அணு ஆயுதங்களையோ அணுக் குண்டுகளையோ பயன்படுத்தி ஒரு சமூகத்தை ஒரேயடியாக அழிக்கலாம். இது தீவிரவாதம். ஆனால் இன்றைய நாட்களில் ஒரு தலைமுறையை அழித்தொழிக்க அணு ஆயுதமும் தேவையில்லை, அணுக் குண்டும் தேவையில்லை. மாறாக, கற்றுக்கொடுப்பதிலும் கற்றுக்கொள்வதிலும் மோசடி செய்தால் போதும். ஒரு தலைமுறையை மட்டுமல்ல, சமூகத்தையே அழித்தொழிக்கலாம்.
ஆம். உடலில் உயிர் இருக்கும். ஆனால் உயிரோட்டம் இருக்காது. இது தீவிரவாதத்திலும் பெரிய தீவிரவாதம். ஆனால், இதன் விளைவு சட்டெனப் புரிபடுவதில்லை. மோசடி செய்து மருத்துவர் ஆகும் ஒருவரிடம் வரும் நோயாளி மரணத்தைத் தழுவுவார். மோசடி செய்து பொறியாளர் ஆகும் ஒருவர் கட்டும் கட்டிடம் இடிந்து விழும். மோசடி செய்து பொருளாதார நிபுணர் ஆகும் ஒருவரால் பொருளாதார நெருக்கடியும் நஷ்டமும் ஏற்படும். மோசடி செய்து மதபோதகர் ஆகும் போலி அறிஞர் மூலம் மனிதம் மரித்துப்போகும். மோசடி செய்து நீதிபதி ஆகும் ஒருவர் மூலம் நீதி பீதியடையும். மோசடி செய்து ஆசிரியர் ஆகும் ஒருவர் மூலம் எதிர்கால சந்ததிகளிடம் அறியாமை இருள் பரவும்.
கற்றுக்கொள்வதில் ஏற்படும் வீழ்ச்சி.. தலைமுறையின் வீழ்ச்சி!
கற்றுக்கொடுப்பதில் ஏற்படும் வீழ்ச்சி.. சமூகத்தின் வீழ்ச்சி…!
அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!
நூஹ் மஹ்ழரி