இந்தியாவின் அலுவலகப் பூர்வமான தலைநகரம் புதுடில்லியாக இருக்கலாம். ஆனால் நிதர்சனத்தில் அதிகாரப்பூர்வமாக இந்திய அரசு நாக்பூரில் இருந்தே இயங்குகின்றது. கொள்கை உருவாக்கங்கள், அரசு முடிவுகள், அதிகாரப் பகிர்வுகள், உயர் பதவிகளுக்கான நியமனங்கள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் தலைமையின் ஒப்புதலுக்கு பிறகே முடிவு செய்யப்படுகின்றது. உண்மையில் நரேந்திர மோடி ஒரு முகமூடி மட்டுமே. அந்த முகமூடிக்கு உள்ளே இருக்கும் உண்மை முகம் RSSன் முகமே.
ஆர்.எஸ்.எஸ் உருவாக்கப்பட்டு நூறு வருடங்களை நெருங்கி வரும் சூழலில், சிறிது சிறிதாக இந்தியாவின் ஏகபோக அதிகாரம் அவர்களின் கைகளுக்குள் செல்வது போன்ற தோற்றம் மூன்று வருடங்களுக்கு முன்பு சிறு புள்ளியாக இருந்து உ.பி தேர்தல் வெற்றி மூலம் பூதாகரமாகி நிற்கின்றது. தற்போது 16 மாநிலங்களில் அவர்களது ஆட்சி பரந்து விரிந்து கிடக்கின்றது. அதிகார வெறி எவ்வளவு தலைக்கேறியிருந்தால் ஆட்சியமைக்க தகுதியே இல்லாத மணிப்பூர், கோவா போன்ற மாநிலங்களில் கூட ஆட்சியைக் கைப்பற்றி இருப்பார்கள். தமிழகத்திலும் புறவாசல் வழியாக ஆட்சியை நிர்ணயிக்கும் முயற்சிகளில் இறங்கியிருப்பது இந்தியாவைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற பேராசைத் திட்ட்த்தின் ஒரு அங்கமாகவே நம்மால் பார்க்க முடிகின்றது.
அதிகாரத்தைக் கைப்பற்றுவது ஒரு முறைமை என்றால் கல்விமுறை, இந்திய வரலாறு இவற்றை தங்களது செயல்திட்டத்திற்கு ஏற்ப மறுஆக்கம் செய்வது, தேச வளர்ச்சியில் மற்றவர்களது பங்களிப்பை அழித்து சிறு ஆணியைக் கூட நகர்த்தாத தங்கள் முன்னோடிகளை பிரதானப்படுத்துவது, அழிக்க முடியாதவர்களை தங்களைச் சார்ந்தவர்களாக பிம்பப்படுத்துவது என்று எல்லா வழிமுறைகளையும் பின்பற்றி எப்படியாவது தங்களை உத்தமர்கள் என்று உலகின் கண்களுக்கு காட்டிவிட பகீரத முயற்சிகளை எடுத்துவருகின்றனர்.
இந்திய வரலாற்றை புராணங்களின் அடிப்படையில் மாற்றி எழுதுவது RSSன் நூற்றாண்டு கால கனவுத் திட்டங்களில் ஒன்று., இதற்காக பல்வேறு குழுக்களையும், ஆராய்ச்சி துறைகளையும் ஏற்படுத்தி, இந்திய, உலக நூலகங்களில் இருந்து தகவல்களை திரட்டி வருகின்றனர். மூன்று வருடங்களுக்கு முன்பு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு NCERT புத்தகங்களை இணையத்திலிருந்து பலரும் பதிவிறக்கம் செய்யத் துவங்கிவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காரணம் வரலாற்றைத் திரித்து எழுதும் முயற்சியின் ஒரு அம்சமாக பாட புத்தகங்களில் உள்ள வரலாற்றுத் தரவுகளை மாற்றி எழுதப் போவதாக தகவல்கள் பரவியதே.
இந்திய வரலாற்றைத் திரித்து தங்களுக்கு ஏற்ப மறு ஆக்கம் செய்யும் பாஜக, சங்க பரிவாரங்களின் முயற்சி பள்ளிப் பாடத்திட்டத்தில் துவங்கிவிட்டதாகவே கல்வியாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மத்திய அரசு பதவியேற்றதும் மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, பண்டைய இந்து சாத்திரங்கள் பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று திருவாய் மொழிகின்றார். அவர் சொன்ன அடுத்த சில தினங்களில் குஜராத் ஆர்.எஸ்.எஸ். பெருந்தலைகளில் ஒருவரான தீனநாத் பத்ரா ஸ்மிருதியின் அலுவலகத்திற்கு ‘விழுமங்களையும் தேசியவாதத்தையும்’ மாணவர்களிடையே விதைக்கும் வகையில் பள்ளிக் கல்வித் திட்டம் மாற்றப்பட வேண்டும் என்று முன்மொழிவுகளை அனுப்புகின்றார். அத்தோடு இந்திய தேசியத்தை அடிப்படையாகக் கொண்ட நவீனத்தையும், தேச பக்தியையும் வளர்க்கும் வகையில் NCERT புத்தகங்கள் திருத்தியமைக்கப்பட வேண்டும் என்று பிரதமரிடம் முறையிடப் போவதாகக் கூறுகின்றார்.
இந்த தீனநாத் பத்ரா, வாஜ்பாய் அரசில் மனித வளத் துறை அமைச்சராக இருந்த முரளி மனோஹர் ஜோஷியால் கல்வித்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டு, மாநில அரசுகளால் நிராகரிக்கப்பட்ட மாற்றங்களின் முன்னோடியும் கூட. உபநிஷதங்கள் மற்றும் வேதங்களைப் போன்ற புராதன இலக்கிய படைப்புகளை ஆய்வு செய்வதற்கும், விஞ்ஞானம், கணிதம் மற்றும் தத்துவ துறைகளில் இந்து மதத்தின் பங்களிப்புகளை சிறப்பித்துக் காட்டும் பொருத்தமான நூல்களை அடையாளம் காண்பிக்கும் ஒரு குழுவையும் ஸ்மிருதி இராணி பதவி ஏற்றதும் அமைத்துள்ளார். இந்து மத பொற்காலத்தை உள்ளடக்கிய பாடத்திட்டங்களை உருவாக்குமாறும் அதிகாரிகள் பணிக்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இத்தோடு நில்லாமல் தரமான கல்வியை நாட்டின் குடிமக்களுக்கு வழங்க வேண்டும் என்ற போர்வையில் TSR சுப்ரமணியன் குழுவை அமைத்து புதிய கல்விக்கொள்கையினை உருவாக்கியுள்ளனர். ஆனால் உள்ளே உள்ளது அத்தனையும் காவிக் குப்பை. கல்வியில் மாநிலங்களுக்கு உள்ள உரிமையை மறுத்தல், குலக்கல்வி முறையை ஊக்குவித்தல், வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை இந்தியாவில் கடைவிரிக்கச் செய்து கொஞ்ச நஞ்சமுள்ள அரசுக் கல்வித் தரத்தைக் காயடித்தல் இவையே புதிய கல்விக் கொள்கையின் உன்னதமான நோக்கங்கள். நாட்டின் பல பகுதிகளில் குறிப்பாக வட மாநிலங்களில் அடிப்படை உள் கட்டமைப்பு, போதுமான ஆசிரியர் எண்ணிக்கை, தரமான கல்விச் சூழல் இல்லை. படிப்பை பாதியில் நிறுத்தும் விகிதாச்சாரம் குறைந்தபாடில்லை. ஆனால் இவற்றை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் பொறுப்பேற்றவுடன் கல்வித்துறையை இந்துமயமாக்க வெண்டும் என்று இவ்வளவு வெளிப்படையாக ஒரு அமைச்சரே சொல்கிறார் என்றால் எந்த அளவிற்கு அவர்களது இரத்தநாளங்களில் காவிமயமாக்கும் வெறி புரையோடியிருக்கின்றது என்பதை விளங்கிக் கொள்ள முடிகின்றது.
உயர்கல்வித்துறையில் உலக அளவில் இந்தியாவின் எந்த கல்வி நிறுவனமும் முக்கியத்துவம் பெறுவதில்லை. ஆராய்ச்சி , புத்துருவாக்கங்களில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதே அதற்குக் காரணம். ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் செயல்களைச் செய்ய வேண்டிய அரசு, ஆராய்ச்சி மாணவர்களின் உயிரை எடுப்பதில் குறியாக செயல்படுகின்றது. தேசிய பல்கலைக் கழகங்களில் பயிலும் சிறுபான்மை, ஒடுக்கப்பட்ட மாணவர்களை செயல்படவிடாமல் பாஜகவின் மாணவ அமைப்பான ABVP குண்டர்களை ஏவி தடுப்பதுடன், போராட்டங்களில் ஈடுபடும் மாணவர்களை ஒடுக்க மதிப்பெண் முறையிலும் கைவத்து சர்வாதிகாரத்தை வெளிப்படுத்துகின்றனர். காவி எதேச்சதிகாரத்திற்கு ரோஹித் வெமுலா, முத்துகிருஷ்ணன் என்ற இரண்டு தலித் ஆராய்ச்சி மாணவர்கள் இதுவரை இரையாகியுள்ளனர். நஜீப் என்ற முஸ்லிம் மாணவன் எங்கே சென்றார் என்ற கேள்விக்கு இதுவரை விடையில்லை. கன்ஹையா குமார், உமர் காலித் என்ற இடதுசாரி மாணவர்கள் வழக்குகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். ABVPயை எதிர்த்து குரல் கொடுத்ததற்காக கற்பழிப்பு மிரட்டலுக்கு ஆளானார் குர்மேகர் கவுர் என்ற மாணவி. இந்த கொடுமைகளுக்கு எல்லாம் அரசு, காவல்துறை, பல்கலைக் கழக நிர்வாகம் என்று அனைவரும் உடந்தையாக இருப்பதே கொடுமைகளின் உச்சம்.
கல்வித்துறையில் மாநில அரசுகளுக்கு பல்வேறு உரிமைகள் அரசியலமைப்பு சட்டத்தால் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அந்த உரிமைகளைப் பறிப்பதில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றது. மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு இல்லை என்ற தமிழக அரசின் உரிமையினைப் பறித்து தேசிய தகுதி,நுழைவுத் தேர்வு – NEET என்ற சர்வாதிகார நடைமுறையினை தமிழகம் போன்ற மாநிலங்கள் மீது திணித்து, மருத்துவப் படிப்பை மாநிலவழிக் கல்வியில் பயின்ற மாணவர்களுக்கு எட்டாக் கனியாக ஆக்க முயற்சிக்கின்றது. மத்திய பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களையும், பிற மாநில மாணவர்களையும் தமிழகத்தில் கல்வி பயிலச் செய்வதன் மூலம் கிராமப்புற் தமிழக மாணவர்களின் உரிமை மறுக்கப்படுகின்றது. அதோடு இளநிலை மருத்துவம் பயின்று ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு முதுநிலை படிப்பில் வழங்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீட்டையும் ரத்து செய்து தன்னிச்சையாக அறிவித்து கிராமப் புற மக்கள் தரமான மருத்துவம் பெறுவதிலும் முட்டுக்கட்டை போடுகின்றது ஆளும் பாஜக அரசு.
இன்று பல்கலைக்கழகங்கள், கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்கள் இவற்றின் தலைமைப் பொறுப்பிற்கு வர வேண்டும் என்றால் கல்வித் தகுதி, அனுபவம் இவற்றைத் தாண்டி நாக்பூருடன் நெருக்கம் என்ற தகுதி மிகவும் அவசியமானது. ஹைதராபாத் பல்கலைக் கழகம், ஜேன்யூ பல்கலைக் கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், இந்திய அறிவியல் வரலாற்றுக் கழகம் என்று முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகளை இப்போது அலங்கரித்துக் கொண்டிருப்பவர்கள் RSS முக்கியஸ்தர்கள்தான். அதாவது தேசத்தை நிர்ணயிக்கும் முடிவுகளை எடுக்கும் இடங்களில் எல்லாம் தங்களைச் சார்ந்தவர்கள் இருந்தால் தான் தங்கள் சர்வாதிகாரம் எடுபட முடியும் என்பதை உணர்ந்து அதற்கான வேலைகளை கனகச்சிதமாக செய்துள்ளனர்.
இப்படி பள்ளிக்கல்வியில் ஆரம்பித்து, உயர்கல்வி, மருத்துவம், வரலாறு, தத்துவம், அரசியல், அதிகார வர்க்கம் என்று அத்தனை துறைகளையும் தனது ஆக்டோபஸ் கரங்களால் கபளிகரம் செய்ய வீரியமாக செயல்படுகின்றது நாக்பூரில் இருந்து இயங்கும் ஆர்.எஸ்.எஸ் அரசு. எதிரி யார் என்று மட்டும் சொல்லிக் கொடுப்பதுடன் நமது கடமை ஓய்ந்துவிடுவதில்லை. அவர்களின் திட்டத்தைப் பற்றிய அறிவிருந்தால் தான் அதனை முறியடிக்கும் மாற்று திட்டத்தை சிந்தித்து, செயல்படுத்த நாமும், எதிர்கால சந்ததியும் தயாராக முடியும்.
அறியச் செய்வோம்..தயார்படுத்துவோம்..முறியடிப்போம்..
-R. அபுல் ஹசன்.