கோவையில் திவிக தோழர் ஃபாரூக் கொல்லப்பட்டிருப்பதைக் கண்டித்து பிரதான இஸ்லாமியக் கட்சிகள் அனைத்தும் அறிக்கை வெளியிட்டிருக்கின்றன. தனிப்பட்ட முறையிலும் முஸ்லிம்கள் அந்தச் செயலைக் கண்டித்து சமூக வலைத்தளங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் பேசிவருகின்றனர். மனிதநேயமுள்ள அனைவரும் கரம்கோர்த்து இதுபோன்ற கொடூரச் செயல்களை எதிர்க்கவேண்டியது அவசியம்.
இந்த சந்தர்பத்தில் நாம் கவனம் கொள்ளத்தக்க விஷயங்கள் சில இருக்கின்றன. பொதுவாக, முஸ்லிம் அடிப்படைவாதத்தின் பெயரால் வன்செயல்கள் நடந்தால், அந்தச் செயலை நிகழ்த்தியவர்களோடு அது முடிந்துவிடுவதில்லை. ஆம், அந்தக் குற்றத்தை குற்றவாளி மட்டும் சுமப்பதில்லை. மாறாக, அந்தக் குற்றத்திற்கு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் பதில் சொல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்படுத்தப்படுகிறது. இப்போதும் அதுதான் நடந்துகொண்டுள்ளது. இதுபோன்ற தருணங்களில் ஒரு வகையான பதட்டம் அந்தச் சமூகத்தை ஆட்கொண்டு விடும். உண்மையில், இது மற்ற சமூகங்கள் எதிர்கொள்ளாத ஒரு சிக்கல். இதைப் பார்கையில், முஸ்லிம் அடையாளத்தோடு வாழ்வதே இங்கு ஒரு சவாலாக மாறுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது.
ஃபாரூக் படுகொலை குறித்து முகநூலில் முஸ்லிம்களின் பதிவுகள் எப்படி இருக்கிறதென கவனித்துப் பாருங்கள். அவர்கள் பெரும்பாலும் ஃபாரூக் கொல்லப்பட்டதைக் கண்டிப்பது மட்டுமல்லாமல், தங்களையும் தங்கள் சமயத்தையும் குற்றமற்றதென்று நிரூபிக்கும் வகையில் பதிவிடுவார்கள். “ஒருவனைக் கொன்றவன் ஒட்டுமொத்த மனிதகுலத்தையே கொல்வதற்கு ஒப்பாவான்”, “இஸ்லாத்தில் எந்தவொரு நிர்பந்தமும் இல்லை” போன்ற குர்ஆன் வசனங்களையெல்லாம் எடுத்துரைக்க வேண்டிய அழுத்தம் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
சுவாதி கொலை விவகாரத்தில் பிலால் மாலிக் எனும் பெயரை ஒய்.ஜி. மகேந்திரன் போன்றோர் விஷமத்தனமாக உலவவிட்டபோதும், இதேபோன்ற ஒரு பதட்ட நிலை இங்கே உண்டானது. சுவாதி கொலையும் ஃபாரூக் கொலையும் வெவ்வேறு காரணங்களைக் கொண்டுள்ளவைதாம். ஆனால் இங்கே நாம் சுட்டிக்காட்ட நினைப்பது, குற்றவாளி முஸ்லிமாக இருந்தால், அதற்கு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் பொறுப்பேற்க வேண்டியதிருக்கிறது என்பதே. இது முஸ்லிம்கள் மீதான ஓர் உளவியல் தாக்குதல்.
பெரியார் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?
ஃபாரூக் கொலை செய்யப்பட்டதிலிருந்து முகநூலில் தொடங்கிய விவாதங்கள் பல நாள்களாக ஓடிக்கொண்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை ஆரோக்கியமானதாய் இல்லை. முஸ்லிம்களுக்கும் திராவிடவாதிகள் அல்லது தமிழ்த் தேசியவாதிகள் எனச் சொல்லிக் கொள்வோருக்கும் இடையே நடக்கும் கருத்து மோதல்கள் அதிருப்தி அளிப்பதாக உள்ளன.
பன்னெடுங்காலமாக பெரியாரிஸ்டுகளும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து களமாடிய மண் இது. பிராமணீயத்தின் சாதிய ஏற்றத்தாழ்வு முஸ்லிம் சமூகத்தில் இல்லை என்பதால் இந்த உறவு மிகவும் நெருக்கமானதாய் இருந்து வந்திருக்கிறது. ஒப்பீட்டளவில், மற்ற மதங்களை விடவும் இஸ்லாம்தான் ஒடுக்கப்பட்டவர்களை சாதியின் பிடியிலிருந்து விடுத்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. ‘இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து’ என பெரியார் புத்தகம் வெளியிட்டதையும், ‘திராவிடத்திற்கு அரபியில் இஸ்லாம் என்று பெயர்’ என்று சொன்னதையெல்லாம் இந்தப் பின்னணியிலிருந்தே நாம் பார்க்கவேண்டும்.
‘எல்லா மதங்களும் ஒழியவேண்டும் என்பதுதான் எனது எண்ணம். ஆனால் அதுவரை ஏதாவது ஒரு மதம் இருக்கக்கூடுமானால் அது இஸ்லாமாகத்தான் இருக்கவேண்டும்’ என்றுகூட பெரியார் கூறியிருக்கிறார். அதே சமயம் முஸ்லிம்கள் நடத்தும் கூட்டங்களிலேயே இஸ்லாம் குறித்து அவர் விமர்சிக்கவும் தயங்கியதில்லை. இவற்றை ஏன் இப்போது நினைவுபடுத்துகிறேன் என்பதை நீங்களே புரிந்துகொண்டிருப்பீர்கள்.
ஃபாரூக் கொலையைத் தொடர்ந்து முகநூலில் இஸ்லாமா..பெரியாரியமா..? ஆத்திகமா.. நாத்திகமா?? கடவுள் உண்டா? இல்லையா? போன்ற ‘முடிவற்ற’ விவாதங்கள் நடந்து வருகின்றன. இவை இன்றைக்கு முடிவுறும் தலைப்புகளா என்ன! அப்படியான விவாதமே கூடாது என்பதல்ல என் கருத்து. அதை இப்போது நடத்திக்கொண்டிருப்பது துவேஷத்தை பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளவே உதவும் என்பதை விவாதிப்பவர்கள் உணரவேண்டும்.
மட்டுமல்லாமல், விவாதிக்கும் ஒரு தரப்பு இன்னொரு தரப்பினரை குறித்த அடிப்படை அறிவின்றி நடந்துகொள்வதை அவதானிக்க முடிகிறது. இது பிரச்னையை இன்னும் மோசமாக மாற்றிவிடுகிறது. வீண் விவாதமாகவும், ஒருவரையொருவர் பகைத்துக்கொள்ளவுமே இது வழிகோலுகிறது. போதாக்குறைக்கு இந்தப் பிரச்னையைக் கொண்டு குளிர்காய ஃபாசிஸ்டுகளே போலி கணக்குகள் மூலம் கருத்துருவாக்கம் செய்வதாகவும் சொல்கிறார்கள். இது எங்கு போய் முடியுமோ எனும் அச்சம் பலரிடம் ஏற்பட்டிருப்பதும் இங்கே சுட்டிக்கட்டத்தக்கது.
பெரியார் வழிவந்தவர்களாகத் தங்களைக் கூறிக்கொள்வோரின் நடவடிக்கையும் இந்த அளவுக்கு மோசமாக மாறும் என எதிர்பார்க்கவே இல்லை. எல்லா மதங்கள், கொள்கைகளின் பெயராலும் சில குழுக்கள் இப்படியான பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதுண்டு என்பதை நாம் அவர்களுக்குச் சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை. அப்படியிருக்க, ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாகப் பேசுவது, இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரமாக இந்த சந்தர்ப்பத்தை மாற்றுவது, முஸ்லிம்களை அந்த வன்செயலுக்குப் பொறுப்பேற்க நிர்பந்திப்பதுபோல பதிவிடுவது என்பதெல்லாம் முற்றிலும் அபத்தமானது.
இதை ஒரு பெரும்பான்மைவாதி செய்வதுகூட நமக்கெல்லாம் நெருடலாய் இல்லை. நேச சக்திகளாக நாம் கருதும் பெரியாரிஸ்டுகள், தமிழ்த் தேசியவாதிகள் அப்படி நடந்துகொள்வது வேதனையளிக்கிறது. அதிலும் குறிப்பாக, அந்த இயக்கங்களில் உள்ள சாதாரண தொண்டர்கள் இப்படியெல்லாம் நடந்துகொள்வதை விடவும், தலைமை தாங்குபவர்களே இப்படி நடந்துகொள்வது அதிர்ச்சியளிக்கிறது. பெரியார் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா எனும் கவலைதான் நமக்கு ஏற்படுகிறது.
முஸ்லிம் தரப்பும் அரசியல் பிரக்ஞையின்றி நடந்துகொள்வது எரியும் தீயில் எண்ணையை ஊற்றுவது போல் அமைகிறது. ஏதோ ஓர் அமைப்பினர் காவியையும் கருப்பையும் சமப்படுத்தி பேசியதாகச் சொல்கிறார்கள். அப்படி அபத்தமாக வாதிடுவது இந்துத்துவவாதிகளுக்கு கோல் போட்டுக்கொடுக்கும் வேலையாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.