“வேற்றுமையில் ஒற்றுமை” என்ற பன்மைத்துவ தத்துவத்தை தாங்கி நிற்கும் நம் இந்தியா தேசத்தில், பல மொழிகள், இனங்கள், கலாச்சாரங்கள் ஆகியவை ஒன்றுடன் ஒன்று இணக்கத்துடன் பிரிக்க இயலாத் தன்மையில் கம்பீரத்தன்மையோடு விளங்குகிறது. இவ்வேளையில் கடந்த மூன்றாண்டில் அரங்கேறியுள்ள மக்களுக்கு எதிரான செயல்பாடுகளும், அக்கிரமங்களும் நம் இந்தியாவின் பன்மைத்துவ தூணை நிலைக்குலைய வைத்துள்ளது.
மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாய் திகழ்ந்த தேசம் இப்பொழுது வாழத் தகுதியற்ற தேசம் எனும் ‘பரிணாம வளர்ச்சியை’ அடைந்துள்ளது. இதன் முழு பெருமையும் ஆளும் பா.ஜா.க-வையே சேரும் என்பதில் ஐயமில்லை. மேலும் இந்த அரசு இதன் ஒரு பகுதியாக ஏழைகள் இல்லா இந்தியாவை உருவாக்க ஏழைகளை அழிக்கும் திட்டங்களைக் கையில் எடுத்திருக்கின்றது, தன் முட்டாள்த்தனமான அதிரடி அறிவிப்புகளால்.
இந்தியா எனும் தேசம் முதலில் பல தேசிய இனங்களின் ஒருங்கிணைப்பே என்பதில் மக்களிடம் தெளிவு ஏற்பட வேண்டும். ஆகவே ஒவ்வொரு மாநிலங்களின் தேவைக்கேற்ப, மக்களின் வாழ்வாதார நலனுக்கேற்ப, புவியியல் நிலைமைக்கேற்ப செயல்படும் மாநில சுயாட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அதில் மத்திய அரசு குறுக்கிட்டால் அபாயகரமான விளைவுகளைச் சந்திக்கவேண்டியிருக்கும். சமீபத்திய சிறு உதாரணமே மாணவி அனிதாவின் நிறுவனக் கொலை.
நீட் எனும் மருத்துவ நுழைவுத்தேர்வைப் புகுத்தி மாநில கல்விமுறையை உதாசீனப்படுத்தி, ஏழை மாணவர்களின் உணர்வுகளையும் உழைப்பையும் மதிக்காமல் இருந்ததன் விளைவு, இன்று அனிதா என்ற ஏழை மாணவி நம்மிடம் இல்லை. ஆம், ஏழைகள் இல்லா இந்தியா எனும் திட்டத்தில் வெற்றிதான் இது.
ஒருபுறம் ஏழை ஒழிப்பு , மறுபுறம் கார்பரேட் வளர்ப்பு என இந்த ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். இயற்கையை அழிப்பவன் போற்றப்படுகிறான், அதைக் காக்க போராடுபவனோ தேசத்துரோகி என தூற்றப்படுகிறான். இந்த அவலங்களுக்கு எதிராக அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுபவன் மீது பாய்கிறது குண்டர் சட்டங்கள், ஜனாநாயகப் படுகொலைகள். எங்கே செல்கிறது இந்த தேசம்?
கல்வி நிலையங்கள் எல்லாம் காவிமயம், ஏழைகள் சாப்பிடும் ‘ஆடம்பரப் பொருளான’ கடலை மிட்டாய், சானிடரி நேப்கின் போன்றவற்றுக்கு GST வரி, ‘அன்றாட தேவையான’ மதுவுக்கு இல்லையாம்.
DEMONITISATION மூலம் ஏழைகள் துண்டாடப்படுவது ஒருபுறம், மறுபுறம் மாட்டிறைச்சி சாப்பிட்டான் என்பதற்காக அடித்தே கொல்லப்படுகின்றான் ஒன்றும் அறியாத சாமானிய குடிமகன். ஒவ்வொரு நாளும் சிறுபான்மையினர் பயத்துடனேயே வாழ்க்கையைக் கடக்கின்ற அவலம். கல்வி நிலையங்களில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் மீது தொடர்ந்து புனையப்படும் பொய் வழக்குகள், திட்டமிடப்பட்ட படுகொலைகள் என பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது. இவையெல்லாம் இருக்க, மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை சுரண்டிவிட்டு எல்லையில் ராணுவ வீரர்களைப் பாருங்கள், பாடம் படியுங்கள் என்று போதனை செய்யப்படுகிறது.
குறைந்தபட்சம் இருப்புத்தொகை 5000 என்று நிர்ணயித்து சாமான்ய மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கின்றது இந்த அரசு. வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லை என்று கூறி இந்த வருடத்தில் மட்டும் சுமார் 236 கோடி திருடப்பட்டுள்ளது. ஆனால் மல்லையா போன்ற பெருமுதலாளிகளுக்கு கடனை தள்ளுபடி செய்து மேலும் கடன் கொடுக்கத் தயங்காது இந்த கார்பரேட் அரசு.
2018 ஜனவரியில் மேலும் ஒரு புதிய இந்தியா பிறக்க உள்ளது என்று கூறி ஓர் அதிர்ச்சித் தகவலை தந்துள்ளார் நம் பறக்கும் பிரதமர்.
உத்தரப்பிரதேச மருத்துவமனையில் ஏழைக் குழந்தைகள் சுவாசிக்க ஆக்சிஜன் இல்லை, ஆக்சிஜனுக்கு ஏற்பாடு செய்தவருக்கோ ஏழைகள் காப்பாற்ற முற்பட்டதற்காக பணி நீக்கம். குற்றவாளியான பாபா சாமியாருக்கு நிலம் இலவசம், GST இல்லையாம், தெய்வத்தின் பெயரைக்கொண்டு காட்டை அளித்தவன் நதிகளை மிஸ்டுகால்களாலேயே இணைக்க உள்ளான், இதையும் வரவேற்கிறது இந்த தெர்மாகோல் அரசு.
தேசிய மொழி என இந்தியைச் திணித்து மாநிலங்களின் மொழிக்கொள்கையில் தலையிடுகிறது மத்திய அரசு. தூய்மை இந்தியா, புதிய இந்தியா எனும் வார்த்தை ஜாலங்களைப் பயன்படுத்தி ஏழைகளின் சிறுகுறு தொழிலை பெருமுதலாளிகளுக்குத் தாரை வார்க்கிறார்கள். தில்லியில் போராடும் நம் விவசாயிகளைப் பார்க்க நேரமில்லை ஆனால் நடிகைகளையும், நக்கிப்பிழைப்பு நடத்தும் சில அரசியல் வியாதிகளையும் முன் அனுமதியே இல்லாமல் சந்திப்பாராம் நம் சுற்றுலாப் பிரதமர். ஆம் இனியும் தேடிக்கொண்டிருக்கிறார் தான் போகாத நாடு ஏதேனும் உலக வரைப்படத்தில் உள்ளதா என்று..!
நம் விவசாயிகளின் நிலத்தை சூறையாடுகிறார்கள், மாட்டை காக்கிறோம் என்ற பெயரால் எல்லா பண்பாடுகளையும் அழிக்கும் சட்டங்கள், போராடுபவர்கள் மீது தீவிரவாதிகள் என்ற முத்திரை, விழிப்புணர்வு பிரசுரம் விநியோகித்த மாணவி மீது குண்டர் சட்டம் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் இவர்களின் சாதனையை. ஹைட்ரோகார்பன் எனும் திட்டத்தை அமல்படுத்தியதன் மூலமாக விவசாய நிலங்களை மலடாக்கும் கொடுமையும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
மலட்டு விதையைத்தான் உருவாக்குகிறார்கள் என்றால் மலட்டு நிலங்களை உருவாக்குவதிலும் கைத்தேர்ந்தவர்கலாக வெற்றியும் கண்டுவிட்டார்கள். இதையெல்லாம் ஆதரிக்கின்றது கையாளாத இன்றைய எடப்பாடி (எடுபுடி) அரசு. தமிழகத்தின் வளங்கள் பாழ்படுத்தப்படுகிறதே என எதிர்த்துக் கேட்டால் இந்தியாவிற்காக தமிழகத்தை தியாகம் செய்யுங்கள் என கேளிக்கையாகப் பதிலளிக்கிறார் மாநிலங்களவை உறுப்பினர்.
உணவகத்தில் பசியைப் போக்க பாதி வயிறு நிரப்பும் ஏழைகளின் உணவில் வரி , ஏன் என கேட்டால் , வீட்டில் சமைத்துச் சாப்பிடுங்கள் என்று கிண்டலான பதில். இப்படிச் சொன்னதற்குப் பதவி உயர்வும் அளித்திருக்கிறது இந்த பாசிச அரசு. என்றைக்குமே சிந்திக்கக் கூடாது என்பதில் துல்லியமாகச் செயல்படும் இந்த அரசு அதன் மையக் கருவியை கல்வி முறையில் வைத்திருக்கிறது என்பதுதான் கவனிக்கத்தக்கது. எதிர்வரும் கல்வி ஆண்டில் CBSE பாடதிட்டத்தில் DEMONITISATION, GST, முத்தலாக் பற்றி இடம் பெறபோகிறது என தேசிய கல்வி வாரியம் சொல்வது நினைவுக்கு வருகிறது.
நாம் மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்தை நோக்கி தள்ளுகிறது இந்த அரசுகள். அன்று இந்தியா எல்லோருக்கும் என்று ஆங்கிலேயனை எதிர்த்து போராடினோம், எதிர்த்த பலரையும் சிறையில் இட்டார்கள். அடித்து ஒழித்தார்கள். பகத் சிங்க் போன்றோர்களை தீவிரவாதி என்று அடையாளப்படுதினார்கள். அன்று நடந்தது போல்தான் இன்றும் எதிர்த்தவர்கள் மீது பாயும் குண்டர் சட்டங்கள், கொலைகள், தீவிரவாத முத்திரைகள் என அருகேறிக்கொண்டுள்ளன. இந்த அரசாங்கங்களின் அட்டுழியங்களின் ‘சிலவற்றை’ மட்டும் இப்படி தொகுத்துப் பார்க்கையில் அழுத்தமாக மனத்தில் ஒரு கேள்வி எழுகிறது ‘இது மக்களுக்கான அரசுதானா?’
-நவாஸ்.