக்கப்படுவார்கள். தகுதி, திறமை எனும் போலியான சொற்களுக்குப் பின்னால் இவர்களது உள்ளக்குமுறல் மறைக்கப்படும்.
பெருந்தலைவர் காமராசர் உருவாக்கிய அரசுக் கல்லூரிகள்தான் சாதாரண மக்களுக்கும் படிப்பதற்கான வாய்ப்பை ஓரளவு ஏற்படுத்திக் கொடுத்தன. அவற்றை வலுப்படுத்தும் முன்னெடுப்புகளை அரசாங்கம் செய்ய முன்வராமல், காட்ஸ் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கினால் அது அரசுக் கல்லூரிகளை நலிவடையச் செய்யும். மேலும், நமது மொழிகள் அழியும். அறிவுசார் வளர்ச்சி முடங்கும். பொது மக்களுக்கு பொல்லாங்கு விளைவிக்கும்.
பல்கலைக் கழக மானியக்குழு உள்ளிட்ட உயர்கல்வி கண்காணிப்புக் குழுக்கள் களைக்கப்படும். UGC, MCI, AICTE போன்றவற்றை களைத்துவிட்டு ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்படுமென பாஜக தனது 2014 தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிட்டுள்ளது. பா.ஜ.க அரசு வகுப்பறையில் வகுப்புவாதத்தை புகுத்தும் அதே சமயம் கல்வியில் தனியார்மயத்தையும் ஊக்குவிக்கிறது.
காட்ஸ் ஒப்பந்தம் விஷயத்தில்கூட வெளிப்படைத் தன்மை இல்லாமல் மத்திய அரசு நடந்துகொள்கிறது. நாட்டையே புரட்டிப்போடும் ஓர் ஒப்பந்தத்தை வெறும் ஆங்கில மொழியில் மட்டுமே அரசின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. அரசு, மக்கள் நலன் சார்ந்து முடிவுகள் எடுக்கவேண்டும். காட்ஸ் ஒப்பந்ததில் இந்திய அரசு வெளிப்படுத்தியுள்ள விருப்பங்களை கைவிடவேண்டும். பலகோடி மக்களின் வாழ்க்கையைச் சீரழிக்கும் விதத்தில் ஒப்பந்தத்தை உறுதி செய்துவிடக் கூடாது.
கல்வியே ஒரு சேவைதான். அதை வணிகத்திற்குரிய சேவையாக மாற்றுவது கண்டிக்கத்தக்கது. எவ்வித பாரபட்சமுமின்றி எல்லோருக்கும் தரமான கல்வி வழங்கவேண்டியது அரசின் கடமை. கற்றல் ஒருபோதும் பண்டமாக இருந்ததில்லை. கற்றலும் கற்பித்தலும் ஓர் அறப்பணி என்பதாகவே நாம் கருதுகிறோம். அதை வணிகமயபடுத்துவது நாட்டைத் சிதைத்து சின்னாபின்னமாக்கவே வழிகோலும்.
உதவியவை:
1. உயர்கல்வி எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் – அ.மார்க்ஸ்.
2. பிரின்ஸ் கஜேந்திர பாபுவின் உரைகளும் கட்டுரைகளும்.