தற்போதைய தமிழக அரசில் எந்த துறையின் செயல்பாடு திருப்தியளிக்கும் வகையில் உள்ளது என்று கேட்டால் ஓரளவிற்கு விவரம் தெரிந்தவர்கள் சட்டென்று பள்ளிக் கல்வித்துறை என்று சொல்வார்கள்.
செங்கோட்டையன் அமைச்சராக இருப்பதைவிட உதயசந்திரன் அவர்கள் பள்ளிக் கல்வித்துறையில் பொறுப்பில் இருந்ததால் பல்வேறு மாற்றங்களை பள்ளிக் கல்வித்துறையிலும், பாடத்திட்டங்களிலும் உருவாக்கப்பட்டு வந்துள்ளன. ஏற்கனவே பல வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில் தற்போது 10,12 ம் வகுப்புகளுக்கான பாட புத்தகங்கள் உருவாக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. பாடத்தைத் தாண்டி புதுமையான வழிகளில் அறிவைப் பெருக்கிக் கொள்ளும் நடைமுறைகள் பாடப் புத்தகங்களில் புகுத்தப்பட்டுள்ளது. இணையம் வழியாக QR கோட் பயன்படுத்தி பாடங்களுக்கு தேவையான வீடியோக்களை தரவிறக்கம் செய்து மாணவர்கள் பயன்பெறும் வழிமுறைகள், போட்டித் தேர்வுகளுக்காக தயாராகும் வகையிலான பிரிவுகள் என்று பாடங்களை எளிமையாகவும், நவீனமாகவும் பயிற்றுவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த சூழலில்தான் உதயச் சந்திரன் துறைமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஒரு துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கும்போது இத்தகைய நடவடிக்கை எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அரசுக்கு தெரியாததல்ல. பாடப் புத்தகத்தை உருவாக்குபவர்களுக்கு சிறந்த ஊக்குவிப்பாளராக இருந்த உதயசந்திரன் நீக்கப்பட்டது பாடத்திட்ட குழுவில் இருப்பவர்களை மனதளவில் சோர்ந்து போகச் செய்துள்ளது.
தனியார் அச்சகம் ஒன்று அரசு பாடப் புத்தகங்களை அனுமதியின்றி அப்படியே பிரதி எடுத்து பயன்படுத்தியதை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததுடன், வழக்கு பதிய அரசுக்கு கோரிக்கை விடுத்ததால்தான் இந்த துறைமாற்ற நடவடிக்கை உதயசந்திரன் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னொரு முக்கிய நிகழ்வு நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அரசுப் பள்ளிகளுக்கு நிதி உதவி வழங்க முன்வருமாறு முன்னாள் மாணவர்களுக்கும், கல்விக் கொடையாளர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இன்னொரு அமைச்சர் டாஸ்மாக் வருமானத்தில் தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டும் வேறு வேறு சம்பவங்கள் என்றாலும் சொல்லும் செய்தி அரசுக் கல்வியை தொடர்ந்து நடத்த அரசிடம் நிதி இல்லை. ஒன்று மக்கள் வயிற்றில் அடித்து சாராய வருமானம் மூலம் பள்ளி நடத்துவோம் அல்லது நீங்களே உங்கள் சொந்தக்காசைக் கொடுத்தால் நடத்துகிறோம். என்ன மாதிரியான மனநிலை இது? சாராய வியாபாரத்தில் பள்ளி நடத்துகிறோம் என்பதையும், மக்கள் காசு கொடுத்தால் பள்ளி நடத்துவோம் என்பதையும் வெக்கமின்றி சொல்ல முடிகிறது இவர்களால்.
இப்போது சில கேள்விகள்:
நாம் எங்கெல்லாம் வரி செலுத்துகிறோமோ அதில் எல்லாம் Edu Cess வரி எதற்காக செலுத்துகிறோம்?
ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் கல்விக்கென்று ஒதுக்கும் தொகை என்ன ஆனது?
25% இட ஒதுக்கீட்டுக்காக தனியார் பள்ளிகளிடம் கொட்டிக்கொடுக்கும் பணத்தை அரசுப் பள்ளிகளுக்கு திருப்ப முடியாதா?
தரமான இலவச அரசுக் கல்வியை வழங்க வேண்டும் என்பது அபுல் கலாம் ஆசாத் போன்ற இந்திய கல்வித்துறை முன்னோடிகளின் கனவு. இருக்கின்ற கோவில்களை எல்லாம் படிக்கின்ற பள்ளிகளாக மாற்றுவோம் என்றான் பாரதி.
அரசுப் பள்ளிக் கல்வியை ஊக்குவிக்க இலவச சீருடை, காலணிகள், சத்துணவு, இன்னும் பல்வேறு வசதிகளை செய்து தந்தார்கள் மறைந்த முதல்வர்கள். ஆனால் இன்று பதவியில் இருப்பவர்கள் அரசுப் பள்ளிக் கல்வியையே குழிதோண்டி புதைப்பதை கொள்கை முடிவாகவே வைத்துள்ளனர். ஒருபுறம் நன்றாக செயல்படும் அதிகாரியை தனிப்பட்ட லாபத்துக்காக தூக்கி அடித்துவிட்டு அரசு என்பதையும் மறந்து மக்களிடம் பிச்சையெடுக்கின்றனர்.
நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலைகெட்ட மாந்தர்களை நினைக்கையில்..
– அபுல் ஹசன்