காஷ்மீர் காஷ்மீர் இதுதான் காஷ்மீர்
நிலவும் வெடிக்கும் நிலம்தான் காஷ்மீர்..
கனவும் எரியும் களம்தான் காஷ்மீர்..
தொப்பி ஜிப்பாவுடன் ஒரு இளைஞர் நடந்து வருகிறார்.. அங்கிருக்கும் சீருடை அணிந்த சில இராணுவ வீரர்கள் அந்த இளைஞரை அழைக்கிறார்கள். யார் நீ என்று வீரர்கள் கேட்கும்போது ஓட்டு போட்டுவிட்டு வீட்டுக்கு போவதாக சொல்கிறான் அந்த இளைஞன். எப்டி நம்புறது, கல்லெறியுற கூட்டத்துல நீயும் ஒருத்தன்தானே என்று வீரர்கள் அந்த இளைஞனை சுற்றி வளைக்கின்றனர். சார் உண்மையிலேயே ஓட்டு போட்டுவிட்டு வருகிறேன், விரல்ல மை இருக்கு பாருங்க, அம்மா சால்வை செஞ்சுட்டு காத்துக்கிட்டிருப்பாங்க, நான் போய் அத விக்கணும் என்று தன்னை நிரூபிக்க துடிக்கும் இளைஞனை சட்டை செய்யாமல் அவனை இழுத்து கைகளை சங்கிலியால் பிணைத்து இழுத்து செல்கின்றனர்.
ஒரு வீடு, அந்த வீட்டிற்குள் சில பெண்கள் சால்வை நெய்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குள் உரையாடல் நிகழ்கிறது. அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்பட்டு வந்த நிலையில் வன்முறையை பிரயோகப்படுத்தி கூட்டத்தை கலைத்தும், பெல்லட் குண்டுகளை பயன்படுத்தி குருடாகவும், முடமாகவும் ஆக்கிய இராணுவத்தால்தான் மக்கள் கல்லெறிய ஆரம்பித்தனர் என்று உரையாடல் தொடர்ந்து கொண்டிருந்த போது கதவு வேகமாக தட்டப்படுகிறது. இராணுவ வீரராக இருக்குமோ என்று பெண்கள் பதறுகிறார்கள், தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்..கதவைத் திறந்ததும் ஒரு இளைஞர் ஓடி வந்து உங்க மகனை இராணுவ ஜீப்பில் கட்டி வச்சு ஊர் ஊரா கூட்டிட்டு போறாங்க, கல்லெடுத்து அடிக்கிறவன்லாம் இப்ப அடிங்கடா, இவன் மேல படாம அடிங்கடான்னு அறிவிச்சுட்டே போறாங்க என்று சொல்லவும் அந்த தாய் பதறி மகனைத் தேடி ஓடுகிறார்.
மகன் கைகள் பிணைக்கப்பட்டு முட்டிக்கால் போட்டு அமர்ந்திருக்கிறார். இராணுவ வீரர்களிடம் யாருமே ஓட்டுப் போட வராதப்போ என் மகன் மட்டும் வந்தானே, அவன இப்படி பண்ணிட்டீங்களே, பையன வெளில அனுப்பாதன்னு மத்தவங்க சொன்னப்போ சீருடை அணிந்த நீங்க பாதுகாப்பீங்கன்னு அனுப்பி வச்சேனே, எங்கள பாதுகாக்கத்தானே உங்கள இங்க அனுப்பிருக்காங்க, எங்களை பாதுகாக்க முடியாத நீங்க எப்டி தேசத்த பாதுகாப்பீங்க என்று இராணுவ வீரர்களிடமும் பார்வையாளர்களிடமும் அந்த தாய் கேட்கிறார்.
ஒவ்வொரு காட்சியின் இறுதியிலும் இதுதான் காஷ்மீர், இதுதான் காஷ்மீர் என்று சோக கீதம் இசைக்கப்படுகிறது.
மகனை வீட்டிற்கு அழைத்து வந்ததும் அவன் தாயிடம் எப்பவும் நீ இந்தியனா காஷ்மீரியான்னு கேட்டா முதலில் இந்தியன் அப்பறம்தான் காஷ்மீரின்னு சொல்ல சொல்வியேம்மா இப்பவும் அதத்தான் சொல்லச் சொல்வியா என்று ஐந்து முறை மீண்டும் மீண்டும் சத்தமாகவும், மெதுவாகவும் மாறி மாறி கேட்கிறார்.நாடகத்தைப் பார்க்கும் நம்மிடத்தில் பதிலை விட்டுவிட்டு நாடகத்தை முடிக்கிறார்கள்.
நான் பார்த்த ஒன்பது நிமிடத்தில் வந்த காட்சிகளின் சுருக்கம் இது. நடிகை ரோகினி தாயாக நடித்திருக்கும் இதுதான் காஷ்மீர் என்ற நாடகத்தில் இடம்பெற்றிருப்பவை இந்த காட்சிகள். டெல்லிக்கு கீழே இறங்கிவிட்டால் காஷ்மீரைப் பற்றிய உண்மையான தகவல்கள் கிடைப்பது அரிது. அவர்களை தீவிரவாதிகளாகவும், கல்லெறிபவர்களாகவும், பிரிவினை பேசுபவர்களாகவும், இந்தியாவிற்கு எதிரானவர்களாகவுமே சித்தரிக்கப்பட்டு வந்துள்ளது. அதை மாற்றி அவர்களைப் பற்றிய உண்மையான நிலவரத்தை தமிழிலேயே சொல்லியிருப்பதன் மூலம் காஷ்மீரிகளின் துயரத்தை நமக்கு கடத்தியிருக்கிறார்கள். இறுதிக் காட்சியில் கேட்கப்படும் கேள்வி நிச்சயம் பார்வையாளர்களை சிந்திக்கத் தூண்டியிருக்கும். இடையிடையே கேட்கப்படும் பிற கேள்விகளும் இராணுவத்தின் அத்துமீறல், அரச பயங்கரவாதம், அந்த மக்களின் ப்ரச்னைகளை தீர்க்காமலே அவர்களின் விருப்பமின்றி தேர்தல் நடத்துவது அரசு நடத்துவது போன்றவற்றை சொல்லியிருக்கிறார்கள்.
அனைவரும் பார்க்க வேண்டிய நாடகம்