பிரேசில் தலைநகரில் நடைபெற்ற ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிக்கான தகுதித் தேர்வு போட்டியில், இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் தேர்வாகியுள்ளார். அதே போல், ஹாங்காங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் ஆசிய தகுதிப் போட்டியின் ஆடவர் பிரிவில் சரத் கமல் மற்றும் மகளிர் பிரிவில் மவுமாதாஸ் ஆகியோரும் தேர்வாகியுள்ளனர்.
மேற்குறிப்பிட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்குகொள்வதற்கு இந்தியாவைச் சார்ந்த வீரர், வீராங்கனைகள் தேர்வாகியுள்ள விஷயத்தை நம்மில் எத்துனை பேர் தெரிந்து வைத்திருப்போம்? இது குறித்து தமிழகச் சூழலில் பரபரப்பாக பேசப்படவே இல்லையே ஏன்..? இந்தப் போட்டிகள் யாவும் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்தவைதான். அதே மாதத்தில் தொடங்கிய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பற்றி மக்களிடம் எந்த அளவுக்குப் பேசப்படுகிறது என்பதை நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
பதினாறாம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டில் கிரிக்கெட் தோற்றுவிக்கப்பட்டது. பிரிட்டிஷாரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலனி நாடுகளில் கொஞ்சம் கொஞ்சமாக அது ஊடுருவியது. இந்தியாவிலும் அப்படித்தான் நுழைந்தது. ஆரம்பத்தில் பிரிட்டிஷாரோடு நெருக்கமாய் இருந்த உயர் சாதியினரே கிரிக்கெட் விளையாடுவார்கள். ஆனால் இன்றோ அப்படியில்லை. அனைத்து மட்டங்களிலும் அது பரவிவிட்டது. 1983இல் கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை வென்றதும், நவீன தொழில்நுட்ப கருவிகளின் பெருக்கமும், தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யும் வாய்ப்பு கிடைத்ததும் கிரிக்கெட்டை எல்லாத் தரப்புக்கும் கொண்டுசென்றது.
இன்று ஏராளமான இளைஞர்களுக்கு கிரிக்கெட் மீது ஓர் அதீத ஈர்ப்பு உள்ளது. கிரிக்கெட்டைத் தவிர்த்து, எந்த விளையாட்டிலும் அவர்கள் கவனம் கொள்வதில்லை. கிரிக்கெட் விளையாடுவது ஒருபுறமிருக்க, விளையாடுவதை வேடிக்கை பார்ப்பவர்களே அதிகம் எனலாம். அதில் அவர்களுக்கு அலாதியான ஆர்வம். ஆர்வம் என்று சொல்வதைக் காட்டிலும் ‘வெறி’ என்ற சொல் இங்கு கச்சிதமாகப் பொருந்தும். அதிலும் இது ஐ.பி.எல். காலம் என்பதால் இளைஞர்கள் பலர் கிரிக்கெட் காட்சிகளிலேயே மூழ்கி, முக்தி நிலையை அடைந்திருப்பார்கள்! இது ஒருவிதமான அடிமைத்தனம். இந்திய முதலாளிகள் இலாபம் ஈட்டுவதற்கு என்றே இவர்கள் அடிமைகளாக்கப்பட்டவர்கள்.
தெரு முனைகளில், டீக் கடைகளில், பேருந்து நிலையங்களில் பலரும் IPL பற்றி விவாதிக்கிறார்கள். அதில் அவர்களுக்கு சொல்லொன்னா ஆனந்தம். இப்படி விவாதிப்பவர்களிடம் கல்வி அல்லது அரசியல் பற்றி பேசினால் என்னவாகும்? நிச்சயம் அது அவர்களுக்கு அந்நியமாகத் தோன்றும். அப்படி பேசுபவரை விநோதமாக பார்க்கத் தொடங்கிவிடுவார்கள்.
2007ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியத்திலிருந்து (BCCI) நீக்கப்பட்ட கபில் தேவ், அதற்குப் போட்டியாக ஜீ டி.வி. சுபாஷ் சந்த்ராவோடு இணைந்து இந்தியன் கிரிக்கெட் லீக் (ICL) என்று ஒன்றை தொடங்கினார். நல்ல வரவேற்ப்பு ICL க்கு கிடைத்தது. இதைக் கண்டு அரண்டுபோன பிசிசிஐ, அதே ஆண்டில் இந்தியன் பிரீமியர் லீக் (IPL)-ஐ ஆரம்பித்தது. லலித் மோடி இதன் பொறுப்பாளரானார்.
2008-இலிருந்து IPL நடைபெற்று வருகிறது. *8 அணிகள் விளையாடுகின்றன. கடந்த 2015இல் விளையாடிய சென்னை மற்றும் ராஜஸ்தான் அணி இந்தமுறை சேர்த்துக் கொள்ளப்படவில்லை. அதற்குப் பதிலாக, குஜராத் லயன்ஸ், ரைசிங் பூனே சூப்பர் ஜயண்ட்ஸ் என்ற இரு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. (சென்னை அணி நீக்கப்பட்டதால் தமிழக ரசிகர்களுக்கு ஆர்வம் குறைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. உண்மையெனில், மகிழ்ச்சி).
IPLஇல் விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்வதற்கு ஏலம் விடும் விவகாரம் நமக்குத் தெரிந்திருக்கும். முதல் ஐ.பி.எல்.இல் அதிகபடியான தொகையில் ஏலம் விடப்பட்டவர் இந்திய வீரர் டோனி. 6 கோடிக்கு இவரை இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் சென்னை சூப்பர் கிங்க்ஸ் (CSK) அணிக்கு ஏலமெடுத்தார். இந்த முறை ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா 9.5 கோடிக்கு ஏலம் வாங்கியுள்ளார். அவருக்குப் பிறகு அதிகபட்சத் தொகைக்கு வாங்கப்பட்டவர், இந்திய வீரர் பவன் நெகி. 8.5 கோடிக்கு இவரை டெல்லி டேர்டெவில்ஸ் (DD) வாங்கியுள்ளது. அடுத்த இடத்தில், DD அணிக்காக தென் ஆப்பிரிக்க வீரரான கிறிஸ்டோபர் மொரிசும், இந்திய வீரர் யுவராஜ் சிங் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்காகவும் 7 கோடிக்கு விலை போயுள்ளனர்.
இதுபோல் எல்லா ஆட்டக்காரர்களும் பணத்தில் புரண்டு கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்கள் விளையாடும் நேரத்தைக் கடக்கிட்டுப் பார்த்தால் சற்றேறக் குறைய 50 மணி நேரம் இருக்கலாம். உழைப்பில்லாமல், சிரமமின்றி இவர்களால் பல கோடிகளை அள்ள முடிகிறது. ஆனால், இதே இந்தியாவில்தான் தொழிலாளிகளாலும் விவசாயிகளாலும் உழைப்பிற்குத் தக்க ஊதியம் பெற முடிவதில்லை! இதைப் பற்றியெல்லாம் மத்திய தர வர்க்க கிரிக்கெட் ரசிகர்கள் அலட்டிக்கொள்வதே இல்லை. அவர்களைப் பொறுத்தவரை, தாம் நாயகனாகக் கருதும் ஓர் ஆட்டக்காரர் அதிக விலைக்கு வாங்கப்பட வேண்டும் என்பதே.
விளையாடுபவர்களே இப்படி கோடிகளை அள்ளும்போது, ஏலம் எடுத்த தொழிலதிபர்களும் நடிகர்-நடிகைகளும் எவ்வளவு கோடிகளை இலாபம் ஈட்டுவார்கள்! அவர்கள் முதலீடு செய்வதன் நோக்கம், இந்திய கிரிக்கெட் அணிக்கு நல்ல ஆட்டக்காரர்கள் கிடைக்கவேண்டும் என்பதோ அல்லது கிரிக்கெட் மீதுள்ள காதலோ அல்ல. போட்ட பணத்தை எப்படி பன்மடங்கு பெருக்கலாம் என்பதே.
இங்கே நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். விளையாட்டுகளின்போது பெறப்படும் ஸ்பான்சர்களில் மட்டுமே போட்ட இவ்வளவு பணத்தையும் முதலீட்டாளர்கள் திருப்பி எடுத்துவிட முடியுமா? வாய்ப்பே இல்லை. அங்கு வியாபாரத்தையும் தாண்டி சூதாட்டம், ஊழல் முதலிய பித்தலாட்டங்களும் அரங்கேறுகின்றன. விளையாடுபவர்களும் வர்ணனையாளர்களும் இன்னபிற பணியாளர்களும் அவர்கள் வேலை முடிந்த கையோடு உடனுக்குடன் காசு பார்த்துவிடுவார்கள். அணியில் உரிமையாளர்களுக்கு அப்படியல்ல. அவர்கள் கொஞ்சம் பொறுத்திருந்துதான் வேட்டையாட வேண்டியிருக்கும். இந்த கேப்பில் பல்வேறு மோசடிகள் செய்வதற்கு வழியிருக்கிறது.
சூதாட்டம் என்பது இறுதி முடிவை மட்டுமே வைத்து நடத்தப்படுவதில்லை. ஆட்டத்திற்கான டாஸ் போடுவதிலிருந்து ஆரம்பமாகிவிடுகிறது. IPL-இல் போட்டி நிர்ணய மோசடி (மேட்ச் ஃபிக்ஸிங்) நடப்பதெல்லாம் சர்வ சாதாரணம். ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி விவகாரம் உங்களுக்கு நினைவிருக்கலாம். நிதி மற்றும் அன்னிய நிதி முறைகேட்டில் ஈடுபட்ட அவருக்கு லண்டனிலிருந்து போர்ச்சுகல் செல்வதற்கு சுஷ்மா சுவராஜ் ‘மனிதநேய அடிப்படையில்’ உதவி செய்ததையும் நாம் மறக்க முடியாது. (பா.ஜ.க.-வினரின் மனிதநேயமும் அவர்களது வளர்ச்சி கோஷத்தைப் போலவே பணமுதலைகளுக்குரியது தான்)
பிசிசிஐ என்னதான் செய்கிறது என்றொரு கேள்வி எழலாம். பிசிசிஐ-குள்ளும் பல அரசியல் சூட்சுமங்கள் இருக்கின்றன. பெரும் பணம் செலவழித்து, சூழ்ச்சி செய்தே அங்கே பதவியைக் கைப்பற்ற முடியும். அப்படி இருக்கும்போது, அங்கே ஊழல் கரைபுரண்டோடுவதும், கீழ்த்தரமான செயல்கள் அரங்கேறுவதும் தொடர்ந்துகொண்டு தானே இருக்கும்!
நாட்டிற்கே கேடு விளைவித்துவரும் IPLஐ தடை செய்வதே சரியாக இருக்கும். சமூகப் பிரச்னைகள், அரசியல் முறைகேடுகள் உள்ளிட்டவற்றிலிருந்து மக்கள் கவனம் திசைத்திருப்படுகின்றனர். அங்கு முறைகேடுகள் நடப்பதால் மட்டுமே அதை முற்றாக தடை செய்யச் சொல்வது நியாயமா? என்றொரு கேள்வி எழலாம். மக்களுக்கு IPL ஆட்டத்தால் ஒரு நன்மையையும் விளையப்போவது இல்லை; கேடு விளைவதற்கு வாய்ப்புகள் ஏராளம் உள்ளன. அதனால், IPLஐ தடை செய்வது சரியான முடிவாக இருக்கும்.
தமிழகத்தில் நட்சத்திரக் கிரிக்கெட்டை நாம் எப்படி புறக்கணித்தோமா, அது போல தற்போது நடந்துகொண்டிருக்கும் IPLஐயும் புறக்கணிப்போம்.
கிரிக்கெட்டே வேண்டாம் என்று சொல்லவில்லை. கிரிக்கெட்டிற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை பரவலாக எல்லா விளையாட்டிற்கும் நாம் கொடுக்கவேண்டும். எல்லா விளையாட்டுகளும் சமூகம் தழுவியதாக இருக்கவேண்டும். வாழ்க்கைத் தேவைகளுக்கான உழைப்பில்தான் விளையாட்டுகள் யாவும் தோன்றின. ஆனால் இன்று விளையாட்டு, சமூகமயமாவதற்குப் பதில், மக்களின் வாழ்விலிருந்து அந்நியப்பட்டுக் கொண்டுள்ளதுதான் கவலைக்குரியது.