கல்வி நிலையங்கள் பிள்ளைகளின் இரண்டாம் வீடு எனவும் , ஆசிரியர்கள் இரண்டாம் பெற்றோர்கள் எனவும் கூறப்படுவது நிதர்சனமாக உண்மையாகும். ஏனெனில் பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களிடம் இருப்பதை விட கல்வி கற்கும் இடங்களில்தான் அதிக நேரம் செலவிடுகின்றனர். குறிப்பாக பெண் பிள்ளைகளை பெற்றோர்கள் நம்பி அனுப்பக்கூடிய இடமாக கல்வி நிலையங்கள் இருந்துவரும் நிலையில் அருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியர் நிர்மலா தேவியின் ஆடியோ தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
மதுரை அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை, அறிவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியையாக பணிபுரியும் நிர்மலா தேவி தனக்கு மேல் உள்ள அதிகாரிகளின் தவறான ஆசைக்கு ஒத்துழைத்து போகும்படியும் , அவ்வாறு செய்தால் மதிப்பெண் ரீதியாகவும் , பண ரீதியாகவும் உதவுவதாக சொல்லி கல்லூரியில் பயிலும் மாணவிகளிடம் பேசிய ஆடியோதான் பெண்கள் மீது கல்வி நிலையங்களில் நிகழ்த்தப்பட்டு வரும் குற்றங்கள் பற்றி இப்போது பேசப்பட காரணமாய் அமைந்துள்ளது .
உயர்கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ , மாணவிகள் மீது உடல் ரீதியாகவும் , உணர்வு நீதியாகவும் தொடர்ந்து தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு வருவது அனைவரும் அறிந்த இரகசியமாய் இருந்து வருகிறது. குறிப்பாக பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் ஆழ ஊன்றியிருக்கும் வேர்களாய் கல்வி நிலையங்களில் காணப்படுகிறது . நிர்மலா தேவி எனும் ஆசிரியையின் தவறை ஒற்றை நபரின் தவறாக எண்ணி கடந்துவிட முடியாது , ஏனெனில் வெளிவராத இன்னும் எத்துணை எத்துணை ஆடியோக்கள் இருக்கின்றன , எத்தனை மாணவர்கள் இது போன்று இன்னும் எந்தெந்த கல்வி நிலையங்களிலும் , பல்கலைக்கழகங்களிலும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது கேள்விக்குரிய விஷயமாகவே இருந்துவருகிறது. அதனால்தான் இது தனி நபரின் பிரச்சனையாக அல்லாமல் சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளின் அடையாளமாக இதனை காண வேண்டும் என வலியுறுத்தப்பட்ட காரணம் .
தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையும் , தமிழக கவர்னர் ஒய்வு பெற்ற IAS அதிகாரி சந்தானம், தலைமையில் இது விசாரிக்கப்படும் என்று கூறியதையும் வைத்துக் கொண்டு இந்நிகழ்வில் நீதி கிடைத்துவிடும் என அமைதி அடைந்துவிட முடியாது. ஏனெனில் அந்த மாணவிகள் தவறான செயலுக்காக அழைக்கப்பட்டதே கல்வித் துறையில் உயர் நிலையில் இருப்பவர்களுக்காகத்தான் என்பது நிர்மலா தேவியின் வார்த்தைகளில் தெளிவாக உள்ளது .
திருடன் கையிலே சாவி என்ற பழமொழிக்கேற்பகுற்றம் சாட்டப்பட்ட கல்வித்துறையில் உயர்நிலையில் உள்ள அதிகாரிகளிடமே இந்த குற்றத்திற்கான நீதியை எதிர்பார்ப்பது நிச்சயமாக இதில் நேரடியாகவும் , மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மாணவிகளுக்கும் இழைக்கப்பட கூடிய அநீதியாகும் .
கல்வி நிலையங்களில் பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் கொடுமையானது நிச்சயமாக பெண்களின் கல்வியை பாதிக்கக்கூடிய அபாயமான விஷயமாகும் . “பெண்களுக்கான கல்வி சமூகத்துக்கான கல்வி ” என்பது பெரியாரின் வார்த்தைகள் , நிச்சயமாக பெண்களின் கல்வியில் ஏற்படக்கூடிய பிரச்சனை அடுத்து வரக்கூடிய சமுதாயத்தின் பிரச்சனையேயாகும். சமூகத்தில் காணப்படக்கூடிய பிரச்சனைகளை அடையாளம் கண்டு அதனை வேரறுப்பது காலத்தின் தேவையாகும் . எனவே இப்பிரச்சனையில் தொடர்புடைய அனைத்து நபர்களையும் கண்டறிந்து அவர்களுக்கு தக்க தண்டனை வழங்குவதோடு , பெண்கள் கல்வி கற்பதற்கான நல்ல சூழலை ஏற்படுத்துவதே பெண்களுக்கு இந்த சமூகம் செய்யக்கூடிய ஆகச் சிறந்த நன்மையாக அமையும்.