மரணத்தால் மரத்து போகும் மனங்கள்
மீண்டும் ஒரு மலர் வாசனையை வெளிப்படுத்தும் முன்பே உதிர்ந்துவிட்டது.
மகள் மருத்துவராக வந்து தங்கள் ஏழ்மை பிணி தீர்ப்பாள் என்று வாஞ்சையுடன் இருந்த பெற்றோர்களுக்கு வாழ்நாள் முழுதும் தீராப் பிணி தொற்றிக் கொண்டுள்ளது.
அன்று தேர்வு முடிந்து வந்து அப்பா எங்கே என்று கேட்டான் ஒரு மகன். இன்று தேர்வு முடிவு வந்ததும் என் மகள் எங்கே என்று கேட்கின்றனர் ஒரு தாய்,தந்தை.
அனிதா, கிருஷ்ணசாமி, இப்போது பிரதீபா. மனுவின் நீதிக்காக பலியிடப்பட்ட கன்றுகள். ஆனால் எத்தனை முறை மணியை அடித்தாலும் நீதி மட்டும் கிடைப்பதில்லை.
அன்று பசுவின் கதறலைக் கேட்டு மகனையே பலியிட்டதாக சொல்கிறது புராணம். ஆனால் இங்கு மீண்டும் மீண்டும் கன்றுகளே பலியிடப்படுகின்றன.
எம் பிள்ளைகளின் ஆடை, ஆபகரணங்களை அவிழ்த்துப் மானத்தை அழித்தார்கள்.
தமிழனா, நீதான் மானம் இழந்து உயிர் வாழ மாட்டாயே என்று இப்போது உயிர்களையும் பறித்துவிட்டு எட்டி நின்று சிரிக்கிறார்கள்.
ஒவ்வொரு மரண செய்தி வரும்போதும் மாணவ அமைப்புகள் போராடுவார்கள், அரசால் ஒடுக்கப்படுவார்கள்..
அரசியல் கட்சிகள் அடையாளப் போராட்டம் நடத்துவார்கள்..
சமூக வலைதளங்களில் ஆற்றாமை பதிவுகள் பகிரப்படும்..
பிறகு இன்னொரு மரணம் வரும் வரை
மயானத்தை போலவே அமைதி ஆகிவிடுகிறது..
(ம)ரணங்களை பொறுத்துப் போகவும்
பிணங்களை பொறுக்கிப் போகவும் நாம் பழகிவிட்டோம்..
மரணங்களால் நம் மனங்கள் மரத்துப் போய்விட்டது..
அபுல் ஹசன்
9597739200