நேற்றைய தினம் வேலூரில் பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது காவல்துறை அடக்குமுறையை ஏவியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.
மக்கள் பிரச்னைகளை மாணவர்கள் பாராமுகமாக இருந்த காலம் மாறி கடந்த சில ஆண்டுகளாக ஈழப் பிரச்னை, மதுவிலக்கு, சல்லிக்கட்டு, நீட், விவசாயிகள் தற்கொலை, அனிதா படுகொலை என்று பல்வேறு பிரச்னைகளையும் எதிர்த்து மாணவ சமுதாயம் களம் இறங்க ஆரம்பித்துள்ளது. ஆரோக்கியமானதும், சமூக மாற்றத்திற்கான அச்சாணியாகவும் இருக்கக்கூடியது. நாளைய தேசத்தின் எதிர்காலம் வகுப்பறையில் நிர்ணயிக்கப்படுகிறது என்ற வார்த்தைகள் உண்மையாக மாறிவரும் காலச் சூழல் இது என்றால் யாரும் மறுக்க முடியாது.
ஆனால் இந்த மாற்றத்தைப் பொறுக்க முடியாமல் ஆளும் அரசுகள் தங்கள் அதிகாரங்களைக் கொண்டும், காவல்துறையின் அடக்குமுறையை ஏவியும் மட்டுப்படுத்த முயல்கின்றனர். சல்லிக்கட்டிற்காக அமைதியாக அறவழியில் போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்தியும், தண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைந்துபோகச் செய்தனர். அனிதா படுகொலையைக் கண்டித்து பெருவாரியாக போராட்டங்கள் நடத்திய மாணவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்தனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட மாணவி மீது தேச துரோக வழக்குப் பதிந்தனர். அந்த வரிசையில் தற்போது பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து போராடிய மாணவர்களை கைது செய்து இரவோடு இரவாக நீதிபதி முன்பு நிறுத்தியுள்ளனர். இவ்வளவு அவசரமாக வழக்குப் பதிவுசெய்ய அவர்கள் கொலைக் குற்றமா செய்தார்கள் என்று நீதிபதியே காவல்துறையினறைக் கண்டித்துள்ளார். நேற்று வேலூரில் போராடிய கல்லூரி மாணவர்கள் மீது தடியடி நடத்தி அவர்களைக் கலைந்துபோகச் செய்துள்ளனர்.
தங்கள் தவறுகளை திருத்திக்கொள்ள முயற்சிக்காமல் தவறுகளை சுட்டிக் காட்டுபவர்களை, எதிர்த்துப் போராடுபவர்களை அடக்கியாள நினைப்பது ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கு அழகல்ல.
அரசு தனது தவறுகளைத் திருத்திக் கொண்டு பேருந்துக் கட்டண உயர்வை திரும்பப் பெற்றுக் கொள்வதுடன், போராடிய மாணவர்கள் மீது அடக்குமுறையை ஏவியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். எதிர்காலத்தில் இத்தகைய தவறுகள் நடக்காமல் கவனமாக பார்த்துக் கொள்ளவேண்டும்