SIOவின் அகில இந்திய தலைவராக பொறுப்பேற்று ஒரு வருடத்தைக் கடந்துள்ள நீங்கள், கடந்த வருடத்தின் நடவடிக்கைகளை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?
முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்வதற்கே உரிமையில்லாதது போல் உருவாகியுள்ள ஒரு இக்கட்டான சூழலில்தான் SIOவின் அகில இந்திய தலைவர் என்கின்ற பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆள்பலமும், பொருள்பலமும் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், சமூகப்பணியை முன்னெடுத்துச் செல்ல, இந்திய முஸ்லிம் சமூகத்தின் மீது எனக்கு அளவுகடந்த நம்பிக்கை இருக்கின்றது. கடந்த இரண்டு வருடங்களில் இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் உள்ள SIO ஊழியர்கள் கல்வி ரீதியாக சிறந்து விளங்குவது மட்டுமல்லாது, நாட்டின் நலன் கருதி சமூக அக்கறையுடனும், கல்வி வளாகங்களில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
கடந்த பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல்களில் பாசிச-எதிர்ப்பு இயக்கங்கள் அதிக அளவில் வெற்றி வாகைசூடினர். இவ்வெற்றி ஒரு சிறந்த வருங்காலத்தை அமைக்கும் என்ற கண்ணோட்டத்தில் பார்க்க முடியுமா?
JNU (ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்), HCU (ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம்), புதுச்சேரி மற்றும் டெல்லி பல்கலைக்கழகங்களில் பாசிச-எதிர்ப்பு மாணவர் அமைப்புகள் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கல்வி வளாகங்கள் காவிமயமாவதை இக்குழுக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். இதில் கண்ணுக்கு குளிர்ச்சியூட்டும் செயலாக தென்படுவது, முஸ்லீம்-தலித் மாணவர்கள் கைகோர்த்து களத்தில் வேலை செய்வதுதான்.
முன்னர் காலங்களில் முஸ்லிம், தலித் மக்களின் பாதுகாப்பிற்காக தங்களை சுயமாக முன்நிறுத்திக் கொண்ட இடதுசாரி அமைப்புகள், தற்போது அதற்கு நேர்மாறாக செயல்பட்டு வருவது மிகவும் கவலையளிக்கின்றது. தலித் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் சேர்ந்து கல்லூரி அமைப்பில் வேலை செய்வதை இடதுசாரி அமைப்புகள் விரும்புவதில்லை என்பது மிகவும் வேதனையளிக்கின்றது. அவர்கள் சித்தாந்த ரீதியான குழப்பத்தில் இருப்பதாகத்தான் நாம் இதனை பார்க்க முடிகிறது. JNU போன்ற பல்கலைக்கழகத்தில் இடதுசாரி அமைப்புகள் நமக்கு எதிரான பிரச்சாரங்களை தீவிரமாக முன்னெடுத்துள்ளனர்.
இந்த பாசிச-எதிர்ப்பு மாணவ அமைப்புகளின் கல்வி வளாக வேலைகளில் SIOவின் பங்கு என்ன?
கல்வி வளாகங்களில் இந்த அமைப்புகள் முன்னெடுக்கும் பணிகளில் முன்னணியில் நின்று பணியாற்றுபவர்கள் SIOவின் ஊழியர்கள் என நான் பெருமிதத்தோடு கூறவிரும்புகிறேன். HCU, JNU, AMU, புதுச்சேரி பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற மாணவ சங்க தேர்தல்களில் SIOவின் ஊழியர்கள் போட்டியிட்டு வருகின்றனர். ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் வெற்றிபெற்ற, ABVPக்கு எதிராக போட்டியிட்ட அமைப்பில் SIOவும் ஒர் அங்கம் வகித்துள்ளது. மௌலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழக மாணவ தேர்தலில் SIO தனது வெற்றியை நிலைநிறுத்தியுள்ளது. மேலும் (LEFT BASTIONS) எல்லைப் பகுதிகளில் இயங்கும் பல்கலைக்கழகங்களில் SIO வலுவாக தனது இருப்பைக் காட்டிவருகிறது.
ஓர் இக்கட்டான சூழலில் இந்திய முஸ்லிம்கள் இருக்கும் போது, மக்களின் மனஉறுதி மற்றும் நம்பிக்கைக்காக களத்தில் SIO மற்றும் இதர இஸ்லாமிய அமைப்புகளின் வேலைகள் என்ன?
இந்த இக்கட்டான சூழலுக்கு ஏதோ மோடி ஆட்சி பீடத்திற்கு வந்த பிறகுதான் என்ற கருத்து இருந்தாலும்கூட, மோடியின் ஆட்சி இந்த ப்ரச்னைகள் குறித்து விவாதிக்க களத்தினை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம்கள் இந்தியாவில் பதுகாப்பற்ற சமூக சூழலை பல ஆண்டுகளாகவே எதிர்கொண்டு வருகின்றனர். முஸ்லிம்கள் சமூக ரீதியாக மிகவும் பின்தங்கி இருப்பதாக வெளியிட்ட சச்சார் குழுவின் அறிக்கை வெளியாகி 10 ஆண்டுகள் கடந்தும் முஸ்லிம்களின் சமூக நிலையில் எந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் இல்லை. இதை முன்வைத்தே SIO தன்னுடைய வேலைகளை வடிவமைத்து வருகிறது.
ஒரு மாணவர் அமைப்பாக, JNU மாணவன் நஜீப்-கான நீதி கேட்கும் போராட்டத்தில் ஈடுபட்ட நீங்கள் அதன் நிலை பற்றி விவரிக்கமுடியுமா?
நஜீபிற்கான நீதிப்போராட்டம் அவரை மீட்டுத் தந்ததோ இல்லையோ, இந்திய சமூகத்தில் வேரூன்றி இருந்த இஸ்லாமிய எதிர்ப்பைக் குறித்து வெளிப்படையாக நம்மால் அறிய முடிந்தது. ஏன் சில அறிவுஜீவிகளிடமும்கூட அவை தென்பட்டன. JNU வில் அதிகளவில் இருக்கும் முற்போக்கு இடதுசாரி அமைப்புகள்கூட தங்கள் வளாகங்களில் இருந்து ஒரு மாணவன் காணாமல் ஆக்கப்பட்டத்தை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
நஜீபுக்கான நீதிப்போராட்டத்திற்கு அவரது தாய் பாத்திமா நபீசுடன் இணைந்து SIO இதுவரை தன்னுடைய ஆதரவை தெரிவித்து வருகிறது. டெல்லி போலீசார் இவ்வழக்கில் அலட்சியம் காட்டியதை அடுத்து, CBIக்கு வழக்கை மாற்றம் செய்ய SIO வலியுறுத்தியது. CBIக்கு வழக்கு மாற்றப்பட்ட பின்பும் அலட்சியம் நீடித்து வருகிறது. மேலும் நஜீப் நீதிப்போராட்டத்தில் முன்நின்ற மாணவர்களை எக்காரணமும் இன்றி இந்த அரசு துன்புறுத்தி வருகிறது. CBI தன்னுடைய முதல் தவணையில் நீதிமன்றத்தில் முன்வைத்த அறிக்கையையே இரண்டாம் தவணையிலும் சமர்பித்து அலட்சியம் காட்டியது. நஜீப் கடத்தப்பட்ட இரவு அவரை தாக்கிய கயவர்களை இதுவரை விசாரணை அடிப்படையில்கூட காவல்துறை விசாரிக்கவில்லை என்பது இவர்களை பின்னால் இருந்து யார் இயக்குகிறார்கள் என்ற கூடுதல் சந்தேகத்தை நமக்கு ஏற்படுத்தியது. இவர்களின் ஆமைநகர்வை கண்டித்து பொறுப்பான விசாரணையை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் வலியுறுத்தியது. நீதி மறுக்கப்பட்ட காலங்கள் ஓடிவிட்டன, நஜீபின் நீதிக்காக போராடிவந்த அவரது தாயை கொஞ்சம் பொறுமையாக இருக்கும்படி நீதிமன்றம் அறிவுறுத்தியது.
நஜீபின் நீதியில் அலட்சியம் காட்டிய டெல்லி போலீசார், நீதிப்போராட்டத்தில் ஈடுபட்டோரை கலைப்பதில் மட்டும் ஆர்வம் காட்டினர். மேலும் பெண் என்றுகூட பாராமல் நஜீபின் தாயை மிருகத்தனமாக, மனிதநேயமற்ற வகையில் சாலையில் இழுத்துச் சென்றது, இன்னும் எங்கள் கண்களில் இருந்து மறையவில்லை.
BJP ஆட்சிக்கு வந்த பிறகு முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து உள்ளது. இதற்கான தீர்வாக நீங்கள் கருதுவது?
முஸ்லிம்-எதிர்ப்பு அமைப்பான சங்பரிவார் குழுக்கள், மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் தங்கள் நிலைகளை வேறுவிதமாக முன்னெடுத்துள்ளனர். தங்கள் கவனத்தை பெரிய அளவில் கலவரங்களை ஏற்படுத்தி பாரிய இழப்புகளை ஏற்படுத்துவதிலிருந்து மாற்றி சிறிய அளவிலான தாக்குதல்களை அதிக எண்ணிக்கையில் ஏற்படுத்துவதில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். இவர்கள் மாட்டு-அரசியல் போன்ற தீவிர போக்கை கட்டவிழ்த்து விட்டு முஸ்லீம் மக்கள் மீது தாக்குதல்களை பெருவாரியாக தொடுக்கின்றனர். கடந்த காலத்தில் அப்பட்டமாக கொலை செய்யப்பட்ட பெஹ்லுகான், ஜுனைத், முஹம்மத் அஹ்லாக் போன்றரே அதற்கான சான்று. சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு குறித்து நீதிமன்றம் கவனம் செலுத்த சொல்லியும், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இவைகள் அரங்கேறுவதை எந்த ஆட்சியாளர்களும் கண்டுகொள்வதில்லை.
இப்படிப்பட்ட தாக்குதல்களை முன்னெடுப்பதற்கு முன்னர், இவர்கள் முஸ்லிம்களை நாட்டிற்கு சம்மந்தம் இல்லாதோர் போன்று சித்தரித்தும், அகண்ட இந்து பாரதம் என்ற போர்வையிலும், நாட்டு மக்களை முஸ்லிம்களுக்கு எதிராக திருப்பி பலப் பொய் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து வருகின்றனர். இந்த முறை இவர்களுக்கு தீவிர தாக்குதல்களை தொடுக்க சுமூகமாக அமைந்து விடுகின்றன.
இந்தியாவில் முஸ்லிம்-தலித்-ஆதிவாசி ஆகியோர் தாழ்த்தப்பட்டவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான தாக்குதல்கள் சித்தாந்த மற்றும் மத ரீதியாக தொடுக்கப்படுகின்றன என்பதை நாம் மக்களுக்கு அடையாளப்படுத்த வேண்டும். சங்பரிவார் கூட்டத்தால் கொலை செய்யப்பட்டவர்கள், குற்றம் இழைக்கப்பட்டவர்கள் என அடையாளம் காட்டப்பட வேண்டும். இது போன்ற தாக்குதல்களை ஓர் அணியில் நின்று நாம் தடுக்க வேண்டும். அதுவே சிறந்த காலத்தை அமைக்க வழிவகுக்கும் என நாம் நம்புகிறோம். சுவாச வாயு (ஆக்சிஜன்) போலவே கண்ணியமும் ஒரு மனிதனுக்கு முக்கியமானது. ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் கண்ணியமான வாழ்வை வழங்க வேண்டும் என நம் நாட்டு அமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. அதே மையக்கருத்தில் அமைந்ததே இந்த அகில இந்திய மாநாடு, SIO கண்ணியத்தின் மீதான தாக்குதலுக்கு தன்னுடைய கடுமையாக போராட்டத்தை முன்னேடுத்து வருகிறது.! நிச்சயம் இனிமேலும் முன்னெடுக்கும்.!
நாடு முழுவதும் முஸ்லிம்கள் வேட்டையாடப்படுவது வெளிப்படையாகத் தெரிந்தும் ஏன் இதற்கான வலுவான எதிர்ப்பு குரல் இந்திய சமூகத்திடம் எழவில்லை?
கேள்வி மிகவும் பொருத்தமானது. முஸ்லிம்கள் எவ்வளவு இக்கட்டான சூழலில் உள்ளனர் என்பதை படம் பிடித்துக் காட்டுகின்றது. இந்த இக்கட்டான நிலைக்கான காரணங்கள் பல்வேறுவிதமானவை. ப்ரச்னைகளின் ஆழம் குறித்த விழிப்புணர்வு இல்லாமையே பிரதான காரணம். சமுதாயத்தின் இருப்பு ஆபத்தில் இருந்தாலும் கூட, நம்மில் பெரும்பான்மை மதச்சார்பற்ற நாடகங்களுக்கு முன்பு தோல்வி அடைந்த சமூகமாகவே இருக்கின்றோம். இந்த விஷயங்களில் ஈடுபடுவதால் ஏற்படும் தாக்கக்கள் பற்றிய பயம் மற்றொரு காரணம். அச்சம் மிகுந்த சூழலை ஏற்படுத்துவதில் சங்கப் பரிவாரங்கள், அதன் துணை அமைப்புகள் வெற்றி பெற்றுள்ளனர் என்பதை நாம் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும். அதனால்தான் பத்திரிகை வெளியீடுகளுக்கு அப்பால் எவ்விதமான எதிர்ப்புகளும் நம்மிடத்தில் இல்லை. தெளிவான பார்வைகளைக் கொண்ட தலைவர்கள் இல்லாததும் மிக முக்கியமான காரணியாக உள்ளது. கல்வி சார்ந்த ப்ரச்னைகளில் சங்பரிவார படைகளை எதிர்த்துப் போராடுவதில் நமது இளைஞர்கள் வெற்றிகண்டுள்ளனர் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் சமூகப் புரட்சியை ஏற்படுத்துவதில் நாம் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கின்றோம்? நம்மை நாமே சுய-விமர்சனம் செய்து கொண்டு, அத்தகைய புதிய தலைமுறை தலைவர்களை வளர்க்க வேண்டும்.
நேர்காணல் வழங்கியவர்: நஹாஸ் மாலா, அகில இந்திய தலைவர், SIO
தமிழில்: முஹம்மது சர்ஜுன். S