Sio ஹாதியாவுக்கு தன் ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது. 24 வயது நிரம்பிய அகிலா, தான் பிறந்த இந்துமதத்திலிருந்து வெளியேறி இஸ்லாத்தை ஏற்கிறார். ஹாதியா ஆகிறார். பிறகு தன் மனம் விரும்பும் ஒரு முஸ்லிம் ஆணை கைப்பிடிக்கிறார். இதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பெற்றோர் நீதிமன்றத்தை நாடுகிறார்கள். கேரள உயர்நீதிமன்றமோ இந்தத் திருமணத்தை செல்லாது என்று அறிவிக்கிறது. ஹாதியா முஸ்லிம் அடிப்படைவாதிகளால் மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கிறார் என்கிறது. இது இந்துத்துவவாதிகளிடம் இருந்து உருவான இஸ்லாமிய வெறுப்பு (இஸ்லாமோஃபோபியா) எந்த அளவு நிறுவனமயப்பட்டுள்ளது என்பதையே காட்டுகிறது.
இன்று கேரளத்திலும் ஏனைய மாநிலங்களிலும் இந்து மதத்திலிருந்து வேறு மதத்தைத் தழுவுபவர்கள் பல்வேறு வகையில் ஒடுக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் . குறிப்பாக இந்துப் பெண்கள் வேறு மதத்தைத் தழுவும்போதும், வேறு மத ஆடவர்களைத் திருமணம் செய்ய எத்தனிக்கும்போதும் ஆணாதிக்க பார்ப்பனிய இந்து மதம் தனது எல்லா அஸ்திரங்களையும் பிரயோகித்து அவர்களை ஒடுக்குகிறது. இவ்வாறு இந்துப் பெண் தன் சிந்தனைச் சுதந்திரத்தையும், தனது துணையைத் தேர்ந்தெடுக்கும் அடிப்படை உரிமையையும் ஆணாதிக்க பார்ப்பனியத்திடம் இழக்கிறார். வர்ணக் கலப்பை தடுப்பதுபோலவே மதக் கலப்பையும் தனது இருப்புக்கான அச்சுறுத்தலாக அடையாளம் கண்டு தடுக்கிறது பார்ப்பனியம். இதனால்தான் அர்னாப் கோசாமி லவ் ஜிஹாத் என்று ஊளையிடுகிறார். மதம் மாறுதல், விரும்பியவரை இணை ஏற்றல் ஆகிய அடிப்படை உரிமைகளைப் பிடிங்கி, ஹாதியாவை அவரது வீட்டுச் சிறையில் தள்ளியுள்ளது கேரள உயர்நீதிமன்றம்.
மேலும் இது ஒடுக்கப்படும் மதச் சிறுபான்மையினரான முஸ்லிம்களின் மீது எத்தகைய வெறுப்புணர்வு பரவியிருக்கிறது என்பதையே காட்டுகிறது. இத்தகைய நிலையில ‘நான் இந்துவாகப் பிறந்தேன். ஆனால் இந்துவாக சாகமாகமேட்டேன்’ என்ற அம்பேத்கரின் பொன்னான வாசகம் நினைவுகூரத்தக்கது. வயது வந்த பெண்ணின் மதச் சுதந்திரத்துக்கும், இணையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்துக்கும் நாம் ஆதரவளிக்கிறோம். இஸ்லாமிய வெறுப்பை (இஸ்லாமோஃபோபியாவை) பரப்பும் இந்துத்துவத்தையும் நீதிமன்றம், ஊடகம் போன்ற அதன் உறுப்புகளையும் கண்டிக்கிறோம்.